வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்...- மினி தொடர் -2

மின்னம்பலம் : தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மீது சபாநாயகர் மேற்கொண்ட தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நேற்று (பிப்ரவரி 8) தினகரனின் வீட்டில் கூடி ஆலோசித்திருக்கிறார்கள்.
சட்டக் கூறுகளின் படி தங்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றால், அதே சட்டக் கூறுகளின்படி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும் என்று அப்போது அந்த ஆலோனையில் பேசப்பட்டிருக்கிறது. அதாவது வரப்போகும் இந்தத் தீர்ப்பு ஒன்று நேரடியாக முதலமைச்சர் எடப்பாடி அரசாங்கத்தை பாதிக்கும், அல்லது மறைமுகமாக பாதிக்கும். பாதிப்பு என்பதை சட்டக் காரணிகளைப் பொறுத்து சர்வ நிச்சயம் என்பதுதான் அரசியல் வட்டாரத்திலும் சட்ட வட்டாரத்திலும் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு. இதனை அறுவடை செய்யக் காத்துக் கிடக்கிறது தினகரன் தரப்பு.
இந்த வழக்கின் தோற்றுவாயே மிக சுவாரஸ்யமானது, சூடானது.
அதுபற்றி ஒரு மீள் பார்வை பார்க்கலாம்...

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து தங்களது ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியபிறகு பிரதான எதிர்க்கட்சியான திமுக எப்படி சும்மா இருக்கும்? கடந்த ஆகஸ்டிலேயே பெரும்பான்மையை இழந்துவிட்டார் எடப்பாடி. எனவே உடனடியாக திமுக தரப்பிலும் ஆளுநரை சந்தித்து, ‘’பெரும்பான்மையை இழந்த அரசை சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
ஆனால்... ஆளுநரிடம் இருந்து எந்த சமிக்ஞையும் இல்லை. டெல்லியில் இருந்து வந்தால்தானே ஆளுநர் மாளிகையில் இருந்து வரும்? பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தே ஆளுநர் அமைதி காக்கும் நிலையில் திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இருந்த ஒரே வழி நீதிமன்றம்.
ஆளுநரை திமுக சந்தித்து முறையிட்டு சில நாள்கள் ஆன நிலையில்... அவரிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை அறிந்த ஸ்டாலின் அறிவாலயத்தில் திமுகவின் மூத்த முன்னோடி வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆளுநர் மீது வழக்குத் தொடர்வது என்பதுதான் அது,
அதாவது சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்பதே ஸ்டாலின் தொடுத்த வழக்கு. இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது... ஸ்டாலின் தரப்பில் ஆஜரான கபில் சிபல் அருணாசலப் பிரதேசத்தில் நடந்த ஜனநாயகக் குழப்பங்களைப் போன்று தமிழகத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டினார்.
அதோடு அன்று நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது.
அன்று (செப்டம்பர் 14) நடந்த இந்த வழக்கில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள மனு செய்ததன் மூலம் இந்த வழக்கின் முக்கியத்துவம் மேலும் அதிகமானது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஸ்டாலின் தொடுத்த வழக்கில், ‘வரும் செப் 20-ஆம் தேதி புதன் கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’ என்று உத்தரவிட்டார் நீதிபதி துரைசாமி.
’’எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டனர். ஆனால் ஆளுனர் இதுவரை சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவில்லை. இதன் மூலம் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன. எனவே உடனடியாக தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுனர் கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக ஆளுனருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்பதுதான் ஸ்டாலின் தாக்கல் செய்த ரிட் மனுவின் சாராம்சம்.
இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். அவர் தனது வாதத்தில்,
’’தமிழக சட்டமன்றத்தின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வருக்கான தங்களது ஆதரவை வாபஸ் வாங்கி ஆளுனருக்கு கடிதம் கொடுத்துவிட்டனர். அவர்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்து அதன் பிறகு சட்டசபையை கூட்டி சட்டத்தை வளைத்து மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிக்கிறார் முதல்வர். இதற்கு ஆளுனரும் துணை போகிறார்’’ என்று வாதாடிய கபில் சிபல் தன் வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அருணாசல பிரதேச சபாநாயகர் இதேபோல ஆட்சிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி வாதாடினார்.
இந்த வழக்கில் ஆளுனர் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜர் ஆனார். அப்போது நீதிபதி துரைசாமி, ‘’இன்று மதியம் 3 மணிக்குள் 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் சபாநாயகர் விசாரணைக்காக வரச் சொல்லியிருக்கிறார். இன்று 3 மணிக்குள் அந்த உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வீர்களா? அல்லது என்ன சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறார் என்பது பற்றி நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவியுங்கள்’’ என்று கேட்டு வழக்கை பிற்பகல் 2.15 க்கு ஒத்தி வைத்தார்.
பின் நீதிமன்றம் கூடியதும் முதல்வருக்கு தனியாக ஒரு வழக்கறிஞரும், ஆளுனருக்கு அட்வகேட் ஜெனரலும் ஆஜர் ஆனார்கள்.
அப்போது சபாநாயகரின் பதில் என்னவென்று கேட்டார் நீதிபதி. ‘’இன்று அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் வருகிறார்களா என்பதை பொறுத்துதான் நடவடிக்கை இருக்கும், சபாநாயகர் சட்டப்பபடிதான் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை இருக்கும் என்பது பற்றி நீதிமன்றத்துக்கு உறுதியாக சொல்ல இயலாது என்று தெரிவிக்கிறார்’’ என்று சபாநாயகரின் பதிலாக அட்வகேட் ஜெனரல் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘’இந்த மனுவே உள் நோக்கம் கொண்டது. இதுபோன்ற மனுக்களை விசாரித்து சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இது சில எதிர்பார்ப்புகளோடு அனுமானங்களோடும் தாக்கல் செய்யபப்ட்ட இதுபோன்ற மனுக்களை நீதிமன்றம் ஊக்குவிக்கக் கூடாது’’ என்று வாதிட்டார்.
இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யம் அரங்கேறியது.
தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் இந்த வழக்குக்கு இடையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். ‘’இந்த வழக்கு நடைபெறும் நிலையில்தான் நான் உள்ளிட்ட முதல்வரை எதிர்க்கும் 19 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சி செய்கிறார்கள். எனவே இந்த வழக்கில் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வரும் ஞாயிற்றுக் கிழமைக் காலை எட்டு மணிக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு அன்று காலை 10 மணிக்கே சபையைக் கூட்டுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அப்போது எங்களுக்கு நீதிமன்றத்துக்கு வருவதற்கு நேரம் கிடைக்காது.எனவே 48 மணி நேரம் அவகாசம்’’ என்றார்.
உடனே நீதிபதி, ‘’அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வீர்களா என்பதற்கும் பதில் இல்லை. சட்டமன்றத்தைக் கூட்டுவீர்களா என்பதற்கும் பதில் இல்லையே?” என்று அரசுத் தரப்பைப் பார்த்து கேட்க, அட்வகேட் ஜெனரல், ’’அனுமானங்களுக்கு பதில் சொல்ல இயலாது. பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி துரைசாமி, ‘’உங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தருகிறோம். ஆனால் வரும் 20 ஆம் தேதி புதன் கிழமை வரை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’’ என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு உத்தரவிட்டார்.
எது நடக்கும் என்று சொல்லி வெற்றிவேல் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்தாரோ, அதை செப்டம்பர் 18 ஆம் தேதி நடத்தியே விட்டது அரசுத் தரப்பு. ஆம். சபாநாயகர் தனபால் தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கையைப் பாய்ச்சினார்.
இதன் மூலம் உடனடியாக இன்னொரு 18 வழக்குகள் நீதிமன்றத்தில் உதயமாகின!
-கவுன்ட் டவுன் ஸ்டார்ட்...
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக