செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ஒருதலைக் காதல்: தீ வைக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

ஒருதலைக் காதல்: தீ வைக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!மின்னம்பலம் : ஒருதலைக் காதலால் பெட்ரோலை ஊற்றித் தீ வைக்கப்பட்ட சிறுமி சித்ரா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நடுவக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ரா(15). அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி முடிந்து கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாலமுருகன் மாணவி மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தார்.
அப்போது தீயில் கருகிய மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவி மீது தீ வைத்துவிட்டுத் தலைமறைவான பாலமுருகனைக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையில் தனிப்படையினர் தேடிவந்தனர். பிப்ரவரி 17ஆம் தேதி காலை பாலமுருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 12 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, இன்று பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பு அந்த குடும்பத்தினரைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சித்ராவுக்குத் தொந்தரவு கொடுத்த காரணத்திற்காகக் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி பாலமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளிவந்த அவர் சித்ராவை பழி வாங்கும் எண்ணத்தில் இவ்வாறு செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக