வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஓடிஷா தலைமை செயலர் பாண்டியன் ஐ ஏ எஸ் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்


தினமணி :கடந்த சனிக்கிழமை ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த
சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகத் திறம்பட செயல்படுகிறார் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்திய அரசுப் பணி அதிகாரியான வி. கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருக்கிறது. மதிற்சுவரைத் தாண்டிச் சென்று பூந்தொட்டிகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள். சாணத்தைக் கரைத்து வீட்டின் சுவரில் ஊற்றி இருக்கிறார்கள்.
இது ஏதோ அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறிவிடலாம். ஆனால் திட்டமிட்டு ஓர் அரசியல் கட்சியால், அதுவும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களமிறங்கி இருக்கும், மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியால் இந்த வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

முதலிலேயே ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்றால் இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் கொடியுடன், புவனேசுவர் நகர பாஜக தொண்டர்கள் முதல்வரின் தனிச்செயலாளரான கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டின் முன் திரண்டு, தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். அனைத்துமே ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு செய்தியாக்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்? தமிழகத்தில் மேலூரைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது ஒடிஸா மாநிலத்தில் பணிபுரியும் இந்திய அரசுப் பணி அதிகாரி அவர். இவரது திறமைக்கும் நேர்மைக்கும், ஒடிஸாவில் பல்வேறு சம்பவங்களும், செயல்பாடுகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன.
விஜயந்த் பாண்டே என்பவருக்கு, ஒடிஸா மாநிலத்தைச் சேராத தமிழர் ஒருவர் மீது முதல்வர் இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதில் பொறாமை ஏற்பட்டதில் வியப்பில்லை. விஜயந்த் பாண்டே இப்போது பாஜகவில் சேர்ந்து விட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் பாண்டியனின் வீட்டில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. தேசியக் கட்சியான பாஜக இப்படியொரு செயலில் ஈடுபட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், அடுத்த ஆண்டு ஒடிஸாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுபவருமான தர்மேந்திர பிரதான் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது. 'ஒடிஸா மக்களின் வரிப்பணத்திலிருந்து மாத ஊதியம் பெறும் அரசு ஊழியரான பாண்டியன், ஒடிஸா மக்கள் போராடத் தயங்கமாட்டார்கள் என்று கருதிவிட வேண்டாம்' என்று அவர் கூறி இருப்பது இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதாக அல்லவா அமைந்திருக்கிறது?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வேற்று மாநிலத்தவர்கள் இந்திய அரசுப் பணி அதிகாரிகளாகவும், காவல் துறை உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் தலைமைச் செயலாளராக எல்.கே. திரிபாதியும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக ஜே.கே. திரிபாதியும், உளவுத் துறைத் தலைவராக அமரேஷ் பூஜாரியும் இருந்திருக்கிறார்கள். அந்த மூன்று பேருமே ஒடிஸாக்காரர்கள். தமிழரல்லாதவர்கள் என்பதால் அவர்கள் தவிர்க்கப்படவோ ஒதுக்கப்படவோ இல்லையே...
தற்போது ஒடிஸாவில் தமிழகத்தைச் சேர்ந்த 11 இந்திய அரசுப் பணி அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்களது திறமையால் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். மேலூர் வெள்ளையாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன் திருமணம் செய்து கொண்டிருப்பது ஒடிஸாவைச் சேர்ந்த சுஜாதா என்பவரை. அவரும்கூட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்.
ஒடிஸாவில் கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வராகத் தொடர்பவர் நவீன் பட்நாயக்தான். அதுமட்டுமல்ல, தேர்தலுக்குத் தேர்தல் பிஜு ஜனதா தளத்தின் சட்டப்பேரவை பலம் அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. நவீன் பட்நாயக்கின் வெற்றிக்குக் காரணம், அவர் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழரான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சிறப்பான நிர்வாகம்தான் என்பது அனைவருக்குமே தெரியும்.
வர இருக்கும் பிப்ரவரி 24-ஆம் தேதி பிஜெபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்க இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, வெற்றி பெறாவிட்டாலும் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திலாவது வந்து விட வேண்டும் என்று துடிக்கிறது. அதற்காக, திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டின் மீதா தாக்குதல் நடத்துவது? பாண்டியனை முதல்வர் நவீன் பட்நாயக்கிடமிருந்து அகற்றுவதால் பிஜு ஜனதா தளம் பலவீனமடைந்துவிடும் என்றா பகல் கனவு காண்பது?
மாநில உணர்வுகளின் அடிப்படையில் தோன்றிய திமுக, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், அகாலி தளம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள்கூட, இந்திய அரசுப் பணி அதிகாரிகள் மாநிலங்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பேசியதில்லை. தேசியக் கட்சியான பாஜக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, இப்படி மாநில உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறதே, அதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக