வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

சித்தராமையா "மகிழ்ச்சி" .. பெங்களூரு குடிநீருக்காக உச்ச நீதிமன்றத்தை வளைத்த தீர்ப்பு?

தினகரன் :பெங்களூரு: உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரு நகர குடிநீர் பிரச்சனை தீரும் என்றும் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காவிரி விகவாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு 

tamilthehindu :பெங்களூர் குடிநீர் தேவைக்காக உச்சநீதிமன்றத்தை வளைத்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளார்கள்:சர்வதேச தரத்தையும், முக்கியத்துவத்தையும் பெங்களூரு பெற்று வருவதாலும், மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டும், சமகாலத்தில் மையமான பகுதியில் பெங்களூரு நகரம் இருப்பதாலும் கூடுதலாக 4.75 டிஎம்சி நீர் ஒதுக்குகிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

அதேசமயம், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் கூறப்பட்ட விஷயங்களை ஏற்கமறுத்துவிட்டனர்.< கர்நாடக மாநிலத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி நிதி நீரை பங்கீட்டுக் கொள்வதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.

இந்த 192 டிஎம்சி நீர் போதாது கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி கர்நாடக அரசும் மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணை தொடங்கியது, 28 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், அமிதவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து பில்லிகுண்டு அணையில் இருந்து திறந்துவிட வேண்டும் எனத் தெரிவித்தது. அதேசமயம், கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.
2007ம் ஆண்டு காவிரி நிதிநீர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒருபகுதி காவிரி நதி நீர் படுகையில் அமைந்து இருப்பதாலும், 50 சதவீத குடிநீர் தேவையை நிலத்தடி நீர் மூலமே பெற்றுக்கொள்ளும் என்பதாலும், கர்நாடகத்துக்கு அப்போது டிஎம்சி அளவைக் குறைத்தது.
இந்த தீர்ப்பில் கடந்த 2007ம் ஆண்டு காவிரி நிதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை.
மாறாக, பெங்களூரு வேகமாக வளர்ந்துவரும் நகரமாக இருக்கிறது, மக்களின் தேவை அதிகரிப்பு, செம்மையாகி வருகிறது என்பதை காரணமாக காட்டி நீதிபதிகள் கூடுதலாக டிஎம்சி நீரை பெங்களூரு நகருக்கு ஒதுக்கியுள்ளனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பில் “ காவிரி நிதிநீர் பங்கீடு தீர்ப்பாயம், மக்களின் அடிப்படை குடிநீர் தேவையை கணக்கில் எடுக்கவில்லை, குடிநீர் தேவை என்பது நிலையற்றது. உலக அளவில் பெங்களூரு நகரம் பெற்றுவரும் முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது. அந்த நகரம் நாளுக்கு நாள் அதிநவீனமடைந்து, செம்மைபட்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் மையப் புள்ளியாகவும், பெரும் வர்த்தக நகராகவும் உருப் பெற்று வருகிறது. நாட்டின் நரம்பு மண்டலமாக பெங்களூரு நகரம் மாறிவருவதால், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் உயர்ந்து வருகிறது.
ஆதலால் மக்களின் தேவையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து 4.75 டிஎம்சி நீர் கூடுதலாக ஒதுக்கீடு செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதன்மூலம் காவிரி நீதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் கர்நாடக மாநிலத்துக்கு அளித்த 270 டிஎம்சி நீரைக் காட்டிலும் கூடுதலாக 14.75டிஎம்சி நீர் ஒதுக்கப்பட்டது. இதில் 10 டிஎம்சி நீர் தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு நன்றாக இருப்பதால், அந்த பலன் கர்நாடக மாநிலத்துக்கு அளிக்கப்பட்டது.
மேலும், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் பெங்களூரு நகரம் தனது குடிநீர் தேவையில் 50 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் பெற்றுக்கொள்ளும் என்பதை நீதிபதிகள் ஏற்கவில்லை.
இப்போதுள்ள நிலையில், பெங்களூகு நகரம், புறநகரத்தில் வசிக்கும் மக்களுக்கு 33 டிஎம்சி நீர் இருப்பதுதான் போதுமானதாக இருக்கும். ஆனால், தீர்ப்பாயமோ 17.22 டிஎம்சி போதுமானதாகத் தெரிவித்தது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
பெங்களூரு நகர மக்களின் தேவைக்கு மட்டும் 8.77 டிஎம்சி நீர் தேவைப்படும். இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் 30 டிஎம்சி நீர் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு பெற்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகில் விரைவாக நீர் தீர்ந்துவிடும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரையும் பட்டியலிட்டு இருந்தது. அதற்கு ஏற்றார்போல், அந்த சிக்கலில் இருந்து மீளும் வகையில் பெங்களூரு நகருக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி நீர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
(பிடிஐ தகவல்களுடன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக