வியாழன், 22 பிப்ரவரி, 2018

டிஜிடல் படங்களை அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

டிஜிட்டல் நிறுவனங்களால் திரையுலகுக்கு என்ன பிரச்சினை?மின்னம்பலம் : இராமானுஜம் : தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கிடையில் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப்பில் வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட அதிகபட்சக் கட்டணத்தை அந்நிறுவனங்கள் வசூலித்துவருவதைக் கைவிடுமாறும், கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் நீண்ட காலமாகக் கேட்டுவந்தனர்.
இது சம்பந்தமாகப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. டிஜிட்டல் நிறுவனங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள மறுத்துவருகின்றன. இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்களை ரீலீஸ் செய்ய வேண்டாம் எனத் தன் உறுப்பினர்களுக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்களுடன் என்ன பிரச்சினை, தயாரிப்பாளர்கள் தரப்பு நியாயங்கள் என்ன ஆகியவை குறித்து உரிய விளக்கங்களுடன் ஆதாரபூர்வமாக எஸ்.ஆர். பிரபு ( தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர்) தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதற்கு நேரடியாக பதில் சொல்வதைத் தவிர்த்து, தமிழ்ப் படத் தயாரிப்புத் துறை நலிவடைந்ததற்கும், நஷ்டம் தொடர்வதற்கும் காரணம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள்தான் என்று ஆடியோ பதிவு ஒன்றைப் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியன் வெளியிட்டிருக்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரபு வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில், “டிஜிட்டல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக தயாரிப்பாளர்களுக்கு புரியும் மொழியில் பதிவை வெளியிட்டேன். இதில் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத திருப்பூர் சுப்பிரமணியன் சம்மன் இல்லாமல் ஆஜராக வேண்டிய அவசியம் என்ன?” எனக் கேட்டிருக்கிறார்.
இந்தப் பிரச்சினை முடிந்த பின் வியாபாரத்திற்கு ஏற்ப சம்பளம், விகிதாச்சார அடிப்படையில் நடிகர்களுக்குச் சம்பளம் கொடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சமீப காலமாகத் தமிழ் சினிமாவில் விவாதிக்கப்பட்டுவரும் டிஜிட்டல் நிறுவனம், இதனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? பிலிமில் திரையிடப்பட்டு வந்த சினிமா டிஜிட்டலுக்கு எப்போ மாறியது? தனக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் திருப்பூர் சுப்ரமணியன் தலையிடுவது ஏன்?
முழு விவரங்களுடன், சுவாரசியமான தகவல்களுடன் நாளை முதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக