வியாழன், 8 பிப்ரவரி, 2018

மோடியை பார்த்து ரேணுகா சௌத்திரி அடக்க முடியாமல் சிரித்தார் ... ...

கேலிச் சிரிப்பு:பெண் எம்பியை விமர்சித்த மோடிமின்னம்பலம் :நாடாளுமன்றத்தில்,  பெண் எம்பியின் கேலிச் சிரிப்பை விமர்சித்துப் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பிரதமர் மோடி நேற்று(பிப்ரவரி 7) உரையாற்றினார். அப்போது, “கடந்த 1998ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனித்துவமிக்க தேசிய அடையாள அட்டையை (ஆதார்) வழக்க வேண்டும் என்ற யோசனையை முதலில் முன்வைத்தார். ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு தாங்கள்தான் ஆதார் அட்டைத் திட்டத்தை உருவாக்கியதாகப் பெருமை தேடிக் கொள்கிறது” என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பியான ரேணுகா சௌத்ரி மிகச் சத்தமாகச் சிரித்தார்.

உடனடியாக, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நயுடு, அவரிடம், “உங்களுக்கு எதுவும் பிரச்சினை என்றால், தயவுசெய்து மருத்துவரிடம் செல்லுங்கள்” என அறிவுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, “அவர் சிரிப்பதைத் தடுக்க வேண்டாம். ராமாயணம் தொடருக்குப் பிறகு இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை நாம் கேட்க முடிகிறது” என்று விமர்சித்தார்.
ராமாயணத்தில் தீய கதாபாத்திரம் மட்டுமே சத்தமாகச் சிரிப்பதாகக் காட்டப்படும். அதனை நினைவூட்டும் விதமாக மோடி பேசியதாகக் கூறப்படுகிறது.
மோடிக்குப் பேச்சுக்குப் பின்னர், பாஜக இணையதளப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா, ராமாயணத்தில் சூர்ப்பனகை சத்த்தமாகச் சிரிக்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். இது
மோடியின் பேச்சுக்கு என்ன அர்த்தம் என்பதைத் தெளிவாக்கியது.
இது தொடர்பாக எ.என்.ஐ. ஊடகத்திடம் அளித்த பேட்டியில் ரேணுகா சௌத்ரி, “ஒரு காலத்தில் ஆதார் திட்டத்தை எதிர்த்து மோடி நீண்ட உரை நிகழ்த்தியுள்ளார். தற்போது, ஆதார் அவர்களின் திட்டம் எனக் கூறுகிறார். அவரது இந்தப் பேச்சு எனக்குச் சிரிப்பை மூட்டியது. அதனால் சிரித்தேன். பிரதமர் மோடி எனக்கு எதிராகத் தனிப்பட்ட விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு பிரதமர் எப்படி இவ்வாறு பேசலாம். அவரது கலாச்சாரம் எத்தகையது என்பதை இது காட்டுகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியில் இவ்வாறு பேசியிருந்தால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பாலினத்தைத் தனது பாதுகாப்பாக ரேணுகா பயன்படுத்துவது சரியல்ல என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தச் சம்பவத்தின்போது நானும் இருந்தேன். பிரதமர் மோடி குறித்து அவரது அவதூறான கருத்துகளை நான் கேட்டேன். அவரது இழிவான பேச்சுக்கு நகைச்சுவையான விதத்தில் பதிலளிக்கப்பட்ட நிலையில், பாலினத்தை அவர் கேடயமாகப் பயன்படுத்துவது நியாயமா” என்றும் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக