புதன், 28 பிப்ரவரி, 2018

பிணங்களை மையத்தில் வைக்க அனுமதி எங்கு பெற்றீர்கள்?- பாதிரியார் மழுப்பல்

tamilthehindu :ஆம்புலன்ஸில் ஏற்றிசெல்லப்பட்ட பிணம், காய்கறி, முதியவர்(கோப்புப் படம்), பாதிரியார் தாமஸ்- படம்: எல்.சீனிவாசன் t; பாலமேஸ்வரத்தில் முதியோர் மையத்தில் பிணங்களை வைப்பதற்கான அனுமதியை எங்கு பெற்றீர்கள் போன்ற செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பாதிரியார் ஜோசப் திணறினார்.
கேரளாவைச் சேர்ந்தவரான தாமஸ், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் ஏழு ஆண்டுகளாக சேவை மையத்தை நடத்திவருகிறார். ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதித்தோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தன் சேவை மய்யத்தில் வைத்து பராமரித்துவருகிறார்.

 
இந்த சேவை மையத்துக்குள் வந்த அவர்கள் பிறகு எப்போதுமே வெளியே செல்ல முடியாது, வெளியே போகவும் விட்டதில்லை என்ற புகார் எழுந்தது. இந்த மய்யத்தில் இறந்த மனித உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் கான்கிரீட் அடுக்குகளில் போட்டு வைத்திருக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இதுவரை 1690 பிணங்களை வைத்துள்ளதாக பாதிரியார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு சேவை மய்யத்தின் உரிமம் முடிந்து போனது. அதற்குப் பிறகும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் அதை பாதிரியார் தாமஸ் இயக்கி வந்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதியன்று காலை 11 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு அந்த சேவை மய்யத்திற்குச் சொந்தமான ஒரு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது.
அந்த ஆம்புலன்ஸில் இருந்த ஒரு மூதாட்டி, ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’என்று அலறிக்கொண்டே சென்றார். அதைப் பார்த்த பைக்கில் சென்ற இளைஞர் பிரபு அந்த ஆம்புலன்சை மறித்தார். அதன் ஓட்டுநர் ராஜேஷுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த மூதாட்டியை விசாரித்து, ஆம்புலன்சையும் சோதனை செய்தனர்.
மூதாட்டி திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்பதும், அது போலியான ஆம்புலன்ஸ் என்றும் தெரிந்தது. ஆம்புலன்சின் உள்ளே சுயநினைவில்லாத நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும் கிடந்தார். அவர் அருகே ஒரு சடலம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. காய்கறி மற்றும் அரிசி மூட்டைகளும் இருந்தன.
இது குறித்த பொதுமக்கள் புகாரின் பேரில் உடனடியாக மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வு செய்த அறிக்கையை ஆட்சியர் பொன்னையாவிடம் அளித்தனர்.
அதன் பேரில் உடனடியாக 73-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வேறு அரசு உதவி பெறும் கருணை இல்லங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட பாலமேஸ்வர முதியோர் இல்லம் இரண்டு நாட்களுக்குள் இழுத்து மூடப்படும், அதன் உரிமையாளர் தாமஸ் மீது புகார் அளிப்பபவர்கள் அளிக்கலாம், அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பாதிரியார் தாமஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 இறக்கும் நிலையில் உள்ள முதியவர்களை மீட்டு அவர்களை பராமரித்து அவர்கள் இறந்தால் காப்பகத்திலேயே கான்கிரீட் கட்டடத்தின் அடுக்குப்பெட்டிக்குள் வைத்துவிடுவதாக பேட்டி அளித்தார். தான் இதை சேவையாக செய்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த 20-ம் தேதி அன்று காய்கறி வாங்கிச்செல்ல டிரைவர் சைதாப்பேட்டைக்கு வாகனத்தை கொண்டுச்சென்றதாகவும், பின்னர் தங்களது தாம்பரம் இல்லத்தில் ஒரு மூதாட்டி இறந்ததால் அவரது பிணத்தையும், ஒரு வயதானவரையும், கோட்டூர் புரம் போலீஸார் மீட்ட ஒரு மூதாட்டியையும் அந்த வாகனத்தில் ஏற்றி வந்ததாக தெரிவித்தார்.
அதுதான் தாங்கள் செய்த தவறு என்று தெரிவித்த பாதிரியார் மற்றபடி தங்களைப்பற்றி ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் பாதிரியாரிடம் சில கேள்விகளை எழுப்பினர். காய்கறி வாகனத்தில் பிணத்தை எப்படி ஏற்றலாம், மூதாட்டி வரமறுத்தவரை எப்படி வலுக்கட்டாயமாக கொண்டுச்செல்லலாம், பிணத்தை ஏற்றிச்செல்ல ஓட்டுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது, முதியவர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார் போன்ற கேள்விகளை வைத்தனர்.
காய்கறி வாகனத்தில் தவறாக தனது ஓட்டுநர் ஏற்றிவிட்டார் என பாதிரியார் தெரிவித்தார். பிணத்தை தங்களுக்கு சொந்தமான இல்லம் என்பதால் அவர் ஏற்றிவிட்டார். முதியவரை ஒரு இல்லத்திலிருந்தும், மூதாட்டி அன்னம்மாளை கோட்டூர்புரம் போலீஸார் ஏற்றி அனுப்பியதாக தெரிவித்தார்.
இறந்தவர்களை கான்கிரீட் அடுக்குகளில் வைக்க எங்கு அனுமதி பெற்றீர்கள் என்ற கேள்விக்கு பாதிரியாரால் பதிலளிக்க முடியவில்லை. மாட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்றோம் என்று தெரிவித்தார். காவல்துறைக்கும் மயானத்துக்கும் என்ன சம்பந்தம் அவர்கள் எப்படி அனுமதி கொடுக்க முடியும் என்ற கேள்விக்கு, மாவட்ட எஸ்பி மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய பரிந்துரை கடிதத்தை காட்டி இதுதான் அனுமதி கடிதம் என்று மழுப்பினார்.
மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தாரா? அதற்கான சான்றிதழ் எங்கே என்ற கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. உங்களது கிருஸ்துவ மிஷன் உங்களுக்காக ஏன் உதவிக்கு வரவில்லை என்ற கேள்விக்கும் பாதிரியார் தாமஸிடம் பதிலில்லை. சாதாரணமாக ஒரு போலி லெட்டர் பேடில் ஒருங்கிணைந்த கிருஸ்துவ ஐக்கிய சங்கம் என்ற பெயரில் முதல்வருக்கு அளித்த புகார் கடிதத்தை செய்தியாளர்களுக்கு அளித்தனர்.
இந்த சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? பதிவு எண் எங்கே என்று கேட்டபோது அதற்கும் பதிலில்லை. தான் 67 வயது முதியவர் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. இது சேவை என்று தெரிவித்தார். உங்கள் சேவை முறையாக இருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை, தற்போது மய்யத்தை இழுத்து மூட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதற்காக நீங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளீர்களா என்ற கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. முடிவில் தாங்கள் குற்றமற்றவர்கள் தங்கள் நோக்கத்தில் சேவை மட்டுமே உள்ளது என்று பாதிரியார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக