வியாழன், 18 ஜனவரி, 2018

RSS போட்டோ ஷாப் கருத்து கணிப்பு ,,,, ரஜினிக்கு கானல் நீரை காட்ட ஒரு கருத்து கணிப்பு

மினன்ம்பலம் :டி.எஸ்.எஸ்.மணி சிறப்புக் கட்டுரை: கருத்துக்கணிப்பு கண்ணை மறைக்கவா?திடீரென டெல்லியிலிருந்து இயங்கும் ஓர் ஆங்கிலக் காட்சி ஊடகத்தில், தமிழ்நாட்டுக்கு யார் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்துக்கணிப்பை, 16-01-2018 அன்று வெளியிட்டார்கள். எதற்காக இந்த திடீர் சர்வே?
2021ஆம் ஆண்டு வரப்போகிற சட்டமன்றத் தேர்தலுக்காக, இப்போது அந்தப் பிரபல ஊடகம் ஏன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளிபிட வேண்டும்? ஏதோ அரசியல் காரணம் இல்லாமல் இப்படி ஒரு வெளியீடு வராது என எல்லாருமே புரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட அந்தத் தொலைக்காட்சி, சமீபகாலங்களில் பாஜக சார்பாக குறிப்பாக, நரேந்திர மோடி சார்பாக இயங்கிவருவதை எல்லோருமே அறிவார்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு 8 முதல் 11.30 மணி வரை அந்தக் கருத்துக்கணிப்பு நடைபெற்றது. இதுவரை அந்தக் குறிப்பிட்ட தொலைக்காட்சி, எந்த ஒரு தனிநபருக்காகவும் கருத்துக்கணிப்பு நடத்தியதே இல்லை. ஆகவே, இது வேறு அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படுகிற முயற்சி என்பது தெளிவாகிறது. குறிப்பிட்ட தொலைக்காட்சியும், கார்வி என்ற ஒரு நிறுவனமும் சேர்ந்து இந்த கருத்துக்கணிப்பைச் செய்துள்ளன. அதில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு, 36% வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்து, ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்கு 16% வாக்காளர்கள் ஆதரித்துள்ளதாகக் காட்டப்படுகிறது.
இவர்கள் இருவர் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். அதிமுக கட்சி உடைந்து போவதாகவும் கூறி விட்டார்கள். திமுகவுக்கு 130 தொகுதி என்றும், ரஜினிக்கு (கட்சியையே இன்னமும் தொடங்காதவருக்கு) 33 தொகுதியும் இவர்கள் போட்டுள்ளார்கள். அதனாலேயே, ரஜினிக்கு மேலும் வாக்கு எண்ணிக்கை கூடப் போகிறது என்றும் ஆரூடம் சொல்லிவிட்டார்கள்.
இன்னமும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடக்க இருக்கின்ற தேர்தலில், ரஜினிக்கு அதிகமாகச் செல்வாக்கு கூடப்போகிறது என்றும், திமுக செல்வாக்கு இப்போது அறிவித்த நிலையிலிருந்து குறையப் போகிறது என்றும், அதனால் அவரது தொண்டர்கள் உற்சாகமாக இருக்கலாம் எனவும், அரசியல் கட்சிகள் அவரைக் கூட்டணிக்குச் சேர்ப்பதில் தயாராகிக் கொள்ளுங்கள் எனவும் கூறுதற்கான கருத்துக்கணிப்பு என்பதுபோல அது தோன்றுகிறது.
கருத்துக்கணிப்பா, விருப்பத்திணிப்பா?
இத்தகைய ஒரு வேடிக்கையான கருத்துக்கணிப்பை, ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துப் பதினைந்து நாள்களிலேயே வெளியே கொண்டுவருகிறார்களே, இது மக்களுக்குப் புரியாதா எனக் கேட்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் எந்த இடத்திலும், வாக்காளர்கள் மத்தியில் சலனமே இல்லாமல் இருக்கிறது. இது போன்ற கருத்துக்கணிப்புகள், 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியையும், 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா குறைவான அளவே தொகுதிகளை வெல்வார் எனவும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும் தவறாகக் கணித்த கருத்துக்கணிப்புகளை நாம் நிறைய பார்த்துவிட்டோம். அமெரிக்காவில்கூட அதிபர் தேர்தலில் எல்லா ஊடகங்களும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெறுவார் என வெளியிட்ட கருத்துக்கணிப்பு பொய்யானதைக் கண்டோம்.
ஆகவே, இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் மீது பொதுவாக மக்களுக்கு நம்பிக்கை வருவதில்லை. ஆனாலும் அதை நடத்துபவர்கள், இதைவிட்டால் வேறு என்ன வழி என்று தங்களது விருப்பங்களைப் பரப்ப இவ்வாறு கணிப்புகளை வெளியிடுகின்றனர்.
கணிப்பை நடத்தியவர்களின் பின்னணி
இந்தக் குறிப்பிட்ட ஊடகத்தின் ஆசிரியர் அனூப் பூரி யார் தெரியுமா? மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற உடனேயே, பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், மோடியும் அனூப் பூரியும் சேர்ந்தே ஒரு தனியார் விமானத்தில் நாகபுரியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குச் சென்று, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தைச் சந்தித்தார்கள். அந்த அளவுக்கு இந்த இதழ் ஆசிரியருடன் மோடி நெருக்கமானவர் என்பது கேரவன் ஏட்டில் வந்த செய்தி.
குறிப்பிட்ட கருத்துக்கணிப்பை செய்த நிறுவனமான கார்வி குரூப் பற்றி நாம் உற்றுப்பார்க்க வேண்டுயிருக்கிறது. மோடி அரசாங்கத்தால், தேசிய ஓய்வூதியம் சேவை என்ற என்.எஸ்.ஏ. பதிவுகளை வைத்திருக்கும் ஒப்பந்தம், இந்த கார்வி புள்ளிவிவர மேலாண்மை லிமிடெட் என்ற நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, கார்வி நிதி சேவை என்ற நிறுவனம், இந்தியாவின் பெரும் கார்ப்பரேட்டுகளில் ஒரு குடும்பத்தில் சகோதரர்களின் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்குப் பணி செய்கிறது. 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்தியப் புலனாய்வு நிறுவனமான சிபிஐ மூலம், ஐபிஓ ஊழல் என்று ஹைதராபாத்தில், குறிப்பிட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. கார்வி நிறுவனம் இந்தியாவில் பங்குச் சந்தையில் பிரபலமான நிதி சம்பந்தப்பட்ட யூகங்களைச் செய்வதில் புகழ்பெற்றவர்கள். ஐபிஓ என்பது ஆரம்ப பொது நிதி வழங்கல் எனப்படும். அதாவது, அதுதான், பங்குச் சந்தையில் உறுப்பினர்களை இணைக்கும் நிறுவனம். ஒரே இரவில் பங்குகளின் விலைகள் எகிறிச் செல்வதைக் கண்டே, சிபிஐ சோதனை வந்தது. அவ்வாறு இருந்தும், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதியம் அவர்களிடம் கணக்கு வைக்க மோடி அரசால் கொடுக்கப்பட்டது.
இதே நிறுவனம் ஆதார் எண் விவகாரத்தில், 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் யுஐடிஐஏ மூலம் தனிநபர் அந்தரங்க அடையாளங்கள் எடுக்கப்படுகையில், தவறு நடந்ததற்காக சிபிஐ சோதனைக்கு உள்ளாகியது. மகாராஷ்டிரா அரசு, விவசாயக் கடன் தள்ளுபடியில், ஆதார் எண்ணில் போலியாகச் சேர்க்கப்பட்ட பலரைக் கண்டறிந்து, தனது கடன் தள்ளுபடியையே தள்ளிப்போட்டது. மாணவர் அல்லாதவருக்கு உதவித் தொகை, இல்லாத பள்ளிகளுக்கு மானியம் எனப் போலி ஆதார் புள்ளிவிவரங்களைக் கண்டு டிரிப்யூன் ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியது. அப்போது புதிய எண்களைக் கொடுக்க இதே நிறுவனமான கார்வி புள்ளிவிவர மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அது அமெரிக்காவில் உள்ள பொது அட்லான்டிக் என்ற நிறுவனத்தின் பெரும்பங்குகளைக் கொண்டது வெளியே வந்தது.
இவ்வாறு நாட்டின் முக்கிய விஷயங்களில், ஏற்கெனவே கேள்விக்கு உள்ளான நிறுவனத்தின் கைகளில், அரசின் முக்கிய விவரங்களைக் கொடுப்பதிலிருந்து யார், யாருக்குச் சேவை செய்ய எத்தகைய தொடர்புகள் பயன்படுகின்றன என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. அத்தகைய கார்ப்பரேட்டுகளின் கருத்துக்கணிப்பு எப்படித் தயார் செய்யப்படும் எனபதும், எதற்குத் தயார் செய்யப்படும் என்பதும் எல்லோருக்கும் தெரிகின்ற காலம் இது. அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள், அவர்களது கணக்குகள், விவகாரம். அத்தகைய நிறுவனங்களில் 33% நிறுவனங்களும் இந்த கார்ப்பரேட்டிடம் இருக்கிறது. ரொக்க நோட்டு மதிப்பழிப்பு நேரத்தில், ரூ.60,000 கோடி இவர்கள் மூலம் திருப்பிவிடப்பட்டது என்கிறார்கள். பல பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு, ஜிஎஸ்டி ஆலோசகராகவும் இந்த நிறுவனம் பணியாற்றுகிறது.
சிபிஐ சோதனை நடந்த ஒரு நிறுவனத்துக்கு, 2015இல் செபி ஆறு மாதங்கள் தடை விதித்தது. இதன் நிறுவனர்களில் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டார். சிக்கிம் நீர்வழி மின்சார உற்பத்தியில், ஊழல் என்று இதே நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பல குற்றச்சாட்டுகளிலிருந்து இந்த நிறுவனம் நீதிமன்றம் மூலம் வெளிவந்துவிட்டது என்றாலும், அப்படிப்பட்ட பெரிய நிறுவனத்துக்கு, நமது தமிழ்நாட்டு அரசியலில் இப்படிக் கணிப்பை வெளியிடும் தேவை என்ன என்பதே கேள்வி. அந்தக் குறிப்பிட்ட நிறுவனப் பொறுப்பில் உள்ளவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், வைணவ சமூகம் என்பதும் இன்று ஆண்டாள் விவகாரம் அரசியலாக்கப்படும் நேரத்தில் நாம் கண்டுகொள்ளவில்லை என வைத்துக்கொள்வோம்.
இதேநேரத்தில், தமிழ்நாட்டு ஏடு ஒன்றிலும், கருத்துக்கணிப்பில், ஸ்டாலினுக்கு 37.72% எனவும், ரஜினிக்கு 17.3 % எனவும் கணிப்பு வெளியாகி இருப்பதிலிருந்து என்ன புரிகிறது? இவை ஒரே நேரத்தில் தற்செயலாக நிகழ்ந்தவை எனக் கொள்ளலாமா அல்லது ஏதோ புரிந்துவிட்டது என சிரித்துக்கொள்ளலாமா?
கட்டுரையாளர்: டி.எஸ்.எஸ்.மணி
தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: manitss.mani@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக