புதன், 7 பிப்ரவரி, 2018

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 06 : T .சௌந்தர்

இனியொரு inioru.com:
.வாத்தியங்களும் , புதுப்பாய்ச்சலும் :
அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை மீறி புதுமை பாய்ச்சும் இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை. இசையின் மீது தீராக்காதலும் , திரையிசை குறித்த நற்கனவுகளையம் கொண்ட மெல்லிசைமன்னர்கள் அந்த பாரிய பொறுப்பை சுமக்க முனைந்தனர்.
1950 மற்றும் 1960 களின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் பின்னணி இசையின் ஒரு விதமான போக்கு நிலவியதை நாம் காணலாம்.
அக்காலப்படங்களின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்கும் ஒருவர் , பின்னணி இசை என்பது ஏலவே வந்த ஒரு பிரபல்யமான பாடலை பின்னணியில் வாசித்து விடுவதையும் ,அல்லது அந்தப்படத்திலேயே வந்த ஒருபாடலை மீண்டும் வாசித்துவிடுவதையும் அவதானிக்கலாம்.காட்சிகளின் சூழலுக்கு ஏற்ப அமைந்த புகழபெற்ற வேறு திரைப்படப் பாடல்களையும் வாசிப்பது ஒரு வழமையாகக் கூட இருந்தது.உதாரணமாக ,காதல் காட்சியென்றால் புகழ்பெற்ற ஒரு காதல் பாடலையும் ,நகைச்சுவைக்காட்சியென்றால் ஒரு நகைச்சுவைப் பாடலையும் வாத்திய இசையாக வாசித்திருப்பதை அவதானிக்கலாம்.குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதனின் படங்களில் இந்நிலையை அதிகமாகக் காணலாம்.பெரும்பாலும் எல்லா இசையமைப்பாளர்களும் இதே முறையைப் பயன்படுத்தினார்கள் என்பதும் கவனத்திற்க்குரியது.
இந்த நிலை 1970கள் வரையும் ஆங்காங்கே மிகக்குறைந்த அளவில் தொடர்ந்ததையும் அவதானிக்கலாம்.
சிறப்பான செவ்வியல் இசைமரபை நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் தமிழ் இசையுலகில் , பிறநாடுகளைப்போல ஒரு வாத்திய இசைக்குழு [ Symphony Orchestra ] இன்றுவரை இல்லை என்பதும் கவனத்திற்குரியது. வெளிநாடுகளில் ஒவ்வொரு சிறிய நகரத்தில் கூட அதற்கென ஒரு இசைக்குழு இருப்பதை நாம் காண்கிறோம்.
அந்த நோக்கில் வாத்திய இசையின் அவசியம் குறித்த ஒரு சிறு பொறியை கொடுத்தது திரைப்படங்களே.
ஐரோப்பிய இசையுலகில் ஓபரா இசையில் வாத்திய இசையையும் இணைத்து புதுமை நிகழ்த்திய ரொமான்டிக் கால இசைக்கு ஒப்பாக 1950 களில் தமிழ்திரையிசையில் நாடகப்பாணி மெட்டுக்களுக்கு இடையிசையாக பல வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டன.
அந்த வகையில் 1950 களில் தமிழ் நாடகமரபோடு ஒட்டி வந்த இசைப்போக்கின் சற்று மேம்பட்டு நின்ற இசையாக இருந்து வந்த திரையிசையை ஹிந்தித் திரைப்படங்களுக்கு நிகராக நவீனப்படுத்த வேண்டிய அவசியம் மெல்லிசைமன்னர்களுக்கு இருந்தது.தமிழ் திரையில் அதிகம் பயன்படுத்தப்படாத பல வாத்தியக்கருவிகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின.மரபோடு ஒன்றியைந்து வரக்கூடியதும் ,ஆதனூடே புதிய மரபையும் உருவாக்கிக்க்காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
தங்கள் இசையை முன்னவர்கள் போல அமைப்பதும் அதன் கட்டுனமானங்களை குலைக்காமல் அதனோடியைந்த புதுமையை தங்களுக்கே உரிய தனித்தன்மையுடனும் புகுத்தினார்கள்.வாத்திய இசையில் புதிய உத்திகளும், சோதனை முயற்சிகளும் செய்தனர்.வாத்திய இசையின் நுண்மையான அலைவீச்சை பரந்த கற்பனையில் புதுவர்ணக்கலவையாய் தந்தனர்.மின்னி ,மின்னி ஜாலம் காட்டி இசையின் உயிர்ப்புகளை ஒளிரவைக்கும் ஒலிநயங்களை வெவ்வேறு வாத்தியங்களில் புதிய தரிசனத்துடன் தந்தார்கள்.
பாடல்களின் ஒலித்திரளில் கண நேரம் வந்து போகும் வாத்திய கோர்வைகளால் இனபத்தையும் , குதூகலத்தையும் பேராவலையும் ,களிப்பையும் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வின் நாடகத்தை இதயத்தின் ஆழத்தில் புதைத்து விட வாத்தியங்களை பொருத்தமான இடங்களில் அணி அணியாய் அமைத்து நயக்க வைத்தார்கள்.
இவர்களின் ஆததர்சமாக இருந்த ஹிந்தி திரையிசையின் வீச்சுக்கு நிகராக பாடல்கள் அமைக்க புதிய வாத்தியங்களை அறிமுகம் செய்ய முனைந்ததுடன் .மேலைத்தேய வாத்தியங்களான பியானோ,கிட்டார் , சாக்ஸபோன், ட்ரம்பெட் ,பொங்கஸ், சைலோபோன் மட்டுமல்ல அவற்றுடன் வட இந்திய இசைப்பாரம்பரியத்திலிருந்து வந்த சித்தார் ,செனாய் , சாரங்கி ,சந்தூர் போன்ற இசைக்கருவிகளையும் இணைத்து பெரும்சாதனை புரிந்தார்கள்.கடின உழைப்பும் ,வாத்தியங்கள் குறித்த நுண்ணறிவும் அவர்களது புதிய முயற்சிகளுக்குத் துணையாய் நின்றன.அவைமட்டுமல்ல ஹோரஸ், விசில் , மிமிக்கிரி போன்ற பல்வேறு சப்த ஒலிகளையெல்லாம் வெற்றிகரமாகச் செயற்படுத்தினர். சுருக்கமாகச் சொல்வதானால் இசையை புதுப்பித்து புதுநிர்மாணம் செய்தார்கள்.
தமிழ்த்திரையிசையின் புது இசைப் பிரவேசமாக இதனை நாம் நோக்க வேண்டும். அந்த இசை வீச்சும் , ஆழமும், பன்முகத்தன்மையும் கொண்டதாக விளங்கிது.இதுவரை சேகரத்திடலிருந்த இசையறிவின் புதுவளர்ச்சியாக உருவாக்கம் செய்தார்கள்.சாதாரண இசைரசிகர்களை மனதில் கொண்டதாகவும் , அவர்களது இசைரச உணர்வை தூண்டுவதாகவும் அமைந்தது.
புதுப்புது வாத்தியங்களை சலனமின்றி அறிமுகம் செய்த மெல்லிசைமன்னர்கள் வட இந்திய இசைக்கருவியான செனாய் வாத்திய இசைக்கருவியை பயன்படுத்திய பங்கு விதந்துரைக்கத் தக்கது.ஏற்கனவே இந்தித்திரையிசையில் வேரூன்றி விருத்தி பெற்ற இக்கருவியை ஆங்காங்கே ஒரு சில பாடல்களிலும் ,பெரும்பாலும் சோகக்காட்சிகளிலும் பிற இசையமைப்பாளர்களும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
மூத்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் எளிமையான உத்திகளை பயன்படுத்தி இசையமைப்பதில் வல்லவர்.அவர் செனாய் இசையை மகிழ்ச்சிப்பாடல்களில் வைத்த மூலவர்களில் ஒருவர்.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் [1958] படத்தில் சுசீலா குழுவினர் பாடும் ” அஞ்சாத சிங்கம் என் காளை ” என்று தொடங்கும் பாடலிலும் , அரசிளங்குமரி [1960] படத்தில் சௌந்தரராஜன் , சூலமங்கலம் ராஜலட்சுமி பாடும் ” ஊர்வலமாக மாப்பிள்ளை சேர்ந்து வ்ருகிறார் ” என்ற பாடலிலும் செனாய் வாத்தியத்தில் கிராமிய மணம் கமழ வைத்துக் காட்டினார்.
சோகத்தை எதிரொலிக்க வைத்த பாடல்களில் தெய்வத்தின் தெய்வம் [1962] படத்தில் சுசீலா பாடும் ” பாட்டுப் பாட வாய் எடுத்தேன் ” என்ற பாடலில் ஜி.ராமநாதனும் ,மாமன் மகள் [1959] படத்தில் ஜிக்கி பாடும் ” ஆசை நிலா சென்றதே ” என்ற பாடலை எஸ்.வெங்கட்ராமனும் மிக அற்புதமாக தந்து சென்றுள்ளனர்.
தமிழ் சூழலில் செனாய் சோக உணர்வை தரும் வாத்தியமாக கருத்தப்பட்டுவந்த சூழ்நிலையில் அபூர்வமாக ஒரு சில பாடல்களும் வெளிவந்தன அந்நிலையில் “சோகக்காட்சியா” ? கொண்டுவா செனாய் வாத்தியக்கருவியை ” என அன்றிருந்த ஒரு காலகட்டத்தில் அந்த வாத்தியத்தை அதிகமான மகிழ்ச்சிப்பாடல்களிலும் வைத்துக்காட்டி பெருமை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்றால் மிகையில்லை.
இன்ன வாத்தியம் இன்ன உணர்வைத்தான் பிரதிபலிக்கும் என்ற வரையறைகளைத் தாண்டி ,”அவற்றின் எல்லை இது தான் ” என்று முன் சொல்லப்பட்ட கருத்துக்களை மீறி புதிய கோணங்களில் பயன்படுத்தினர். இன்னொருமுறையில் சொல்வதென்றால் தலைகீழ் விகிதத்திலும் பயன்படுத்தினார்கள் எனலாம் .
செனாய் வாத்தியத்தை காதல்பாடல்களில் மட்டுமல்ல ,பலவிதமான பாடல்களிலும் புதுமுமையாகப் பயன்படுத்தி வியக்க வைத்த சில பாடல்களை இங்கே பார்ப்போம்.
மெல்லிசைமன்னர்களின் மகிழ்ச்சிப்பாடல்களில் செனாய்:
பாடல்: 1
————–
“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” – பாலும் பழமும் [1961]
இந்தப் பாடலின் இசையில், அதன் இனிமையில் செனாய் பயன்பட்டிருப்பதை பலரும் கவனித்தருக்க மாட்டார்கள்.அதை உற்று நோக்கிக் கேட்கும் போது மட்டுமே அதன் இன்பத்தை நாம் அனுபவிக்கலாம்.பாடலின் பல்லவியின் முடிவிலும் , சரணத்திலும் செனாய் வாத்தியத்தின் குழைவையும், இனிமையும் வியக்கலாம். பாடலின் பல்லவி முடிந்தவுடன் காலையை குளிர்ச்சியுடன் வரவேற்கும் செனாய் இசையை இன்பப்பெருக்காகத் தருகிறார்கள்.
இப்பாடலின் முடிவில் “அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் ” வரிகளை தொடரும் வயலின் இசையும் , புல்லாங்குழல் இசையும் சம்போகம் செய்து இன்பமாய்ப் புலரும் இனிய கலைப்பொழுதை இதமாக வருடிக் கொடுக்கின்றன.காலைப்பொழுது இருக்கும்வரை இந்தப்பாடல் இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இருக்க முடியாது.
பாடல் :2
————-
” மதுரா நகரில் தமிழ் சங்கம் ” -பார் மகளே பார் [ 1963 ]
இந்தப் பாடலிலும் செனாய் இசையை வாஞ்சையுடன் தருகிறார்கள்.காதலின் அன்புக்கனிவுக்கு அச்சாரமாக பாடலின் முன்னிசையிலேயே செனாயின் மதுரத்தை,, அதன் ஜீவஒலியை அள்ளித்தரும் அதிசயத்தைக் காண்கிறோம்.பாடலின் முன்னிசையிலும் , தொடரும் இடையிசைகளிலும் நம்மை இன்பம் தெறிக்கும் செனாய் இசையின் உபாசகர்களாக்கி விடுகிறார்கள்.செனாய் இசை இன்பப் பெருக்காய் பாயும் பாடல் இது.
பாடல்: 3
————-
செனாய் இசையுடன் கரைந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாம தவிர்க்க முடியாத பாடல் ஒன்றுள்ளது.அது தான் கலைக்கோயில் [ 1963 ] படத்தில் இடபெற்ற ” தங்கரதம் வந்தது வீதியிலே ” [ பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா + சுசீலா ] தொடங்கும் பாடல்.
இப்பாடல் பெரும்தச்சர்களின் கைவண்ண நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட உயிர்த்துடிப்புமிக்க இசைச்சிற்பம் என்று சொல்லலாம்.மரபார்ந்த ராகமான ஆபோகி ராகத்தில் தோய்ந்த அழகிய மெல்லிசையில் மெல்லிசைமன்னர்களின் மனஎழுச்சியையும் , மன ஓசையையும் செனாய் வாத்திய இசையில் கேட்கிறோம்.நவீனங்களை மரபு வழியில் நின்று தரும் இசைலட்ஷணங்களை இந்தப்பாடலில் தரிசிக்கிறோம்.நமது மனங்களில் தைல வண்ணமாக இசை வழிந்து செல்லும் அற்புதஅனுபவத்தை ,செனாய் வாத்தியத்தின் மதுர இசையில் காதலின் இன்பநிலையை அமுதமயமாகத் தருகிறார்கள்.செனாய் இசை விரவி ஆட்கொள்ளும் புதுஅனுபவம் பாடலின் முடிவில் விஞ்சி நிற்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.கேட்கக் கேட்க இன்புற வைக்கும் இப்பாடல் காலத்தை விஞ்சி நிற்கிறது
இந்தப்பாடலை மிகச் சிறப்பாகப்பாடும் என் தந்தையாரையும் நான் இக்கணத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.அவர் மூலமே இப்பாடலை நான் அறியும் வாய்ப்பு கிடைத்தது.
பாடல்: 4
————-
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே [ கர்ணன் ]
பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் இன்பப்பெருக்கை அள்ளித்தரும் விதத்தில் இசைக்க வைக்கப்பட்டுள்ளது.அனுபல்லவி முடித்து வரும் இசைப்பகுதியில் அந்த இசை, கோரசுக்குப்பதிலாக சாரங்கி வாத்திய இசையில் வருகிறது.கோரஸ் இசையுடன் குழைந்து வரும் தேனமுதாக கலந்து இசையில் புதிய போதனை காட்டியது அன்றைய நிலைக்கு நேரெதிராகவே இருந்தது.
சுத்ததன்யாசி ராகத்திற்கு மெல்லிசைமன்னர்கள் புதிய முகவரியைக் கொடுத்த பாடல்.பாடிய விதமோ அபாரம்.
பாடல்: 5
————-
கேள்வி பிறந்தது அன்று [ பச்சை விளக்கு ]
எத்தனை, எத்தனை வாத்தியப்பரிவாரங்கள் என்று வியக்கவைக்கும் பாடல்.றம்பட, ட்ரம்ஸ்,எக்கோடியன்,வயலின், குழல்,விசில் , ரயில் சத்தம் என வினோதமான இசைக்கலவை.உலக மனிதனின் கண்டுபிடிப்புகளை வியந்து பாடும் இந்த பாடலில் அத்தனையையும் கலந்து கொடுத்து வியக்க வைக்கிறார்கள்.
உலக விஷயங்களின் பெருமைகளை வியந்து பாடும் போது வானம் தொட்டுச் சென்ற இசை, இப்பாடலின் இனிய திருப்பம், வீடு பற்றி பாடும் போது உள்ளக்கிளர்ச்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாடலின் சரணத்தில் புதிய தினுசாக , புதிய திருப்பமாக அதைக் கையாண்ட மெல்லிசைமன்னர்களின் ஆற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.உணர்ச்சிப் பெருக்கும் , மெய்சிலிர்ப்பும் தரும் அந்த இசைக்கு மெல்லிசைமன்னர்கள் பயபடுத்திய வாத்தியம் செனாய் ஆகும்.அதுமட்டுமல்ல அதன் பின்னணியில் ஒலிக்கும் பொங்கஸ் தாளம் பெரும் மனவெழுச்சி தருகிறது.
“குலமகள் வாழும் இனிய குடும்பம்
கோவிலுக்கிணையாகும்”
என்ற வரிகளுக்கு முன்பாக வரும் சிலிர்ப்பூட்டும் செனாய் இசை 10 செக்கன்கள் மட்டுமே ஒலிக்கிறது.இயற்கையோடிசைந்த வாழ்க்கை போல பாடலின் உணர்வுக்கும் இசைவாய் அமைக்கப்பட்ட அற்புதமான இசை படக்காட்சியையும் தாண்டி தனியே இசை கேட்பவர்களையும் பரவசப்படுத்தி நிற்கிறது.இசையின் மகோன்னதம் இதுவல்லவா !
பாடல்: 6
————-
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி [ இது சத்தியம் ]
மலைவாழ் தொழிலாளர்கள் பாடும் பாங்கில் அமைந்த இந்தப்பாடலில், கேட்போரை குதூகலமடையச் செய்யும் வண்ணம் செனாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.குழல் ,சந்தூர் , கோரஸ் பரிவாரங்களும் அருமையாக இணைக்கப்பட்ட பாடல்.பின்னாளில் ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற ஹேமமாலினி நடனமாடும் பெண்கள் குழுவில் முன்வரிசையில் ஆடுவதை இந்தப்பாடல் காட்சியில் காணலாம்.
பாடல்:7
————-
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது – [பச்சை விளக்கு ]
நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கும் ஒரு இனிய பாடலில் செனாய் இசை எப்படி இணையும் ? என்று ஆச்சர்யப்பட வைக்கும் பாடல்.நாதஸ்வரம், செனாய் இரண்டு மகோன்னதமான இசைக்கருவிகள்.மாபெரும் இசைக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட்ட உயர் ரக இசைக்கருவிகள் ! மனோதர்ம இசையில் உச்சம் தருகின்ற வாத்தியங்கள்.இவை மெல்லிசைவடிவங்களின் இசைக்குறிப்புகளில் அடங்கி நிற்குமா என்ற ஐயம் எழாமல் இருக்க முடியாது.
உணர்வு நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் இவ்விரு மேதகு வாத்தியங்களை ஒரே பாடலில் ஒருங்கிசையாத தந்த மெல்லிசைமன்னர்களின் இசைஞானத்தை இப்பாடலில் தரிசிக்கின்றோம்.இனிய நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலின் அனுபல்லவியில்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் – அந்த
நாயகன் தானும் வானில் இருந்தே பூமழை பொழிகின்றான்
என்ற பாடல் வரிகளைத் தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலுடன் நாதஸ்வர இசையை இணைத்து தருகிறார்கள்., மீண்டும் சரணத்தில் , அதே மெட்டில்
“குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே ” என்ற வரிகளைத் தொடரும் இசையில் நாதஸ்வரத்திற்குப் பதிலாக குழலுடன் செனாயைப் பயன்படுத்தி எழுச்சியூட்டுகின்றனர்.
வெவ்வேறு ஒலிக்கலவைகளை கலந்து மெல்லிசையைத் தளிர்த்தோங்க வைத்து புதுமை காட்டுகிறார்கள்.
பாடல்: 8
————-
வாரத்திருப்பாளோ வண்ணமலர் கண்ணன் அவன் – [பச்சை விளக்கு ]
இது சந்தித்துப் பேசும் வாய்ப்பு பெற்ற காதலர்கள் பாடும் விரகதாபப்பாடல். பொதுவாக விரகதாபம் சந்திக்க முடியாத சூழ்நிலையிலேயே அமைவது வழக்கம்.ஒரே வீட்டில் இருந்தும் தங்கள் விருப்பை வெளியிட முடியாத கட்டுப்பாட்டில் இருந்து பாடப்படும் பாடல்.
தனியே பாடலைக்கேட்பவர்கள் மிதமிஞ்சிய சோகப்பாடல் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு உருக்கம் நிறைந்த செனாய் வாசிப்பு சோக உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.கட்டுப்பாட்டுடன் அருகில் நிற்கும் காதலனைப்பார்த்து
“பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேன் இருக்க
உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன் “
என்ற வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் செனாய் இசை , காதலனின் இதய வேதனையை வெளிப்படுத்துகிறது.
அனுபல்லவியின் மெட்டிலேயே வரும் சரணத்தில் [ கல்வியென்று பள்ளியிலே ] காதலின் பாடும் வரிகளுக்கு பின்னால் செனாய் இசைக்கபடவில்லை.
இந்தப்பாடலில் செனாய் காதலனின் இதயதாபமாக ஒலிக்கிறது.
இன்னுமொரு முக்கிய திருப்பமாக பாடலின் சரணத்திற்கு [ கல்வியென்று பள்ளியிலே ] முன்பாக வரும் இடையிசை உற்சாகத்தில் குதித்தெழுந்து பாய்கிறது.அந்த உற்சாகமிகுந்த இசை பழைய ஹிந்திப்பாடலின் இடையிசையை மேற்கோள் காட்டுவது போல பாய்ந்து சென்று நெஞ்சை நெகிழ வைக்கிறது.இது போன்ற இனிய இசைத்திருப்பங்களை மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் ஆங்காங்கே காணலாம.பாடல் காட்சியும் மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது
பாடல்: 9
————-
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் [ ஆனந்தி] பாடியவர் பி.சுசீலா.
மூன்றரை நிமிடங்களில் ஒலிக்கும் இந்தப்பாடல் காலப்பெருவெளியில் மறைந்து கிடைக்கும் ஞாபகத்தடயங்களை கிளறி உணர்ச்சிப்பெருவெள்ளத்தில் ஆழ்த்தும் ஆற்றல் பெற்றது.நம் மனங்களை உருக வைத்து வாழ்வை அர்த்தப்படுத்தும் பாடல்!
காதலின் உச்சத்தில் நின்று பாடப்படும் இந்த மகிழ்ச்சிப்பாடலில் இனம்புரியாத சோகத்தையும் உள்ளிணைக்க செனாய் வாத்தியத்தைப் பயன்படுத்தி உணர்வின் உள்ளொளியைக் காட்டும் மெல்லிசைமன்னர்களின் இசை மேதைமையைக் காண்கிறோம். பல்லவியைத் தொடரும் இடையிசையில் அன்பின் ததும்பலாக சந்தூர் வாத்தியத்தின் இனிய சிதறல்களை காட்டுகிறார்கள்.
பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஓர் நினைவு
என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் இடையிசையில் செனாய் தரும் மதுர இசையைத் தொடர்ந்து எக்கோடியன் சுழன்றடித்து அனுபல்லவியை அபாரமாக எடுத்துக்கொடுக்கிறது.அன்பின் முருகிய நிலையை முழுமையாய் தரும் பாடல்.எனது பால்யவயதின் நினைவலைகளை மீட்டும் பாடல்.
பாடல்: 10
————-
இரவும் நிலவும் மலரட்டுமே [கர்ணன் ]
மெல்லிசை இயக்கத்தின் புத்திரர்கள் கொடுத்த கலையழகு குன்றாத கைநேர்த்தியை இந்தப்பாடலில் கேட்கலாம்.குழல் ,சாரங்கி ,சந்தூர் போன்ற வாத்தியங்களுடன் அணி சேர்த்து செனாய் இசையின் இனிமையை இன்பத்தின் தித்திப்பாய்த் தந்து தனிச்சுவை காட்டி நிற்கும் பாடல்.வட இந்திய இசைக்கருவிகளை வைத்து ஹிந்துஸ்தானிய இசைப்படிமங்களை தமிழில் கலந்த புது மெருகு இந்தப்பாடல்.
பாடல்: 11
பொன்னொன்று கண்டேன் – படித்தால் மட்டும் போதுமா –
திருமணமாகாத அந்நியோன்யமான சகோதரர்கள் பாடும் பாடலாக அமைந்த இந்த அற்புதமான பாடலில் கனிவும் , நெகிழ்ச்சியும் ததும்பி நிற்கிறது.
கதையின் போக்கில் பின்னர் நிகழப்போகும் துயரத்தின் அறிவிப்பாய் ஒலிப்பது போல செனாய் கரைந்து செல்கிறது.
சோக ரசத்தில் மிளிரும் ஒரு அற்புத இசைக்கருவியை மகிழ்ச்சி கரைபுரண்டோடும் ,உணர்ச்சி ததும்பும் பாடல்களிலும் வைத்த நுட்பம்,லாவண்யம், விழிப்புணர்வு தூண்டும் புதுமை தவிர வேறென்னவாக இருக்க முடியும்!
செனாய் வாத்தியம் என்பது துயரத்தை அறிவிக்கும் ஒரு இசைக்கருவி என்ற தப்பான கருத்து தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.இதுமாதிரியான ஒரு அடையாளத்தை சினிமாவும் ,வானொலிகளும் கொடுத்திருந்த என்பது மறுக்க முடியாததாகும்.குறிப்பாக வானொலிகளின் அஞ்சலி நிகழ்வுகள் செனாய் வாத்தியமின்றி இடம்பெறாமையும் இதுமாதிரியான ஒரு தோற்றப்பாங்கு ஏற்படக்காரணமாகின.
குறிப்பாக ஈழத்து தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு மரண இசைக்கருவி என்று கூறுமளவுக்கு மரணஅஞ்சலி நிகழ்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட வாத்தியம் ஆகும்.
வடஇந்திய இசைக்கருவியாக செனாயின் உள்ளார்ந்த இயல்பில் சோகம் கவிந்திருந்தாலும் ,மகிழ்ச்சியிலும் பூரண இன்பத்தில் திளைக்க வைக்கக்கூடியதாகும்.வட இந்தியத் திருமணங்களில் மங்களவாத்தியம் செனாய் !
மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் செனாய் வாத்திய இசையில் மகிழ்ச்சி ஓங்கி நிற்கும் பாடல்களுக்கு மேலும் சில உதாரணங்ககளை கீழே தருகின்றேன்.
கண்களும் காவடி சிந்தாகட்டும் – எங்கவீட்டுப்பிள்ளை
தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் [வாழ்க்கைப்படகு]
துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு- [மோட்டார் சுந்தரப்பிள்ளை ]
தென்றல் வரும் சேதி தரும் – [ பாலும் பழமும் ]
போய் வா மக்களே போய் வா – கர்ணன்
என் உயிர் தோழி கேளடி சேதி – கர்ணன்
தித்திக்கும் பால் எடுத்து – [ தாமரை நெஞ்சம் ]
தேடித் தேடி காத்திருந்தேன் – [பெண் என்றால் பெண் ]
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோவிலிலே [இருமலர்கள் ]
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் [ பெற்றால் தான் பிள்ளையா ]
பொட்டு வைத்த முகமோ [சுமதி என் சுந்தரி ]
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் [ அவளுக்கென்றோர் மனம்]
தீர்க்க சுமங்கலி வாழகவே [தீர்க்க சுமங்கலி ]
திருப்பதி சென்று திரும்பி வந்தால் [ மூன்று தெய்வங்கள்]
சோகப்பாடல்களில் மிக இயல்பாய் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வாத்தியக்கருவியை மகிழ்ச்சிப்பாடலிலேயே எவ்வளவு அற்புதமாகத் தந்தார்கள் என்றால் அதன் இயல்பிலேயே சோகம் கொட்டும் இசைக்கருவியை வார்த்தையால் வர்ணிக்கமுடியாத வகையில் உணர்ச்சி பீறிட்டுப்பாயும் வகையில் தந்து இசைரசிகர்களைக் கிற்ங்கடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் தவறேதுமில்லை.அந்தளவுக்கு சோகரசம் ததும்பும் பாடல்களிலும் அள்ளித்தந்திருக்கின்றார்கள்.
சோகப்பாடல்கள்:
மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பாடல்களில் எனக்கு அதிகம் பிடித்த சோகப்பாடல்களில் அதியுன்னதமான சில பாடல்களைத் தருகிறேன்.வார்த்தையால் வர்ணிக்கமுடியாத பாடல்கள் என்று நான் கருதும் இப்பாடல்களை குறிப்பிடாமல் இக்கட்டுரை நிறைவடையாது என்பதாலும் அதை குறிப்பிடாமல் என்னாலும் இருக்க முடியாது என்பதாலும் அவற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
இந்தப்பாடல்களை கண்ணீர்வராமல் என்னால் கேட்கமுடிவதில்லை.இப்பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்தது இசைதான் என்பதும் பாடலின் வரிகள் அதனோடு மாற்றொணாவண்ணம் பின்னிப்பிணைந்து இருப்பதால் பாடல் உயர் நிலையை எய்திநிற்கின்றமையாலும் கூடுதல் மதிப்பு ஏற்படுகிறது.
மெல்லிசைமன்னர்கள் , கண்ணதாசன் , சுசீலா இந்தக் கூட்டணியில் வந்த அனைத்துப் பாடல்களும் வெற்றியின் உச்சங்களைத்
தொட்டவையாகும்.குறிப்பாக 1960 களில் வெளிவந்த பாடல்களை பற்றி சொல்லவே தேவையில்லை.அதில் சோக உணர்வில் உச்சம் தொடும் பாடல்களில் சில.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் [ பாக்கியலட்சுமி 1961 ]
நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு [ ஆனந்த ஜோதி 1963 ]
எட்டடுக்கு மாளிகையில் [ பாத காணிக்கை 1962 ]
பாடல்:1
மாலைப்பொழுதில் மயக்கத்திலே – [ பாக்கியலட்சுமி ]
நன்றாகக் பாடக்கூடிய தனது சிநேகிதியிடம் பாடல் பாடும்படி கேட்கும் போது , தனது மனதில் இருப்பதை பூடகமாக வெளிப்படுத்தும் பாடல்.
வீணை இசையுடன் மகிழ்ச்சியாக ஆரம்பமாகும் இந்தப்பாடல் ,நாயகியின் துயரத்தை வெளிப்படுத்துவதாயும் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாடலில் செனாய் வாத்தியம் துயரத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்படுவதுடன் அமைக்கப்பட்ட ஹிந்தோள ராகத்தின் உயர்வையும் , மேன்மையையும் உச்சத்தில் வைத்து நம்மை சிலிர்க்க வைக்கிறது.
பல்லவி முடிந்ததும் அருமையான வீணை மீட்டலும் ,தாவிச் சென்று பாடலுக்குள் கரைக்கும் வயலின் இசையும் ஒன்றிணைய அனுபல்லவி ஆரம்பிக்கிறது.
அனுபல்லவியில்..
மணம் முடித்தவர் போல் அருகினில் ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி…
என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் செனாய் உருக்கமும், நெகிழ்ச்சியும் தந்து நம்மைக் கரைய வைக்கிறது.
அனுபல்லவியைத் தொடர்ந்து பொங்கி வரும் வயலின்களும் ,அதற்கு அணைகட்டி ஆற்றுப்படுத்தும் வீணையிசையும் அதைத் தொடர்ந்து வரும் செனாய் இசையும் பாடலின் உச்சக்கட்டமாக துயரத்தின் உச்சத்தை தொட்டு கனிந்து குழைய சரணம் ஆரம்பிக்கிறது.
கனவில் வந்தவர் யார் எனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி ….
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி ..
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் செனாய் இசை ,நெகிழ்ந்து, கனிந்து கரைந்து துயரத்தின் வடிவாய் நிற்கும் நாயகியின் சோகத்தை நம்முடன் இணைத்துவிடுகிறது.
வீணை இசையுடன் மகிழ்ச்சியாய் ஆரம்பிக்கும் பாடல் துயரத்தின் துளிகளை நம்முள் சிந்திவிட்டு முடிகிறது.
புகழபெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா குரசேவா கூறிய “There is nothing that says more about its creator than the work itself.” என்ற புகழபெற்ற வாசகம் மெல்லிசைமன்னர்களுக்கு சாலவும் பொருந்தும்.
ஆணிவேரான மரபு ராகங்களில் சஞ்சரித்து புதிய ரசனைகளைத் திறந்துவிட்ட, உணர்வின் புதிய எல்லைகளைத் தொட்டு படைப்பூக்கத்தில் சாகசம் காட்டிய மகாகலைஞர்களின் அற்புதப்படைப்பு இந்தப் பாடல்.காலத்தால் மென்றுவிட முடியாத பாடல்.
பாட்டு :2
எட்டடுக்கு மாளிகையில் [ பாத காணிக்கை 1962 ]
இந்தப்பாடல் அவலச்சுவையின் உச்சம்.
வாத்தியக்கலவையில் அதிமேதமைகாட்டும் இந்தப்பாடலில் செனாய் இசையுடன் நாதஸ்வரம் ,தவில் , குழல் இசையையும் கலந்த அற்புதத்தை எப்படி எழுதுவது !?
இசைப் பேராளுமையுடன் திரையின் காட்சியை கண்முன் நிறுத்துகிறார்கள்.
பல்லவி முடிந்து வரும் இசையில் நாதஸ்வரமும் ,செனாயும் ஓங்கி ஒலித்து ,இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று கலந்து தர அனுபல்லவி [ “தேரோடும் வாழ்வில் என்று “] ஆரம்பிக்கிறது.
அந்த வரிகளின் இடையிலும் [ “போராட வைத்தானடி, கண்ணில் நீரோட்ட விடடானடி ” ] செனாய் ஒலித்து நம்மை நெகிழ வைக்கிறது.
தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி – கண்ணில்
நீரோட விட்டானாடி
என்ற வரிகளுக்கு பின்னால் ஒலிக்கும் செனாய் இசையை முதல் முறையும் , மீண்டும் அதே வரிகளை பாடும் போது இரண்டாவது முறையாக குழலையும் பயன்படுத்தி சிலிர்க்க வைக்கிறார்கள் மெல்லிசைமன்னர்கள்.
பின்னர் அதை தொடரும் இடையிசையில் [ “கையளவு உள்ளம் வைத்து ” என்ற வரிகளுக்கு முன்பாக வரும் இசையில் ] உணர்ச்சி பெருக்கெடுக்கும் வண்ணம் ,அது கனிந்து கனிவு தரும் இசையாக ஓங்குகிறது.அந்த கனிவின் நிறைவை கண்ணதாசன் தனது வரிகளால் அழகாக நிறைவுசெய்கிறார்.வழமை போல பாடலின் மென்மையான சோகத்தை
கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி
என்ற வரிகளிலும் பாடலின் உச்சத்தை நாதஸ்வர , செனாய் இசைகளின் ஒன்றிணைவில் ஓங்கி ஒலிக்க வைத்து பெருஞ் சோகத்தில் ஆழ்த்துகிறார்கள்.
காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் -இந்த
காதல் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி
என்ற வரிகளை பாடும் போது அந்த சோகம் நமக்கு வந்தது போன்ற உணர்வைத் தருகிறார்கள்.பாடலின் நிறைவில் மீண்டும் வரும் பல்லவியில் செனாய் உருக்கமாக ஒத்தூதுகிறது.
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு – ஆனந்த ஜோதி [1963]
வீடு நோக்கி ஓடி வந்த என்னையே [ சோகப்பாடல்] – பதிபக்தி
இந்த நாடகம் அந்த மேடையில் – பாலும் பழமும்
என்னையார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் – பாலும் பழமும்
நிலவே என்னிடம் நெருங்காதே [ ராமு ]
தேரேது சிலையேது திருநாள் ஏது – பாசம்
உனக்கு மட்டும் உனக்கு – மணப்பந்தல்
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் – பாசமலர் -டி.எம்.எஸ்
ஆத்தோரம் மணல் எடுத்து –
தரை மேல் பிறக்க வைத்தான் – படகோட்டி –
ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் – சாந்தி
பல்லாக்கு வாங்கப் போனேன் –
பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா – பார் மக்களே பார்
நிலவே என்னிடம் நெருங்காதே – ராமு
இதயம் இருக்கின்றதே தம்பி – பழனி
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் – பஞ்சவர்ணக்கிளி
ஒருவனுக்கு ஒருத்தி என்று – தேனும் பாலும்
நல்ல மனைவி நல்ல பிள்ளை
சுமை தாங்கி சாய்ந்தால்
அடி என்னடி ராக்கம்மா [பட்டிக்காடா பட்டணமா ]
மலர்களைப்போல் தங்கை – [பாசமலர்]
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் [ மணப்பந்தல்]
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் [ வாழ்ந்து காட்டுகிறேன் ]
ஒருநாள் இரவு பகல் போல் நிலவு [ காவியத்தலைவி ]
கல்யாணப்பந்தல் அலங்காரம் [ தட்டுங்கள் திறக்கப்படும் ]
சைலோபோன் [ xylophone ]
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி ,17 ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க அடிமைகளால் மத்திய அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.மரக்கட்டைகளால் உருவான இந்த வாத்தியம் தாள ஒலியுடன் இணைந்து காதுக்கு இனிய ஒலியை தரும் இயற்கையான,ஆபிரிக்க நாட்டுப்புற இசைக்கருவியாகும்.
காலனி காலத்தில் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கநாடுகளில் புகழபெற்ற இந்த வாத்தியம் சில நாடுகளில் பிரதான வாத்தியமாகப் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக குவாட்டமாலா நாட்டின் தேசியவாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு பெயர்பெற்று விளங்குகிறது. இந்நாடுகளில் இதனை Marimbo என்று அழைக்கின்றனர்.
மெக்சிக்கோவில் சிலமாற்றங்களை பெற்ற இந்த வாத்தியம், மத்திய அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது..லத்தீன் அமெரிக்க வாத்தியம் என அறிமுகமாகி , பின் வட அமெரிக்காவில் [USA] மேலைத்தேய இசையில் பயன்பட தொடங்கியது.
மத்திய அமெரிக்காவின் வீதியோர இசைக்கருவியாக மட்டுமல்ல, பெரிய இசை நிகழ்ச்சிகளிலும், பின் 1940களில் ஐரோப்பிய உயர் இசையான “சிம்பொனி “இசை வரையும் பாவனைக்கு வந்துவிட்டது.
1960 களில் தமிழ் திரையில் பயன்பாட்டுக்கு வந்த இந்த இசைக்கருவியை அதிகம் பயன்படுத்தி காதுக்கு இனிமையான பாடல்களைத் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர் என்று துணிந்து கூறலாம்.
சைலோபோன் [ xylophone ] பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில:
————————————————————————————————————————-
01 தங்க மோகனத் தாமரையே – புதையல் 1957
மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த ஆரம்ப காலப்பாடலான இந்தப்பாடலில் மிகத்தெளிவாக சைலபோன் இசையை கேட்டு வியந்து போகிறோம்.1957லேயே சைலபோன் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டு ,அவரின் இசைத்தேடலையும் வியக்கிறோம்.
02 மதுரா நகரில் தமிழ் சங்கம்
இந்தப்பாடலின் ஆரம்ப இசையிலேயே , குழலுடன் இணைத்து Xylophone ஐ மிக அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.பாடலின் இனிப்புக்கு முத்தாய்ப்பாக இந்த வாத்தியத்தையும் இணைத்து தருகிறார்கள்.
03 கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா – ஆலயமணி
இந்தப்பாடலின் ஆரம்பத்திலும் இந்த வாத்தியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.வாசிப்பு முறையில் வானத்தில் பறப்பது போன்ற உணர்வையும் கனவில் மிதப்பது , அமானுஷ்ய ,அதீத உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
04 சிட்டுக் முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே- புதியபறவை 1963
மலைவாழ் மக்களை பிரதிபலிக்கும் ஆரம்பத் தாளத்தையடுத்து வரும் ஒரு கணநேர சைலபோன் இசையைத் தொடர்ந்து பாடல் ஆரம்பிக்கிறது.பாடலின் இடையிடையேயும் ஜலதரங்கம் சந்தூர் , குழல், வயலின் இசையுடன் இயைந்து துலாம்பரமான எடுப்பும் , பொலிவும் , சைலபோணை மிக லாகவமாகக் கலந்த செம்மையின் அழகு இந்தப்பாடல்.இடையிடையே கலந்த வரும் பி.சுசீலாவின் கம்மிங் பாடலின் கம்பீரத்தையும் , இனிமையையும் ,பரவசத்தையும் தருகிறது.இனிமை இழையோடும் இந்தப்பாடல் கால எல்லையைக் கடந்து நிற்கும் குளிர்ந்த காற்று .
05 அம்மம்மா கேளடி தோழி – கறுப்புப்பணம்
சந்தூர் , ரம்பட் ,குழல் ,சைலபோன் பொங்கஸ், சாக்ஸ் கிட்டார் என பலவகை இசைக்கருவிகள் ஹார்மோனியுடன் பயன்படுத்தப்பட்ட பாடல்.பல்லவி முடிந்து வரும் இடையிசையில் சைலபோன் ஒரு சில கணங்கள் ஒலித்த பின் அனுபல்லவி [ பிஞ்சாக நானிருந்தேனே ] மிக அருமையாக ஒலிக்கிறது.
06 கண்ணுக்கு குலமேது – கர்ணன்
இதைப்பாடலிலும் சரணத்திற்கு முன்னர் ” கொடுப்பவர் எல்லாம் மேலாவார் ” என்ற வரிகளுக்கு முன்னாக சந்தூர் , குழல் இனிமையுடன் சைலபோன் இனிமைக்கு மறைந்திருந்து இனிமை கொடுக்கிறது.
07 பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் – பணம் படைத்தவன்
அமானுஷ்ய உணர்வைத் தரும் இந்தப்பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் மற்றும் சைலபோன் இயைந்து இனிமையூட்டுகிறது.
08 கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா – ஆலயமணி
தந்திக்கருவிகளின் சலசலப்பை தென்னங்கீற்றாய் பொலிவுடன் தரும் அமானுஷ்யப்பாடல்.அலையலையாய் பொங்கி பெருகி மறைந்து மீண்டும் எழுந்து வரும் இனிமை பொங்கும் ஹம்மிங் இந்தப்பாடலுக்கு சைலபோன் நிறைவையும் பொலிவையும் தருகிறது.ஆகாயத்தில் மிதக்கும் உணர்வை தந்த பாடல்.
09 நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் – வாழ்க்கை வாழ்வதற்க்கே
வைரமாக மின்னும் சந்தூர் ஒலியுடன் குதூகலமாக ஆரம்பமாகும் இந்தப்பாடலில் , மிதந்து வரும் குளிர்ந்த காற்றின் இதத்தை சைலபோன் மறைந்து நின்று பாடலின் இனிமையை உயர்த்துகிறது.
10 எங்கே நிம்மதி எங்கே நிம்மதி – புதிய பறவை
நிம்மதியில்லாத நாயகன் கனவிலும் தவிப்பது போன்றமைந்த இந்தப்பாடலில் ஆச்சரியமான இசைக்கலவைகளை அமைத்திருப்பார்கள்.அன்றைய காலத்தில் அதிகமான வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல் என்ற பெருமை இந்தப்பாடலுக்கு உண்டு.
பாடலுக்கு தேவையான உணர்வுகளை மிக அற்புதமாக ,அசாத்தியமாக இசையமைப்பாளர்கள் வெளிப்படுத்தியிருக்கும் இப்
பாடலின் ஆரம்பம் சைலபோனுடன் தான் ஆரம்பிக்கிறது .அதுமட்டுமல்ல பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் [ எனது கைகள் மீட்டும் போது ,,,,என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் ] சைலபோன் இசையைக் கேட்கலாம்.
கோரஸ் ,வயலின்,குழல் , பொங்கஸ் என வாத்தியங்கள் பெரும் அணி தங்குதடை இல்லாமல் பிரவகித்து ஓடும் பாடல்.
11 புதிய வானம் புதிய பூமி – அன்பே வா
இந்தப்பாடலின் ஆரம்பத்திலும் இந்த வாத்தியத்தின் மதுர ஒலியை துல்லியமாக நாம் கேட்கலாம்.
12 ஒரு ராஜா ராணியிடம் – சிவந்தமண்
வெளிநாட்டு காட்சிகள் கொண்ட இப்பாடலில் மிகக்கச்சிதமாக பயன்படுத்தப்பட்ட சைலபோன் இசை ஒளிந்திருந்து ஜாலம் காட்டுகிறது.
13 பொங்கும் கடலோசை – மீனவ நண்பன்
1960களில் மென்மையான முறைகளில் இந்த வாத்தியத்தைக் கையாண்ட மெல்லிசைமன்னர் தனியே இசையமைத்த இந்தப்பாடலில் மிக துல்லியமாகத் தெரியும் வண்ணம் , தெளிவான தாள நடையில் , அதை தனியே தெரியும் வண்ணம் கொடுத்த முக்கியமான ஒரு பாடல்.
14 யாதும் ஊரே யாவரும் கேளிர் – நினைத்தாலே இனிக்கும்
இந்தப்பாடலிலும் துல்லியமாக சைலபோன் இசையை கேட்கலாம்.
இவை மட்டுமல்ல , பொதுவாக வெளிநாடுளில் படப்பிடிப்பு செய்யப்பட்ட காட்சிகளின் பின்னணியிலும் இந்த வாத்தியம் பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் [ உலகம் சுற்றும் வாலிபன் ,சிவந்தமண் போன்ற படங்களில் ] அவதானிக்கலாம்.
செனாய் வாத்திய இசையின் இனிமையை அதன் தன்மையறிந்து அசாதாரண சூழ்நிலைகளுக்கு பயன்படுத்தியதையும் , சைலபோன் என்ற தென் அமெரிக்க வாத்தியத்தை ,அதன் இனிமையை மற்ற வாத்தியங்களுடன் மறை பொருளாக இணைத்து இசையின் மதுரத்தை தேனாகத் தந்த புதுமையைக் காண்கிறோம்.
மரபோடிணைந்த இசையின் வாரிசுகளாக அறிமுகமானாலும் தமக்கு வெளியே உள்ள இசைவகைகளை இனம் கண்டு கொண்டதுடன் , அதற்கு மாறான எதிர் நிலையில் உள்ளதென அறியப்பட்ட இசைவகைகளை படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
இவர்களது சமகால ஹிந்தி திரையிசையமைப்பாளர்கள் முன்மாதிரியான பாடல்களைத் தந்து சென்றதை மிக நுணுக்கமாகக் அவதானித்து தங்களுக்கேயுரிய பாங்கில் தனித்துவம் காட்டி மக்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்தும் சினிமா இசையைத் தம் பக்கம் திருப்பிய பெருமை மெல்லிசைமன்னர்களுக்கு உண்டு.
இசை நுட்பங்களை வெளிநாடுகளிலிருந்து அறிந்தார்கள் என்பதைவிட சமகாலத்து ஹிந்தி இசையமைப்பாளர்கள் வழிமுறையைப் பின்பற்றியவர்கள் என்றே எண்ணத் தோன்றுமளவு ஹிந்தி இசை தாக்கம் விளைவித்துக் கொண்டிருந்தது என்றே சொல்லத்தூண்டுகிறது.
மெல்லிசைமன்னர் பல்வகை வாத்தியங்களை விதந்து பாராட்டும் வண்ணம் தனது பாடல்களில் பயன்படுத்தியிருப்பதை நாம் காண்கிறோம்.பியானோ , எக்கோடியன் , ரம்பட் , சாக்ஸபோன்,,ஹார்மோனிக்கா , ஆர்மோனியம் , மவுத் ஓர்கன் , கிட்டார் , மேண்டலின் , பொங்கஸ், பிரஸ் ட்ரம்ஸ் , போன்ற மேலை வாத்தியங்களும் , சந்தூர் , சாரங்கி , சித்தார், செனாய் போன்ற மைய நீரோட்ட வட இந்திய வாத்தியங்களை வைத்து புது உலகைக் காட்டி படைப்பூக்கத்தில் உன்னதங்களை நிகழ்த்திக்காட்டினார்கள்.
மேற்குறித்த வாத்தியங்களில் அமைந்த பாடல்கள் சிலவற்றை பறவைப்பார்வையில் பார்ப்போம்.
[தொடரும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக