வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

சமஸ்கிருதத்தைவிடப் பழமையானது தமிழ்தான்: பிரதமர்!

சமஸ்கிருதத்தைவிடப் பழமையானது தமிழ்தான்: பிரதமர்!
மின்னம்பலம்: சமஸ்கிருதத்தைவிடப் பழமையான
மொழி தமிழ்தான் என்றும், தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
அடுத்த மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், டெல்லியிலுள்ள தல்காட்டோரா விளையாட்டு அரங்கத்தில் இன்று (பிப்ரவரி 15) தேர்வு தொடர்பாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் பரீக்‌ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், நீங்கள் இந்தியாவின் பிரதமரிடம் பேசவில்லை, ஒரு நண்பரிடம் பேசுகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, மனஅழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ளத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கேள்வி கேட்ட மாணவர்களுக்கும் பதிலளித்தார்.

அதில் ஒரு மாணவர் எழுந்து நாட்டின் தொன்மையான மொழி எது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பிரதமர் "தமிழ்தான் மிகப் பழமையான மொழி. சமஸ்கிருதத்தைவிடப் பழமையான மொழி தமிழ்தான். இது பலருக்குத் தெரியாது. அழகானவற்றை தன்னுள் கொண்டுள்ள மொழி தமிழ். தமிழில் எனக்கு வணக்கம் என்று மட்டும்தான் பேசத் தெரியும். அம்மொழியில் பேச முடியவில்லையே என்று நான் வருத்தப்படுவதுண்டு" என்று புகழாரம் சூட்டினார்.

நிகழ்வு முழுவதும் மோடி இந்தியில்தான் பேசினார். இதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர், மொழிப் பிரச்னையால் இந்தியைத் தவிர வேறு மொழியில் பேசாத காரணத்திற்காக வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மாணவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும் தன்னுடைய பேச்சு மற்றும் கலந்துரையாடல் ஆகியவை மாணவர்களுக்கு அவரவர் மொழிகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக