வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஸ்டாலின் : நிலக்கரி ஊழல் 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுக்குள் 3,025 கோடி ரூபாய் ஊழல்..

நிலக்கரி ஊழல்: திமிங்கலமே வெளியே வந்துள்ளது!மின்னம்பலம் :‘நிலக்கரி ஊழலில் பூனைக்குட்டி அல்ல; ஊழல் திமிங்கலமே வெளியே வந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெற்றிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இதற்கிடையே, தாங்கள் திரட்டிய ஆதாரங்களை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் வழங்கிய அறப்போர் இயக்கத்தினர் ஊழல் குறித்து விளக்கியிருந்தனர். இந்த நிலையில்தான் நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (பிப்ரவரி 8) விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில், தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுக்குள் 3,025 கோடி ரூபாய் ஊழல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்று இருக்கிறது, என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் புதிய மின்திட்டங்களை நிறைவேற்றாமல், மின்தேவை என்ற காரணத்தைக் காட்டி, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.44 கோடி மெட்ரிக் டன் அளவுக்குத் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, இப்படியொரு மெகா முறைகேட்டைச் செய்துள்ளது அதிமுக அரசு என்பது வெட்கக்கேடாக இருக்கிறது” என்று வேதனைத் தெரிவித்துள்ள அவர், “மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை அறிக்கையில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகீர் தகவல்கள் அரசு கஜானாவை திட்டமிட்டுக் கொள்ளையடித்திருக்கும் அதிமுக அரசின் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை அறிக்கையில், ‘இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை, அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டாலும் சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், பிரிட்டிஷ் தீவுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் இன்வாய்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி விலையை விட இந்த இடைத்தரகர்கள் நிர்ணயித்த விலை 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அதிகம் இருக்கிறது.
இந்தோனேசியாவில் நிலக்கரி இறக்குமதி செய்யும்போது, அங்குள்ள நிறுவனங்கள் அசல் இன்வாய்ஸுடன் சேர்த்து மூன்று நகல்கள் கொடுப்பது வழக்கம். இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒரிஜினல் இன்வாய்ஸ் கட்டாயமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்தத் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில், ஒரிஜினல் இன்வாய்ஸ் கொடுப்பதற்குப் பதிலாக அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகள் மட்டுமே கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி, இறக்குமதி செய்துள்ள 40 முன்னணி இறக்குமதியாளர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது” எனச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், “மத்திய வருவாய் புலனாய்வுத் துறை விசாரிக்கும் அந்த நாற்பது இறக்குமதியாளர்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் 12,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை, ஐந்து பேரிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது என்பதும், அந்த இறக்குமதியில்தான் 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதும் உற்றுக் கவனிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “தமிழக மின்சார வாரியம் இருமுறை, ஏறக்குறைய 14,000 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தியதால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்கள், 2018-19 நிதியாண்டில் மூன்றாவது முறையாக 6 சதவிகித மின்கட்டண உயர்வை மீண்டும் அனுபவித்தே ஆக வேண்டும் என்று வெளியாகியுள்ள பத்திரிகை செய்திகள் பொதுமக்களைப் பயமுறுத்தி வருகின்றன” என்றும் அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி இறக்குமதியில் ‘பூனைக்குட்டி’அல்ல; ‘ஊழல் திமிங்கலமே’ வெளியே வந்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், “அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் வீடு, கரூர் அன்புநாதன் வீடு போன்றவற்றில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டுகள், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக இருந்த ஞானதேசிகன் திடீரென்று பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் மீறி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது. பிறகு, அவர் திடீரென்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது, அப்படி நீக்கப்பட்டவர் மீண்டும் பணியில் சேர்ந்தது, கண்காணாத இடத்தில் இருந்த அவர் தற்போது தொழில் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது உள்ளிட்ட பல சம்பவங்களில், ஆழமாக மறைந்துள்ள அனைத்து மர்மங்களும் இந்த நிலக்கரி இறக்குமதி ஊழலுடன் பின்னிப் பிணைந்துள்ளன” என்று மேற்கோள் காட்டியுள்ளார்.
“வரலாறு காணாத இந்தத் தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்து அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களை நிச்சயம் புறந்தள்ளி விட முடியாது” எனத் தெரிவித்துள்ள அவர், “டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்காகக் காத்திராமல், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து, உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக