வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கலைஞர் பேச்சு பயிற்சி அளிக்கப்படும் .. ,பேரன் மகிழ்நன் தாத்தாவுடன்..

tamilthehindu :திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தொண்டையில் பொறுத்தப்பட்டிருந்த ட்ரக்யோஸ்டமி குழாய் அகற்றப்பட்டு சிறுகுழாய் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் தமிழக அரசியலில் முக்கிய மாறுதல் ஏற்பட்டது. இரண்டு முக்கிய சக்திகளான ஜெயலலிதா மறைவு, கருணாநிதி ஓய்வு காரணமாக அரசியலில் பெரிய அளவில் வெற்றிடம் ஏற்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கையாக சுவாசிக்க ட்ரக்யோஸ்டமி குழாய் பொறுத்தப்பட்டது.

இதனால் பேசுவது தடைப்பட்ட நிலையில் நினைவும் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டாக ஓய்வெடுத்து வந்த கருணாநிதி மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வருகிறார். நல்ல உடல்நிலையுடன், நினைவும் அனைவரையும் அடையாளம் கண்டுக்கொண்டு விசாரிப்பது, தகவல்களை கேட்டுக்கொள்வது போன்று நல்ல நிலையில் உடல்நிலை தேறி வருகிறது.
சமீபத்தில் முரசொலி அலுவலகம், அறிவாலயம் சென்ற கருணாநிதி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். கருணாநிதி இல்லாத தமிழக அரசியலில் தலையெடுத்தவர்கள் எல்லாம் புதுப்புது கருத்து தெரிவிப்பதும் அதுவே சாசனம் போல் பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது என்று மூத்த திமுக நிர்வாகி ஒருவர் கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு பல் சிகிச்சையும், கண் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கருணாநிதி பேசுவதற்கு தடையாக இருப்பது அவரது தொண்டையில் பொறுத்தப்பட்டுள்ள ட்ரக்யோஸ்டமி குழாய். அதனால் அந்த குழாயை அகற்ற சில மாதங்களுக்கு முன் முயற்சி செய்தனர். ஆனால் மீண்டும் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படவே குழாய் பொறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் அவரது உடல்நிலை சீரடைந்து வருவதை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன், அவரது தொண்டையில் பொறுத்தப்பட்டுள்ள குழாய் அகற்றப்பட்டு சிறிய குழாய் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் பேசும் பயிற்சியும் எடுக்க உள்ளார்.
சிறிது நாட்கள் கழித்து அந்த சிறிய குழாய் மீண்டும் எடுக்கப்பட்டு அதைவிட சிறிய குழாய் பொறுத்தப்படும். பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுவதை அடுத்து விரைவில் பழைய திமுக தலைவர் கருணாநிதியாக தொண்டர்களை சந்திக்கும் காலம் வரும் என நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக