வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

திருவாரூர் கௌரவக் கொலை: 3 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை

BBC :திருவாரூர் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த தம்பதி மற்றும் அவர்களது நாற்பது நாள் குழந்தையை 2014ஆம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பிரதான குற்றவாளிகளான சிவசுப்ரமணியன், ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நான்காவது நபரான மகேந்திரனுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இவர்களுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் எவ்வித சலுகையும் காட்டப்படக்கூடாது என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கீழமருதூரில் தலித் வகுப்பைச் சேர்ந்த அமிர்தவல்லி என்ற பெண்ணும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமணத்திற்கு பழனியப்பனின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால், அவர்கள் திருப்பூர் சென்று வசித்துவந்தனர். இவர்களுக்கு குழந்தை பிறந்ததும் மீண்டும் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று இந்தத் தம்பதி சொந்த ஊருக்கு வந்தபோது, அவர்களை வழிமறித்த பழனியப்பனின் சகோதரர்களும் அவர்களது நண்பர்களும் பழனியப்பன் தம்பதியையும் குழந்தையையும் வயல்வெளியில் உள்ள சேற்றில் அழுத்திக் கொலைசெய்தனர். சடலங்களும் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டன.
இந்த வழக்கில் பழனியப்பனின் சகோதரர்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியம், அவர்களது நண்பர்கள் மகேந்திரன், துரைராஜ் ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டது. குற்றவியல் சட்டம் தவிர, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் இதில் வழக்குத் தொடரப்பட்டது.
தஞ்சாவூரில் நடந்துவந்த இந்த வழக்கில் ஜனவரி 29ஆம் தேதியன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் நால்வரும் குற்றவாளிகள் என்று கூறியது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் பிப்ரவரி 2ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி கார்த்திகேயன் கூறினார். அதன்படி தீர்ப்பு விவரங்கள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக