புதன், 31 ஜனவரி, 2018

வசூல் ஆட்சியும் வசூல் போலீசும் ....

சவுக்கு :1996ல் முதல்வரான கருணாநிதி, காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகி விட்டது என்று சட்டப்பேரவையிலேயே சொன்னார். அவரது வார்த்தை உயர் அதிகாரிகள் முதல், கடைநிலை காவலர் வரை பாதித்ததை என்னால் உணர முடிந்தது.     பல அதிகாரிகள், என்னங்க. சிஎம் இப்படி பேசிட்டாரு என்று வெளிப்படையாகவே வருத்தப்பட்டனர்.  அந்த காலகட்டத்தில்தான் சென்னை நகரின் மையப் பகுதியில், லயோலா கல்லூரி அருகே ஒரு நிஜமான என்கவுண்டர் நடந்தது.
ஒரு தொழிலதிபரை கடத்திச் சென்று மிரட்டி பணம் கேட்டு, பணத்தை பெறுவதற்காக வந்திருந்த ரவுடிகள் ஆசைத்தம்பி மற்றும் மனோ ஆகியோரை சென்னை மாநகர காவல்துறையின் அதிகாரிகள், சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்துக்கு காவல்துறையை சட்டப்பேரவையிலேயே பாராட்டிய கருணாநிதி, “கள்ளச்சாராய பானைகள் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாயும்” என்று அறிவித்தார்.
அமைச்சுப் பணியாளர்களாக பணியில் சேரும் ஒவ்வொரு இள நிலை உதவியாளரும், அக்கவுன்ட் டெஸ்ட் என்ற கணக்குத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த கட்ட பதவி உயர்வு கிடைக்கும்.  எனக்கு கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்பதால், அதற்காக வகுப்பு ஒன்றில் சேர்ந்தேன்.  சென்னை டிஎம்எஸ் வளாகத்தின் உள்ளே, காலியாக உள்ள அரசு அலுவலகம் ஒன்றில், சனிக்கிழமை சனிக்கிழமை வகுப்புகள் நடக்கும்.    அவர் பெயர் ஜெயக்குமார்.

அந்த பாடத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடுவது எப்படி, விடுமுறைகளை கணக்கிடுவது எப்படி, ஊதிய உயர்வு கணக்கிடுவது எப்படி, ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வகுப்பெடுக்கப்படும்.   ஜெயக்குமார் பாடம் நடத்திக் கொண்டே, கருணாநிதி நிர்வாக ரீதியாக செய்த பல்வேறு சீர்திருத்தங்களை பட்டியலிடுவார்.   தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பிறந்த நாளன்றே ஓய்வு பெறுவார்கள்.  உதாரணத்துக்கு ஒருவர் 9ம் தேதி பிறந்திருக்கிறார் என்றால், 8ம் தேதி ஓய்வு பெறுவார்.
ஓய்வூதியம் கணக்கிடுவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை இது ஏற்படுத்தியது.   ஒரு மாதத்தில் இரண்டாம் தேதிக்கு பிறகு பிறந்த அத்தனை அரசு ஊழியரும் அந்த மாதத்தின் இறுதி நாளில் ஓய்வு பெறும் வகையில் விதிகளை மாற்றியவரும் கருணாநிதிதான்.   அதே போல, அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு, அவர்கள் பணியில் சேர்ந்த தேதியை கணக்கிட்டு கண்ட கண்ட தேதியில் வரும்.  அவற்றை ஒழுங்குபடுத்தி, ஒருவர் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டிலும் ஊதிய உயர்வு என்று முறையை அறிமுகப்படுத்தியதும் கருணாநிதிதான்.   இது போல நிர்வாக ரீதியாக பல்வேறு  சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி, நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தியதில் திமுக தலைவர் கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு. 1998ம் ஆண்டு அவர் அமலாக்கிய டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம்தான் ஓரளவுக்கு ஊழலை குறைத்துள்ளது.  இன்று அந்த சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்த வெளி வரும் கலையை அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கண்டு கொண்டார்கள் என்றாலும், அந்த சட்டம் ஒரு வகையில் ஊழல் செய்வதை கடினமாக்கியிருக்கிறது.

அன்பு உடன்பிறப்பு ஜாபர் சேட்டுக்கு பொங்கல் பரிசு வழங்கும் கருணாநிதி
எந்த மேலாண்மை கல்லூரியிலோ அல்லது சர்ச் பார்க் கான்வென்டிலோ படிக்காத கருணாநிதி நிர்வாகத்திலும், மேலாண்மையிலும், மிகச் சிறப்பாக செயல்பட்டார்.   அந்த காலத்தில் அவரோடு பணியாற்றிய ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அவர் திறனைக் கண்டு வியந்திருக்கின்றனர்.
இதற்கெல்லாம் அப்படியே எதிரானவர் ஜெயலலிதா.    எடுத்தேன் கவிழ்த்தேன்தான்.   அரசு எடுக்கும் ஒரு முடிவு எத்தனை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாதவர்.
காவல்துறையால் அடிபட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அவதிப்பட்டவர் கருணாநிதி.   காவல்துறையை நம்பவே மாட்டார்.   எப்படி வேண்டுமானாலும் காவல்துறை மாறும் என்ற அவரது நம்பிக்கை, இன்று வரை நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது.   ஆனாலும், காவல் துறை சீர்திருத்தம் போன்றவற்றிற்கு, கருணாநிதி எப்போதும் மறுப்பு சொன்னதில்லை.
ஆனால் ஜெயலலிதா நம்பியது காவல்துறை அதிகாரிகளை மட்டுமே.  அவர் நம்பிய காவல்துறை அதிகாரிகள் பலர், அவருக்கு துரோகம் செய்தாலும், தொடர்ந்து காவல்துறையையே நம்பியிருப்பார்.   கருணாநிதி ஆட்சி காலத்தில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிச்சயம் விருது கொடுத்திருப்பார்.  சந்தேகம் வேண்டாம்.   ஆனால், ஜெயலலிதா சிறப்பு அதிரடிப்படை தொடங்கிய காலத்திலிருந்து பணியில் இருந்த அத்தனை பேருக்கும், விருது, 3 லட்சம் ரொக்கம், 2 க்ரவுண்டு வீட்டு மனை, மற்றும் ஒரு படி பதவி உயர்வு.  உதாரணத்துக்கு ஒருவர் ஆய்வாளராக இருந்தால் அவர் உடனே டிஎஸ்பியாக பதவி உயர்வு பெறுவார்.
கருணாநிதியிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்தால், அதுக்குத்தானே அவங்களுக்கு சம்பளம் என்று பதில் கேள்வி கேட்பார்.
சிறப்பு அதிரடிப்படை என்பது, ஒரு தண்டனைப் பணியிடம்.  உயர் அதிகாரிகளிடம் மோதுபவர்கள், அதிகமாக லஞ்சம் வாங்குபவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் போன்றவர்களை, நியமிக்கும் தண்டைனையிடமாகத்தான் அது இருந்தது.     ஜெயலலிதாவின் உத்தரவினால், அதிகாரி வீட்டில் தோசை சுட்டுக் கொண்டிருந்த வனுக்கெல்லாம் 3 லட்சம் ரொக்கம், இரண்டு க்ரவுண்டு வீட்டு மனை, ஒரு படி பதவி உயர்வு.

இந்த ஒரு படி பதவி உயர்வு ஏற்படுத்திய நிர்வாக ரீதியான சிக்கல் இன்று வரை, நீதிமன்றங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படி ஜெயலலிதா முட்டாள்த்தனமாக எடுத்த ஒரு முடிவு, இன்று க்ரூப் 1 அதிகாரிகளாக, பணியில் சேரும் நேரடி டிஎஸ்பிக்களின் எதிர்காலத்தையே சூன்யமாக்கியிருக்கிறது.    இது மட்டுமல்லாமல் ஜெயலலிதா எடுத்த மற்றொரு மோசமான முடிவு 2004ம் ஆண்டில், 1000 பெண் உதவி ஆய்வாளர்களை எடுத்தது.     பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும்.  காவல்துறையில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.  ஆனால் ஒரே நேரத்தில் 1000 பெண் உதவி ஆய்வாளர்களை எடுப்பதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஒரு அனுபவமுள்ள மூத்த அதிகாரி முதல்வருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
தற்போது 1000 பெண் உதவி ஆய்வாளர்களும், ஆய்வாளர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்று ஆய்வாளர்களாகிக் கொண்டிருக்கின்றனர்.   இரவு ரோந்துப் பணிக்கு, ஒரு பெண் ஆய்வாளரை அனுப்பினால், அவருக்கு உதவியாக  / பாதுகாப்பாக நான்கு ஆண் காவலர்களை அனுப்ப வேண்டும்.   குடித்து விட்டு, சாலையில் வரும் ஒரு  ரவுடிப் பயல், ஆண் ஆய்வாளரை பார்த்தால் பம்முவான்.  பெண் ஆய்வாளர் தனியாக இருப்பதைப் பார்த்தால் எதிர்த்துப் பேசுவான் என்பதுதானே யதார்த்தம் ?
1000 பெண் உதவி ஆய்வாளர்களை ஒரே நேரத்தில் எடுப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு பேட்சிலும் 300 பேராக எடுத்தால் என்ன குடி முழுகி விடப் போகிறது ?
இதே போல 2011ம் ஆண்டு, இளைஞர் காவல் படை என்ற ஒன்றை உருவாக்கி, முழு நேர அரசு ஊழியராகவும் அல்லாமல், காவலர்களாகவும் அல்லாமல் மாதம் 7500 ரூபாய் தொகுப்பூதியத்தில் அவர்களை தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா.  அந்த முடிவு இன்று வரை காவல்துறைக்கு தலைவலியாக இருந்து வருகிறது.
இவையெல்லாம் ஜெயலலிதாவின் முட்டாள் நிர்வாகத்துக்கு சான்று.
மீண்டும் க்ரூப் 1 டிஎஸ்பிக்களின் கதைக்கு வருவோம்.
தமிழகத்தில் உள்ள மொத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்களில் 33 சதவிகிதம், அதாவது மூன்றில் ஒரு சதவிகிதம் மட்டுமே க்ரூப் 1 தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பவர்களுக்கு.   மீதம் உள்ள பதவிகள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளின் மூலமே. சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் இருந்து வருபவர்கள் வரும்போதே, ஐபிஎஸ் என்ற தகுதியோடு வருவதனால் அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் க்ரூப் 1 அதிகாரிகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் எப்போது காலியிடம் ஏற்படுகிறதோ அப்போதுதான் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.   தற்போது மொத்தம் உள்ள பணியிடங்கள் 263.   இதில் க்ரூப் 1 அதிகாரிகளுக்கான இடங்கள் 80.  மீதம் உள்ள 183ம் சிவில் சர்வீசஸ் தேர்ச்சியாளர்களுக்கு மட்டுமே.
தற்போது க்ரூப் 1 மூலம் பணியில் சேர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ள 80 பேரில் உள்ள அதிகாரிகள் ஓய்வு பெற, ஓய்வு பெறத்தான் இவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளாக முடியும்.  ஐபிஎஸ் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டால்தான், எஸ்பிக்கு அடுத்த டிஐஜி பதவி உயர்வு.   க்ரூப் 1 அதிகாரிகளாக சேர்ந்தவர்களில் துக்கையாண்டி, கூடுதல் டிஜிபி பதவி வரை சென்று ஓய்வு பெற்றார்.  தாமரக்கண்ணன், சேஷசாயி போன்றோர், கூடுதல் டிஜிக்களாக வாய்ப்பு உள்ளது.
ஆனால், 2004ம் ஆண்டு, டிஎஸ்பிகளாக க்ரூப் 1 பணியில் சேர்ந்தவர்களின் நிலை என்ன தெரியுமா ?   2025ம் வருடம்தான் இவர்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து கிடைக்கும்.   இந்த பேட்சை சேர்ந்தவர்கள் 2030 முதல் ஓய்வு பெறத் தொடங்குவார்கள்.  இதில் பலர் எஸ்பிக்களாகவே ஓய்வு பெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம்.  20 வருடங்களாக எவ்விதமான பதவி உயர்வும் இல்லாமல், பணியாற்றும் ஒரு மாவட்ட எஸ்பி எப்படி பணியாற்றுவார் ?  பதவி உயர்வு நிச்சயம் இல்லை என்பது நன்றாகவே தெரியும்.   அந்த எஸ்பி எதற்காக நேர்மையாக பணியாற்ற வேண்டும் ?
தொண்ணூறுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8 முதல் பத்தாண்டுகளில் ஐபிஎஸ் அந்தஸ்து கிடைத்தது.   அவர்கள் அனைவரும் இப்போது டிஐஜிக்களாக பணியாற்றி வருகிறார்கள்.  ஐஜி பதவி உயர்வு இவர்கள் அனைவருக்கும் நிச்சயம்.   20 வருடங்கள் கழித்துத்தான் ஐபிஎஸ் அந்தஸ்து என்றால், அப்படி பணியாற்றுபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் ?
2001ல் டிஎஸ்பிகளாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இது வரை ஐபிஎஸ் கிடைக்கவில்லை.  18 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.  இவர்களுக்கே கிடைக்கவில்லையென்றால், இவர்களுக்கு பின் 2002, 2003, 2005 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களின் கதி என்ன என்பதை ஊகித்துப் பாருங்கள்.    இவர்கள் அத்தனை பேரும் தற்போது எஸ்பிக்களாக பணியாற்றி வருகிறார்கள்.
க்ரூப் 1 தேர்வு என்பது, துணை ஆட்சியர், வணிக வரித் துறை உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி, மாவட்ட பதிவாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கியது.  இதில் டிஎஸ்பி பணியிடத்தை முதல் விருப்பமாக தேர்ந்தெடுத்த காலம் உண்டு.    ஆனால் பதவி உயர்வே கிடையாது என்ற நிலை உள்ளதால், இன்று இந்தப் பணியிடம் பெரும்பாலான அரசுத் தேர்வு ஆர்வலர்களால் விரும்பப்படுவதில்லை.
ஐஏஎஸ் பதவிகளில் நிலைமை இவ்வளவு மோசம் இல்லை.   அங்கே உள்ள மொத்த ஐஏஎஸ் பணியிடங்களில் க்ரூப் 1 அதிகாரிகளுக்கு 114 இடங்கள்.   ஜெயலலிதா ஏற்படுத்தியது போன்ற ஒரு மோசமான சிக்கல் ஐஏஎஸ் பணியிடத்தில் இல்லை என்பதால், 2004 வரை துணை ஆட்சியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், ஐஏஎஸ் தகுதியை பெற்று விட்டார்கள்.
நிர்வாகம் குறித்து எந்த அறிவும் இல்லாமல், முரட்டுத் தனமாக முடிவுகளை எடுக்கும் ஜெயலலிதா,  1994ம் ஆண்டு, வரதட்சிணை ஒழிப்புப் பிரிவுக்கு என்றே பிரத்யேகமாக பெண் டிஎஸ்பிக்களை மட்டும் தனித் தேர்வு நடத்தி எடுத்தார்.    ஏற்கனவே பணியில் உள்ள அதிகாரிகள், வரதட்சிணை புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்ன ?  அல்லது காவல்துறையில் பெண் அதிகாரிகளே இல்லையா என்ன ?   பெண்களின் பாதுகாவர் என்று பறைசாற்றிக் கொள்வதற்காக, வரதட்சிணை ஒழிப்பு டிஎஸ்பிக்கள் என்று தேர்வு நடத்தி ஆட்களை தேர்ந்தெடுத்தார்.
1997ல் பணியில் சேர்ந்த இவர்கள் அனைவரும் வரதட்சிணை ஒழிப்புப் பிரிவு என்று உருவாக்கப்பட்ட புதிய பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர்.   வெட்டி பந்தாவுக்காக ஜெயலலிதா இந்த பணியிடங்களையும், புதிய பிரிவையும் உருவாக்கினாலும், நாளடைவில், ஒரு தனியான பிரிவு இயங்கும் அளவுக்கு வரதட்சிணை புகார்கள் வருவதில்லை என்பது தெரிந்தது.  பெரும்பாலான டிஎஸ்பிக்கள் வேலையில்லாம் வெட்டியாகவே உட்கார்ந்திருந்தார்கள்.    ஆனால் திமுக ஆட்சி காலத்தில் இவர்களை கருணாநிதி கண்டுகொள்ளவேயில்லை.  அப்படியே கிடக்கட்டும் என்று விட்டு விட்டார்.
2001ல் அதிமுக ஆட்சி வந்ததும், கருணையே வடிவான புரட்சித் தலைவியிடம் சென்று முறையிட்டார்கள்.  உடனடியாக, இவர்களை சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட இதர பிரிவுகளில் டிஎஸ்பிக்களாக நியமிக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா. இணைப்பு  ஏற்கனவே குறிப்பிட்டது போல, மொத்தம் உள்ள ஐபிஎஸ் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்குதான்.   டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 தேர்வு நடக்கையில், ஒரு தேர்வுக்கு, காலியிடங்களை பொறுத்து, டிஎஸ்பி பணியிடங்கள் 6 முதல் 12 வரை எடுக்கப்படும்.
ஏற்கனவே உள்ள க்ரூப் 1 அதிகாரிகள், கூடுதல் எஸ்பியாகி, எஸ்பியாகி, ஐபிஎஸ் பதவி உயர்வு பெற்று, அவர்களுக்கு மூத்தவர்கள் பணி ஓய்வு பெற்று, தேவையான காலியிடங்கள் ஏற்பட்டால்தான் க்ரூப் 1 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து கிடைக்கும்.   இது சீராகத்தான் போய்க் கொண்டிருந்தது.

வரதட்சிணை ஒழிப்பு டிஎஸ்பிக்கள் என்று நியமனம் செய்து விட்டு, அவர்களை சாதாரண டிஎஸ்பிக்களாக மாற்றி, திடீரென்று பணி மூப்புப் பட்டியலில் 20 பேரை திணித்தால் என்ன ஆகும் ?   க்ரூப் 1 டிஎஸ்பிகளாக ஏற்கனவே இருந்தவர்களும், அதற்கு பின்னால் டிஎஸ்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.  இருக்கும் 80 பணியிடங்களில் திடீரென்று திணிக்கப்பட்ட இந்த 20 பேரால், காவல்துறையின் கட்டமைப்பே உருக்குலைந்தது.   அந்த வரதட்சணை ஒழிப்புப் பிரிவுக்காக எடுக்கப்பட்ட 20 பேரில்,  ஒரு சிலரை தவிர்த்து கணிசமான பேர், பெயரை நிலைநாட்டும் அளவுக்கு சிறந்த அதிகாரிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை.   தற்போது மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் கணவர், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கைக்கான ப்ரோக்கராக செயல்பட்டு வருகிறார்.  கல்லூரியில் சேர ஆடு தயாரானதும், தன் மனையியிடம் தகவல் சொல்லுவார்.   காவல்துறை அதிகாரியான அவர் மனைவி, உடனடியாக குட்கா வியாபாரி டிகே.ராஜேந்திரனை தொடர்பு கொள்வார்.  ராமச்சந்திரா கல்லூரியின் தாளாளர் வெங்கடாச்சலத்தோடு திருமண சம்பந்தத்தில் விரைவில் ஈடுபட உள்ள குட்கா வியாபாரி, மாணவரை பரிந்துரைத்து, அதற்கும் கமிஷன் பெற்று வருகிறார் என்பதே.   சத்தமே இல்லாமல் கல்லில் நார் உறித்து கல்லா கட்டுவதில் டிகே ராஜேந்திரன் கில்லாடி.  அவரைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
வரதட்சிணை ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பிக்கள் சட்டம் ஒழுங்குக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, க்ரூப் 1 அதிகாரிகள் நீதிமன்றம் சென்றனர்.   வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, வரதட்சிணை ஒழிப்பு டிஎஸ்பிக்களுக்கு சாதகமாகவே முடிந்தது.   2004ம் ஆண்டில் இவர்கள் ஐபிஎஸ் அந்தஸ்துக்கு வருகின்றனர்.    இவர்கள் பேட்ச்சைச் சேர்ந்த 20 பேரும் ஐபிஎஸ் அந்தஸ்துக்கு வந்தாலும், 20 பேரில் 8 பேருக்கு மட்டுமே, ஐபிஎஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மீதம் உள்ளவர்களுக்கு உறுதி செய்யப்படாமல் மத்திய உள்துறையில் உள்ள சிக்கலாலோ, வேறு ஏதாவது காரணத்தாலோ, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.  இந்த பேட்சைச் சேர்ந்த 12 பேருக்கே இன்னும் ஐபிஎஸ் அந்தஸ்து உறுதி செய்யப்படாத நிலையில் இதற்கு பின்னால் வந்த க்ரூப் 1 அதிகாரிகளின் நிலையை சொல்ல வேண்டியதில்லை.
ஒரு மாவட்டத்தில் எஸ்பியாக உள்ள ஐபிஎஸ் அதிகாரியின் பணிக்கும், ஐபிஎஸ் அல்லாத அதிகாரியின் பணிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.   ஒரே வேலை.  ஒரே பொறுப்பு.   2001ம் ஆண்டு நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளாக பணிக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று டிஐஜிக்களாக பணியாற்றிக் கொண்டு வருகின்றனர்.   2001ம் ஆண்டு க்ரூப் 1 அதிகாரிகளாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இது வரை ஐபிஎஸ் அந்தஸ்து கூட வழங்கப்படவில்லை.
இதனால் பெரும்பாலான க்ரூப் 1 அதிகாரிகள், அவர்கள் நேர்மையாக பணியாற்றினாலும் எந்த எதிர்காலமும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.   இதை புரிந்து கொண்டு, பதவியில் உள்ள அரசியல்வாதிகளின் கைப்பாவையாகி, ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.    தமிழகத்தில் கணிசமாக இருக்கும் க்ரூப் 1 அதிகாரிகளில் 90 சதவிகிதத்தினர் இப்படி ஊழல் பேர்வழிகளாக மாறினால், காவல்துறை என்ன கதிக்கு ஆளாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதற்கு தீர்வேயில்லையா என்றால், தீர்வில்லாத ஒரு பிரச்சினை எப்படி இருக்க முடியும் ?  தமிழகத்தின் முதல் டிஜிபியாக இருந்தவர் ஈஎல்.ஸ்ட்ரேசி என்கிற ஆங்கிலேய அதிகாரி.   தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பல காவல்துறை அதிகாரிகள் அவருடைய தலைமைப் பண்பு குறித்து அத்தனை பெருமையாக பேசுகிறார்கள்.

ஈஎல்.ஸ்ட்ரேசி
அதற்கு பின்பு இருந்த ஸ்ரீபால், அலெக்சாண்டர் போன்றவர்களும் அத்தனை மோசமில்லை.   தனிப்பட்ட முறையில் எப்படி இருந்தாலும், காவல் துறைக்கான உட்கட்டமைப்பு, குறைகள் தீர்ப்பது போன்றவற்றில் உறுதியாக பணியாற்றினார்கள்.   இதற்கு முன்பு இருந்த அஷோக் குமார் கூட,  நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காவல் துறையினரின் தண்டனை கோப்புகளில் விரைவாக முடிவெடுத்து, ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த பல கோப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தார்.
20 வரதட்சிணை ஒழிப்பு டிஎஸ்பிகள் புதிதாக சேர்ந்ததால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலானோருக்கு தெரியும். முதல்வர் மற்றும் உள் துறை செயலாளரோடு ஆய்வுக் கூட்டங்கள் நடத்துகையில் இந்த சிக்கல்களை எடுத்துக் கூறி, புதிய பணியிடங்களை உருவாக்க முயற்சிகள் எடுக்க வேண்டியது, டிஜிபி மற்றும் மூத்த அதிகாரிகளின் கவலை.
2014ம் ஆண்டு, இதே போல ஒரு ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.   அதில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி என்ற முறையில் டிகே.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.   அப்போது, தமிழகத்துக்கான ஐபிஎஸ் பணியிடங்களை அதிகரிக்கும்படி விவாதிக்கப்பட்டது.  அப்போது, இருக்கும் பணியிடங்களே அதிகமாக இருக்கின்றன.  கூடுதல் பணியிடங்கள் வேண்டியதில்லை என்று கூறியது இதே குட்கா வியாபாரி டிகே ராஜேந்திரன்தான்.     கூடுதலாக மத்திய அரசு 9 பதவிகளை ஒதுக்குகிறது என்றால், 6 பணியிடங்கள் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத்தான் செல்லும்.  மீதம் உள்ள மூன்றுதான் க்ரூப் 1 அதிகாரிகளுக்கு கிடைக்கும்.  ஆனால் அது கூட நடக்கக் கூடாது என்பதில் ராஜேந்திரன் தீவிரமாக இருந்தார்.  இருக்கிறார்.
டிகே ராஜேந்திரன் ஐஜியாக இருந்தபோது நான் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியில் இருந்தேன்.  ஐஜி அந்தஸ்தில் இருக்கும் ஒரு அதிகாரியின் வீட்டுக்கு இரண்டு செய்தித் தாள்கள் அரசு செலவில் வாங்கிக் கொள்ளலாம்.   புலனாய்வு பணியை மேற்கொள்ளும் காவல் பிரிவுகளில் எவ்வித ஆய்வு /  ஆடிட்டுக்கும் உட்படாத ரகசிய நிதி இருக்கும் என்பதை குறிப்பிட்டிருக்கிறேன்.     இந்த ரகசிய நிதியிலிருந்து பணத்தை அளிக்குமாறு, மாத இறுதியில் டிகே.ராஜேந்திரன் வீட்டிலிருந்து செய்தித் தாளுக்கான பில் வரும்.    அந்த பில்லை வாங்கிப் பார்த்தால், ஒரு நாளைக்கு 12 செய்தித்தாள்கள் வாங்குவார்கள்.   இப்படியெல்லாம் பெயரில் செய்தித் தாள் வருகிறதா என்பதையே அந்த பில்லைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

டிகேஆர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த காலம் முழுக்க இந்த பில் தரப்பட்டு, ரகசிய நிதியிலிருந்து பணம் தரப்பட்டது.   லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாற்றப்பட்டு, டிகேஆர் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்றார்.   சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் புலனாய்வுப் பணியே கிடையாதல்லவா ?  அங்கே எதற்கு ரகசிய நிதி.  ஆனால் பழக்க தோஷத்தில் அங்கேயும் 12 செய்தித் தாள் பில்லை அளித்திருக்கிறார்கள்.    அவர்கள் இங்கே ரகசிய நிதி கிடையாது என்று கூறியதும், ஒரு நாளைக்கு 12 செய்தித்தாள் படிக்கும் தனது தணியாத செய்தி ஆர்வத்தை தணித்துக் கொண்டார் டிகே.ராஜேந்திரன்.
இது பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம்.   ஆனால் இப்படி பொய் பில்லை கொடுத்து ரகசிய நிதியிலிருந்து மாதந்தோறும் பணம் பெறும் ஒரு நபரின் புத்தி எப்படிப்பட்டது, அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.    12 செய்தித்தாள்களுக்கு மாதம் 2 லட்சமா வரும் ?  அதிகபட்சம் 3000 ரூபாய் வருமா ?
2012ம் ஆண்டே டிகேஆர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்தார்.  தனது வசூல் வேட்டையை அப்போதே தொடங்கி விட்டார் டிகேஆர்.  தொடக்கத்தில் நான் டிகேஆர் இப்படி வசூல் செய்வார் என்பதை நம்பவில்லை.  ஆனால், பணம் கொடுத்து, டிஎஸ்பி நியமனத்தை பெற்ற சில அதிகாரிகள் என்னிடமே விபரங்களை கூறியுள்ளார்கள்.
இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து, தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, கடந்த 25 வருடங்களாக காவல் துறையில், மன்னிக்கவும், டிகே.ராஜேந்திரன் வீட்டில் பணி புரிபவர் பெயர் ராமமூர்த்தி.     டிகே.ராஜேந்திரனுக்கு லெப்ட், ரைட், சென்டர் அனைத்தும் இந்த ராமமூர்த்திதான்.
2014ல் பணம் கொடுத்து  நல்ல போஸ்டிங்குகளை பெற்ற அந்த டிஎஸ்பிக்கள் என்னிடம் கூறியது, ராமமூர்த்தியை சந்தித்து பணத்தை கொடுத்தோம்.   ராமமூர்த்தி நாங்கள் எழுதிக் கொடுத்த விபரங்களை அய்யாவின் மனைவியிடம் கொடுத்தார்.  நான்கு நாள்களில் உத்தரவு வந்தது என்றனர்.    அந்த டிஎஸ்பிக்கள் இருவரும் எனக்கு பல நாள் பழக்கம்.  என்னிடம் அவர்கள் தவறான தகவலை கூற வேண்டிய அவசியம் இல்லை.
சமீபத்தில் சந்தித்த மற்றொரு டிஎஸ்பி, தற்போது, சீருடை இல்லாத ஒரு பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.    ரிட்டையர் ஆக இன்னும் மூணு வருசம் இருக்கு தம்பி.    சரி. ரிட்டையர் ஆகறதுக்குள்ள கொஞ்சம் சம்பாதிச்சிட்டு போலாம்னு போயி கேட்டா, 8 லட்சம் கேக்கறாங்க தம்பி.   அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போறது.   அந்த ஐடியாவையே விட்டுட்டேன் என்றார்.
குட்கா விவகாரத்தில், டிகே.ராஜேந்திரனுக்கு பணம் பெற்றுத் தந்ததும் இதே ராமமூர்த்திதான்.    குட்கா விசாரணை, ஒரு வேளை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால், இந்த ராமமூரத்தியை பிடித்து, ஒரு வாரம் வைத்து விசாரித்தால், பல தகவல்கள் வெளிவரும்.  சென்னை, உத்தண்டியில் கடற்கரை ஓரம் டிகே.ராஜேந்திரன் கட்டியுள்ள சொகுசு பங்களா மற்றும் தமிழகம் முழுக்க பினாமி பெயர்களில் வாங்கிப் போட்டுள்ள பல்வேறு நிலங்கள் குறித்த விபரங்களும் வெளியே வரும்.
ஒரு கோடி ரூபாய்க்கு கைக்கடிகாரம் அணியும் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை பார்த்தும் ராஜேந்திரனுக்கு இன்னும் புத்தி வராமல், பேராசையில் மூழ்கி இருப்பது அவர் எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கு உணர்த்தும்.
இப்படி, ஒரு நாள் தவறாமல், அமைச்சர்களை விஞ்சும் வசூல் வேட்டையில் இருக்கும் டிகே.ராஜேந்திரனுக்கு, காவல்துறையில் சீர்திருத்ததை செய்ய எங்கே நேரம் இருக்கும் ?
பதவி உயர்வுதான் இல்லை, ஐபிஎஸ் அந்தஸ்து இல்லை என்ற சோகங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.   ஆண்டுதோறும் எழுதப்படும் Annual Confidential Report எனப்படும் ஏசிஆர் அறிக்கையில், நல்ல ரேட்டிங் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கக் கூடிய நிலைமைக்கு க்ரூப் 1 அதிகாரிகள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.
திருவல்லிக்கேணியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் துணை ஆணையராக இருந்தவர் அனில் குமார் கிரி.    இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.   திருவல்லிக்கேணியில் இவர் துணை ஆணையராக இருந்தபோது, சாலையில் தள்ளுவண்டியில் கொய்யாப்பழம் விற்பனை செய்பவனிடம் கூட வசூல் செய்து இவருக்கு பணம் தர வேண்டும்.   அதற்கு பிறகு தஞ்சாவூர் சென்று, அங்கேயும் வசூல்தான்.

அனில் குமார் கிரி ஐபிஎஸ்
இவருக்கு கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரிக்கு ஏசிஆரில் 7 + ரேட்டிங் தருவதற்கு 2 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்.   7+ ரேட்டிங் கிடைக்கவில்லையென்றால், அடுத்த பதவி உயர்வு சமயத்தில் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.  வேறு வழியேயின்றி அந்த அதிகாரி கிரி கேட்ட 2 லட்சத்தை கொடுத்தார்.   இது போல ஏசிஆர் ரேட்டிங்குக்கே பணம் வாங்குவது என்பது,   காவல்துறையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சீரழிவையே சுட்டிக்காட்டுகிறது என்றார் ஒரு மூத்த அதிகாரி.
இந்த அனில் குமார் கிரி, தற்போது, எல்லைப் பகுதியை பாதுகாக்கும் சாஸ்திர சீமா பால் பிரிவில் பணியாற்றுகிறார்.
இப்படிப்பட்ட அதிகாரிகளையெல்லாம் ஊக்குவித்து வளர்த்து வருபவர்தான் டிகே.ராஜேந்திரன்.  ஒரு காவல்துறை தலைமை அதிகாரி நினைத்தால்,  பல சீர்திருத்தங்களை செய்ய முடியும்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நீங்கள் புதிய வாகனம் வாங்கினால், எந்த நம்பர் வாங்க வேண்டும் என்றாலும், ஆர்டிஓ அலுவலகத்துக்கு பணம் கொடுக்க வேண்டும்.   பணம் கொடுக்க மாட்டேன் என்றால், உடனே உங்கள் வண்டிக்கு கூட்டு எண் 8 ஒதுக்கப்படும்.  உங்கள் வண்டியை விற்கவே முடியாது என்று மிரட்டுவார்கள்.   அத்தனை பேரும் வேறு வழியின்றி, பணத்தை கொடுத்தே தீருவார்கள்.
1994ல், ஜி.அம்பேத்கர் ராஜ்குமார் என்று ஒரு அதிகாரி போக்குவரத்து ஆணையராக வந்தார்.   வாகன பதிவு எண்கள் அத்தனையும், இனி கம்ப்யூட்டர் மூலமாக மட்டுமே என்று உத்தரவு பிறப்பித்தார்.   பேன்சி எண்கள் என்றால் பணம் கட்ட வேண்டும்.  கூட்டு எண் 8 ஒருவருக்குமே வராது என்ற வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டது.
இன்று வரை அந்த முறை தொடர்கிறது.  இது போல நல்ல அதிகாரிகள் செய்யும் நிர்வாக ரீதியான மாறுதல்கள், பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.
இது போல, தாங்கள் பணியாற்றும் துறையில் நல்ல மாற்றங்களை உருவாக்க நல்ல தலைமையும், நல்ல அதிகாரிகளும் தேவை.  ஆனால் டிகே.ராஜேந்திரன் நிச்சயம் அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைமை அல்ல.
அவர் நினைத்திருந்தால், தமிழகத்தின் ஐபிஎஸ் பணியிடங்களை அதிகரிக்க மத்திய உள்துறைக்கு தொடர்ந்து வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்க முடியும்.  ஒரு கட்டத்தில் அந்த பணியிடங்கள் வழங்கப்பட்டிருக்கும்.  அண்டை மாநிலங்களான, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் ஐபிஎஸ் பணியிடங்களை கணிசமாக அதிகரித்துக் கொண்டுள்ளன.    குறிப்பாக ஆந்திராவும், தெலங்கானாவும், மாநில பிரிவினையைக் காட்டி காவல்துறை பணியிடங்களை அதிகமாக பெற்றுள்ளன.    அதிக காவல் ஐபிஎஸ் பணியிடங்கள் பெற்றதால், ஆந்திராவில், பல எஸ்பி பணியிடங்களை, டிஐஜி அந்தஸ்துக்கு உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனால் கூடுதலாக ஒரு டிஐஜி பணியிடம் உருவாக்கப்படுவதோடு, இரண்டு எஸ்பி பணியிடங்களையும் ஆந்திரா பெற்றுள்ளது.
இன்று நாட்டில் உள்ளதிலேயே சிறந்த காவல்துறை என்று ஒரு மாநிலத்தை சொல்வதென்றால், ஆந்திர காவல்துறையை தாராளமாக சொல்லலாம்.  அந்த அளவுக்கு முன்னேறியுள்ளது ஆந்திர காவல்துறை.
நல்ல அதிகாரிகளையும், நல்ல முதல்வரையும் அந்த மாநிலம் பெற்றுள்ளது.   காவடி தூக்கும் முதல்வரையும், குட்கா வியாபாரம் செய்யும் டிஜிபியையும் பெற்றிருந்தால், தமிழக காவல்துறையின் மீதம் உள்ள ஈரலும் அழுகத்தான் செய்யும்.
இதை சரி செய்ய உடனடி தேவை அவசரகால சிகிச்சை.  அந்த சிகிச்சையை மேற்கொள்ளக் கூடிய தலைவர்களோ, மூத்த காவல்துறை அதிகாரிகளோ ஒருவர் கூட இல்லை என்பதுதான் மிக மிக வேதனையளிக்கும் விஷயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக