வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

திருவாரூரில் மருத்துவ மாணவர் தற்கொலையா .. கொலையா ? பெற்றோர் சந்தேகம்!

திருவாரூரில் மருத்துவ மாணவர் தற்கொலை!மின்னம்பலம் :திருவாரூரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த மாணவர் சுந்தரவேல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாமாண்டு எம்பிபிஎஸ் படித்துவந்தார். இவர் 2 வருடங்களாகக் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்துவந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 9) காலை, கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களும் வகுப்புக்குச் சென்றுவிட்ட நிலையில், சுந்தரவேல் மட்டும் வகுப்புக்குச் செல்லாமல் விடுதி அறையில் தனியாக இருந்துள்ளார். பிறகு, சுந்தரவேல் அந்த அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்

மாணவர்கள் சிலர் வகுப்பு இடைவேளையின்போது விடுதி அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, சுந்தரவேல் அவரது அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
சுந்தரவேலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சுந்தரவேலின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது.
சுந்தரவேலின் தற்கொலை குறித்து, திருவாரூர் தாலுகா காவல் துறையினர், அவரது நண்பர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக