சனி, 3 பிப்ரவரி, 2018

BBC : முருகானந்தம் கோரிக்கை ... இந்தி நடிகர் நடிகைகள் நாப்கின் படத்தை தங்களின் டுவீட்டரில் .

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சேனிடரி நேப்கின் குறித்து
சமூகத்துக்கு இருக்கும் அசௌகரிய உணர்ச்சியை போக்கும் நோக்கத்துடன், சேனிடரி நேப்கினுடன் உங்களால் ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர முடியுமா என்று தமிழர் ஒருவர் விடுத்த சவாலை பாலிவுட்டின் பிரபல இந்தி நட்சத்திரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ;அமீர்கான், அட்சய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே, ட்விங்கிள் கண்ணா உள்ளிட்டோர் சேனிடரி நேப்கினுடன் போஸ் கொடுக்கும் தங்கள் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இந்த சவாலை விடுத்த தமிழர் பெயர் அருணாசலம் முருகானந்தம். கோவையை சேர்ந்த இவர், மலிவு விலையில் சேனிட்டரி நேப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை வடிவமைத்தவர். இவரை சமூகத் தொழில் முனைவோர் என்று ஊடகங்கள் அழைக்கின்றன.
இவரது வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு 'பேட் மேன்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிவருகிறது.

'பேட்மேன் சேலன்ஞ்ச்' என்ற பெயரில் அருணாசலம் முருகானந்தம் விடுத்த இந்த சமூக வலைத்தள சவாலை ஏற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள், மற்றவர்களுக்கும் அதேபோன்ற சவாலை விடுத்தனர். இதையடுத்து, பலரும் சானிடரி நேப்கினுடன் படமெடுத்து ட்விட்டரில் பகிர்ந்து இதனை புதிய ட்ரெண்டாக மாற்றியுள்ளனர்.
யார் இவர்?
கோவை அருகேயுள்ள பாப்பநாயக்கன் புதூரில் 1962ம் ஆண்டு முருகானந்தம் பிறந்தார்.
பழைய துணிகளை தன்னுடைய மனைவி பத்திரப்படுத்தி வைப்பதை பார்த்து, மாவிடாய் காலத்தில் அவர் பயன்படுத்துவதற்கு மலிவு விலையிலான சேனிட்டரி நேப்கின் செய்வதற்கு முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று இன்று உலகளவில் மதிக்கப்படும் மனிதராகியுள்ளார்.
"பேட் மேன்" (Pad Man) திரைப்படம்
"பேட் மேன்" (Pad Man) என்கிற திரைப்படம் ஆர். பால்கியால் எழுதி இயக்கப்பட்டுள்ள வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
அக்ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே முன்னிலை பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், டுவிங்கிள் கண்ணா எழுதிய 'த லெஜன்ட் ஆப் லக்ஷிமி பிரசாத்' என்ற புத்தகத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.
இது ஏழைப் பெண்களின் சுகாதாரத்திற்கு பங்காற்றிய முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம்.
2018 ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட இருந்த இந்த திரைப்படம் இப்போது பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழின் உச்சி
சுகாதார நாப்கின்களை தயாரிக்க முயற்சி மேற்கொண்டபோது, முருகானந்தத்தை தொடக்கத்தில் யாரும் பெரிதளவில் கண்டுக்கொள்ளவில்லை.
பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மாதவிடாய்க்கால நேப்கின்களை வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்காக எளிய வழிகளை கண்டறிந்ததோடு, அவற்றை தயாரிக்க சிறப்பு எந்திரத்தையும் வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்றது, இவரை சாதனை மனிதருக்கான இடத்தை அடைய செய்தது.
நேப்கின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் விலை சுமார் ரூ. 3.5 கோடி என்றிருந்த நிலையில், ரூ 65 ஆயிரத்திற்கு எந்திரம் வடிவமைத்து நேப்கின் உற்பத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினரர் இவர்.
2016ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து இவரை இந்திய அரசு கௌரவித்த பின்னர், மிகவும் பிரபலம் அடைந்தார்,
முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது, அவரது புகழை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
பாலிவுட் நடிகர்களுக்கு சவால்
மாவிடாய்க் காலத்தில் பெண்கள் அணிகிற நேப்கின்களை வெளிப்படையாக கொண்டு செல்வது சமூக அளவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத வழக்கமாகவே இந்தியாவில் காணப்படுகிறது.
கடைகளுக்கு சென்று வாங்கினால்,நேப்கின்களை மட்டும் யாருக்கும் தெரியாமல் பிளாஸ்டிக் பையில் பொதித்து கொடுப்பதையும், வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்கு கொண்டு செல்வதையும் இன்றும் பார்க்க முடியும்.
செய்யக்கூடாதவை என நியாயமின்றி சமூகம் விலக்கிய ஒன்று குறித்த தயக்கத்தை உடைப்பதற்கு நேப்கின்களை விளம்பரப்படுத்தி சுகாதார விழிப்புணர்வை மேற்கொண்ட முருகானந்தத்தின் வாழ்க்கையே ஓர் எடுத்துக்காட்டு எனப் புகழப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கை பற்றிய திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நேப்கினை கையில் வைத்து புகைப்படம் எடுத்துப் பகிர முடியுமா? என பாலிவுட் நடிகர்களுக்கு முருகானந்தம் சவால் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக