திங்கள், 19 பிப்ரவரி, 2018

அனைத்து கட்சி கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு ..

tamiloneindia :எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 23 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானது.அந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள்வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரை 14.75 டிஎம்சி குறைத்து, 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. அந்த 14.75 டிஎம்சி நீரும் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த விவசாயிகள், தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டிவந்தனர்.மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அடுத்த 6 வாரங்களில் அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தநிலையில், தீர்ப்பு குறித்து விவாதிக்கவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யவும் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 23 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அதற்கு ஒருநாள் முன்னதாக அதாவது பிப்ரவரி22 ஆம் தேதி முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் இன்று (பிப்ரவரி 19) முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "அம்மாவின் அரசு எப்போதுமே வேளாண் மக்களின் நலனைக் காக்கின்ற அரசு,காவிரி பிரச்னையில் தமிழக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தியது மட்டுமில்லாமல் தன்னையே வருத்தி 22 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார் அம்மா. அவரைப்போலவே தமிழக அரசு அம்மாவின் பாதையில் செயல்படுகிறது. கடந்த 16 ஆம் தேதி காவிரி குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது, 464 பக்க தீர்ப்பினை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்து அறிக்கை முதல்வர் வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று முதல்வர் தலைமையில், தலைமைச் செயலாளர், காவிரி வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவரிடம் ஆலோசித்து அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தக் கூட்டமானது வரும் 22 ஆம் தேதி நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு குறித்த கேள்விக்கு, "முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்ற நடைமுறையை அறிந்துதான் ஸ்டாலின் இவ்வாறு அரசியல் செய்கிறார். அவரது செயல் தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் எடுபடாது" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, "முதல்வரின் வேண்டுகோள்படி மனமாச்சரியங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு நமது உரிமைகளை பெறுவதற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். கட்சிகள் மட்டுமே கலந்து கொள்ள இயலும், விவசாய சங்கங்கள் கலந்து கொள்ள இயலாது" என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக