வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

விஜய் சேதுபதி ... புழுதியை கிளப்பிக்கொண்டு ஒரு சுப்பர் குதிரை வருகிறது ... தமிழ்த்திரைக்கு ஒரு நிஜ சுப்பர் ......

மின்னம்பலம் :விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வியாபாரம் உள்ள கதாநாயகனாக மாறி இருக்கிறார்.
துணை நடிகராக நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி 2010இல் வெளியான ‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ஐம்பது பேரை அடித்துத் துவைக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாக பில்டப் கொடுக்கும் நடிகர்கள் மத்தியில், இயக்குநர் கொடுக்கும் கதாபாத்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு கவனம் ஈர்த்தவர் விஜய் சேதுபதி. தமிழ் நடிகர்கள் தங்கள் இமேஜ் பாதிக்கும் என்பதற்காக நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களைப் புறக்கணிக்காது, தன் நடிப்பை மட்டும் நம்புகிற நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரமானது இல்லை.
2017இல் ரிலீஸ் ஆன ‘கருப்பன்’ படம் தமிழ்நாடு உரிமை மட்டும் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரமான படம். அதை வாங்கியவருக்கு குறைந்த அளவு நஷ்டம் ஏற்பட்டது.

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று (02.02.2018) வெளியாகியிருக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. அவருடன் கௌதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார், பி.ஆறுமுக குமார் இயக்கி உள்ளார்.
7ஜி என்டர்டெயின்மென்ட், அம்மா நாராயணா புரொடக்‌ஷன் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து மற்றும் இயக்குநர் ஆறுமுக குமார் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
கெளதம் கார்த்திக் காதலிக்கும் பெண்ணை விஜய் சேதுபதி கடத்திவிடுகிறார். அதனால் பத்துக்கும் மேற்பட்ட கெட்அப்களில் படத்தில் வலம் வருகிறார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதி நடித்து வெளியான படங்கள் தமிழ்நாட்டில் அதிகபட்சம் ரூ.8 கோடிக்கு மேல் வருமானத்தைக் கொடுத்தது இல்லை.
இருப்பினும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தமிழ்நாடு உரிமை ரூ.10 கோடிக்கு அவுட்ரேட் அடிப்படையில் விற்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று அதிக திரைகளில் வெளியாகும் விஜய் சேதுபதி படம் இதுதான். தமிழ்நாட்டில் மட்டும் 350 தியேட்டர்கள் வரை திரையிடப்பட ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் கிளாப் போர்ட் புரொடக்‌ஷன் வி.சத்யமூர்த்தி கூறியதாவது: இதுவரை நான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தைப் பார்க்கவில்லை. விஜய் சேதுபதி மீது முழு நம்பிக்கை இருக்கிறது. விஜய் சேதுபதி - கெளதம் கார்த்தியின் இந்தப் புதிய கூட்டணி எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்கிறார்.
குடும்பங்கள் விரும்பும் ஹீரோக்கள் பட்டியலில் விஜய் சேதுபதிக்கு இடம் இருந்தாலும், இவர் பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும்போது கிடைக்கும் வருமானம் தனியாக வருவதில்லை என்கிற குறை விநியோகஸ்தர்கள் மத்தியில் உள்ளது. அந்தக் குறையை இந்தப் படம் போக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக