வியாழன், 15 பிப்ரவரி, 2018

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல்


tamilthehindu :பிரான்ஸில் இருந்து வாங்கப்படவுள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்துள்ளதே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர்விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு சென்று இருந்தார்.
அப்போது, பிரான்ஸ் அரசுடன் பிரதமர் மோடி புதிதாக ஒரு ஒப்பந்தம் செய்தார். உடனடியாக இயக்கும் வகையில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தார்.

இந்த ஒப்பந்தத்தில் அரசு நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமானத்தில் பாகங்கள் இணைக்கும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக மோடியின் ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது..
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. நரேஷ் அகர்வால், ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு ஏன் அறிவிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “ ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து பொதுப்படையாக அறிவிக்க முடியாது. இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அடங்கி இருக்கின்றன” எனத் தெரிவித்து விலை விவரத்தை கூற மறுத்துவிட்டார்.
ஆனால், இதே ரபேல் போர் விமானம் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியபோது, கடந்த நவம்பர் மாதம் நிர்மலா சீதாராமன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து எந்த விஷயத்தையும் அரசு பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது. அரசு எதற்கும் வெட்கப்படவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தம் நியாயமானது என்பதை எப்போதும் நிரூபிக்கத் தயார் “ எனத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாரமனின் பதிலையடுத்து, காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் முன் இன்றுகாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ பாதுகாப்பு துறை அமைச்சர் முதல்முறையாக, ரபேல் போர் விமானத்தின் விலை குறித்த விவரங்களை, தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். குஜராத் தேர்தலின்போது, நான் பேசி இருந்தேன். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று கூறி இருந்தேன்.
பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பிரான்ஸ்க்கு சென்று, தனிப்பட்ட முறையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பேசி முடித்துள்ளார். இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும்.
ஆனால், பாதுகாப்பு துறை அமைச்சரோ ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் சொல்லமாட்டோம் எனத் தெரிவிக்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம் ரபோல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக