புதன், 21 பிப்ரவரி, 2018

தலைமை செயலரை அடித்த இரண்டு ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் கைது .


மின்னம்பலம் "டெல்லி மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை இரண்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர். தலைமைச் செயலாளருக்கு ஏற்பட்ட காயம் குறித்து அருணா ஆஸப் அலி மருத்துவமனை நிர்வாகம் டெல்லி காவல் துறைக்கு மருத்துவ அறிக்கை அனுப்பியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்துவருகிறது. கடந்த 19ஆம் தேதி இரவு, முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் அம்மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ். அதன் பின், ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரகாஷ் ஜார்வால், அமானத்துல்லா ஆகியோர் தன்னைத் தாக்கியதாகத் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலிடம் புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநரிடம் விளக்கம் கேட்டது.

இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 20) இரவு டெல்லி சிவில் லைன்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார் அன்ஷு பிரகாஷ். அதில், முதலமைச்சர் கெஜ்ரிவால் முன்னிலையில் தன்னை இரண்டு எம்எல்ஏக்களும் தாக்கியதாகத் தெரிவித்தார். இதனையடுத்து, நேற்றிரவு உடனடியாக பிரகாஷ் ஜார்வால் கைது செய்யப்பட்டார். இன்று காலையில் அமானத்துல்லா கான் போலீசில் சரணடைந்தார். ஆனால், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கெஜ்ரிவால் இல்லத்துக்குத் தான் செல்லவே இல்லை என்று கூறியுள்ளார் அமானத்துல்லா கான். ஆம் ஆத்மி அரசு மீது பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்சிங்.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆய்வு செய்த டெல்லி அருணா ஆஸப் அலி மருத்துவமனை, தனது அறிக்கையை டெல்லி போலீசாருக்கு அனுப்பியுள்ளது. அதில், அவரது முகத்தில் காயங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இது சாதாரண காயம்தான் என்றும், அன்ஷு பிரகாஷுக்கு வலி நிவாரணி மருந்துகள் கொடுத்திருப்பதாகவும், அவரது உடம்பில் வேறெங்கும் காயம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கழுத்து, காதுகளின் பின்புறம், வலது கண்ணின் பின்புறம் ஆகிய இடங்களில் வலி இருப்பதாகத் தனது புகாரில் அன்ஷு பிரகாஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக