வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஜெயா மரணம் உண்மைகள் மூடப்படுகிறது ... மோடிக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை!

விகடன் :ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள் சாட்சியமளித்தவர்கள். மீண்டும் சாட்சியமளிப்பதில் எங்களுக்குத் தயக்கமாக இருக்கிறது என்கிற ஆதங்கக் குரலும் சாட்சிகளிடம் எதிரொலிக்கின்றன.&ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை அமைத்தது எடப்பாடி அரசு. கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த ஆணையம், தற்போது விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. அரசு அதிகாரிகள், டாக்டர்கள், போயஸ்கார்டனில் இருந்த சசிகலா உறவினர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் ஆறுமுகசாமி.;


அந்த வகையில், ஜெ.ஆட்சியில் உயரதிகாரிகளாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமமோகனராவ், டாக்டர்கள் பாலாஜி, சாமிநாதன், சசிகலா உறவினர்களான கிருஷ்ணப்பிரியா, டாக்டர் சிவக்குமார், போயஸ் கார்டனில் ஜெ.வின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக், தீபாவின் கணவர் மாதவன்  உட்பட 17-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளித்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவுசெய்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ""எனது பதிலை தாக்கல் செய்ய வசதியாகவும் சம்பந்தப்பட்டவர்களை குறுக்கு விசாரணை நடத்தவும் எனக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும், குற்றம்சாட்டிய நபர்களின் பெயர்களையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்'' என தமது வழக்கறிஞர் மூலம் கேட்டிருந்தார் சசிகலா.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகசாமி, தனது விசாரணைக் கமிஷனில் சாட்சியமளித்தவர்களில் டாக்டர்கள் பாலாஜி, சிவக்குமார் மற்றும் பூங்குன்றன் ஆகிய மூவரின் சாட்சியங்களைத்தவிர மற்றவர்களின் வாக்குமூலங்களை சசிகலாவிடம் ஒப்படைக்க சம்மதித்தார். அதன்படி கடந்த பிப்ரவரி 1-ந்தேதி சாட்சியங்களின் நகல்கள் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு சசிகலா பதிலளிக்க வசதியாக விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார் ஆறுமுகசாமி. மீண்டும் விசாரணை துவங்கும் போது ஏற்கெனவே சாட்சியமளித்தவர்களில் சிலரும், அரசு அதிகாரிகள் பலரும் சாட்சியமளிக்கவிருக்கின்றனர். குறிப்பாக ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன் போன்றவர்கள் ஜெ.வின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக இருந்தவர்கள். அவர்கள் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. இந்தச் சூழலில்தான், கமிஷனுக்கு எதிரான குமுறல்கள் சாட்சிகளிடம் எதிரொலிக்கின்றன.

ஆணையத்தின் விசாரணையை எதிர்கொண்ட சிலரிடம் நாம் பேசியபோது, ""விசாரணை ஆணைய நீதிபதி கேட்ட பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தெரிந்த உண்மைகளை சொல்லியிருக்கிறோம். அதில் சசிகலா மீதான குற்றச்சாட்டுகளும் உண்டு. விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்கள் தந்த வாக்குமூலங்களில் சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருந்தால் அதன்பேரில் சசிகலாவை வரவழைத்தோ அல்லது சசிகலா இருக்கும் இடத்திற்கு சென்றோ விசாரணை நடத்த வேண்டும். அப்போது அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவரது பதிலை பெற முயற்சிப்பதுதான் ஆணையத்தின் நேர்மை. ஆனால், சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் குற்றம்சாட்டியவர்கள் பற்றிய விவரங்களையும் அவரிடமே கொடுப்பது சரி அல்ல.

சசிகலாவிடம் எங்களை கமிஷன் காட்டிக்கொடுக்கிறது என்றே சந்தேகிக்கிறோம். இப்படி காட்டிக்கொடுத்தால், உண்மைகளை அறிந்தவர்கள் சாட்சியம் சொல்லவோ, வாக்குமூலம் கொடுக்கவோ, ஆதாரங்களை தாக்கல் செய்யவோ எப்படி முன்வருவார்கள்? சம்மன் அனுப்பி இன்னும் ஆஜராகாமல் இருப்பவர்கள் ஆஜராகும்போது சசிகலாவுக்கு எதிராக இருக்கும் உண்மைகளை சொல்ல தைரியம் வருமா? அதனால் மீண்டும் ஆணையத்தில் ஆஜராகும்போது தெரிந்த உண்மைகளைச் சொல்ல தயக்கமாக இருக்கிறது'' என குமுறுகின்றனர்.

ஆணையத்தின் இத்தகைய செயல்பாடுகள் வழக்கறிஞர்கள் மத்தியிலும் வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திவரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பா.ம.க. கே.பாலுவிடம் இது குறித்து கேட்டபோது, ""விசாரணைக் கமிசனில் ஆஜரானவர்கள், சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறியிருந்தால், அது குறித்து அவரிடம் ஆணையம் விசாரிக்க நினைக்கும்போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு ஆவணங்களை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அப்படிக் கொடுப்பது தவறல்ல. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தமக்கு எதிராக சாட்சியமளித்தவர்களை குறுக்கு விசாரணை செய்யவும் அதிகாரம் உண்டு.;

இது ஒருபுறமிருக்க, ஆணையத்தின் நேர்மையை சில விசயங்களில் சந்தேகிக்க வேண்டியதிருக்கிறது. அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டானபோது, முதலமைச்சராகத்தான் இருந்தார். அவரோடு இருந்த சசிகலா, ஜெயலலிதாவுக்கு வெறும் தோழிதான். ஆனால், முதல்வரான ஜெயலலிதாவின் உயிரை பாதுகாக்கும் கடமை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடங்கிய தமிழக அமைச்சரவைக்கு உண்டு. அதனால் முதல்வர், துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர்களில் ஒருவருக்குக்கூட சம்மன் அனுப்பவில்லை ஆணையம்.

இது தவிர, இரண்டு முக்கிய சம்பவங்கள் அன்றைக்கு நடந்துள்ளன. அதாவது, காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர்களிடமும் உயரதிகாரிகளிடமும் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜெயலலிதா உத்தரவிட்டார் என்பது முதல் சம்பவம். அடுத்து, ஜெயலலிதாவிடமிருந்த இலாகாக்கள் ஓ.பி.எஸ்.சுக்கு மாற்றி பொறுப்பு முதல்வராக செயல்பட ஆணை பிறப்பித்தார் அப்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகரராவ். இலாகாக்களை மாற்றியமைக்கும் உரிமையும் அதிகாரமும் முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில், அன்றைக்கு ஜெயலலிதா தம்மிடமிருந்த இலாகாக்களை மாற்றிட பரிந்துரைத்தாரா? யாருடைய பரிந்துரையில் இந்த நடவடிக்கையை வித்யாசாகரராவ் எடுத்தார்?


இந்த சந்தேகங்கள் எழுவதால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து யார் யாருக்கோ சம்மன் அனுப்பி விசாரிக்கும் ஆணையம், முதன்முதலாக எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்களிடமும் வித்யாசாகரராவிடமும்தான் நடத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு ஏன் சம்மன் அனுப்பவில்லை? இனியாவது சம்மன் அனுப்புமா? சந்தேகம்தான். அதனால், எந்த ஒரு உண்மையையும் இந்த ஆணையம் வெளிக்கொண்டுவரும்ங்கிற நம்பிக்கை இல்லை!'' என்கிறார் மிக அழுத்தமாகவும் சட்டத்தின் அடிப்படையிலும்.


;இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்ட பல விசாரணைக் கமிஷன்களின் முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜெ. மரணம் என்பது சொந்தக் கட்சி தொண்டர்களிடம் மட்டுமின்றி, அவரை முதலமைச்சராக்கிய மக்களிடமும் பலவித சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. அப்படிப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரியவரான சசிகலா கைகளிலே ஆவணங்கள் ஒப்படைக்கப்படுவதும், விசாரிக்கப்பட வேண்டியவர்களுக்கு இன்னமும் சம்மன் அனுப்பப்படாமல் இருப்பதும், ஜெ.வைப் போலவே அவரது மரண மர்மமும் மண்ணோடு புதைக்கப்படுமோ என்கிற கவலையை உருவாக்கியுள்ளது.<>-இரா.இளையசெல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக