புதன், 3 ஜனவரி, 2018

எம் எல் ஏக்களுக்கு எடப்பாடி வகுப்பு ... தினகரன் என்ன பேசினாலும் ஒண்ணும் சொல்லாதீங்க .. அடிச்சும் கேப்பான் ?

டிஜிட்டல் திண்ணை!
மின்னம்பலம் :“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. உடல்நிலை சரியில்லை காய்ச்சல் வந்துவிட்டது என ஆறுகுட்டி, சிவசுப்ரமணியன் அகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு வராததுக்குக் காரணம் சொல்லி இருந்தார்கள். அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ.க்கள் பிரபு, பவுன்ராஜ் ஆகியோர் சபரிமலைக்குச் சென்றுவிட்டனர். வேலுநாச்சியார் விழாவுக்காக அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஸ்கரன் ஆகியோர் சிவகங்கை போய்விட்டார்கள். இப்படியாக 7 பேர் இன்றைய கூட்டத்துக்கு வரவில்லை.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசும்போது, ‘ஏழு பேரு கூட்டத்துக்கு வராமல் போனதுக்கு காரணத்தை தெளிவாக மீடியாவுக்கு சொல்லிடுங்க. இல்லைன்னா அந்த ஏழு பேரும் என்னோட ஆதரவாளர்கள்னு தினகரன் சொல்லிடுவாரு. சட்டமன்றம் கூடும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிறைய கேள்வி கேட்பாங்க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஆர்வக்கோளாறில் எழுந்து டென்ஷனாகிப் பேச வேண்டாம். அந்தந்தத் துறைக்கான அமைச்சர்கள் பதில் சொல்லுவாங்க. உங்களை டென்ஷன் ஆக்கணும் என்பதற்காகத்தான் அவங்ககிட்ட இருந்து கேள்விகளே வரும். அதுக்கெல்லாம் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்.
அப்புறம் கூடிய சீக்கிரமே நம்ம கட்சிக்காக ஒரு பத்திரிகையும், ஒரு டிவியும் தொடங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அதைப் பற்றி நமது முதல்வர் எடப்பாடி அவர்கள் உங்ககிட்ட விளக்கமாக சொல்வாரு...’ என்று பேசி முடித்து அமர்ந்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘அண்ணன் பன்னீர் சொன்னதைதான் நானும் சொல்லப் போறேன். சட்டமன்றத்தில் புதிய உறுப்பினரான தினகரன் பேசும்போது என்னையும் சரி... நம் ஆட்சியையும் சரி... கடுமையாக விமர்சனம் செய்வார். அதை யாரும் காதில் வாங்கிக்காதீங்க. நம்மை விமர்சனம் செய்ய வேண்டும் என அவர் எந்த எல்லைக்கும் போவார். எதையும் நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவரு என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும். நீங்க யாரும் எந்தக் காரணத்துக்காகவும் கூச்சல் போட்டுடாதீங்க. நாம பதில் சொன்னால்தான் கத்துறவங்க இன்னும் சத்தமாக கத்துவாங்க. கண்டுக்காம விட்டுட்டா கத்திட்டு அடங்கிடுவாங்க... அவரைக் கண்டுக்காம விடுறதுதான் நமக்கு நல்லது. அதேபோல நம் கட்சியில் உள்ள சிலரே தினகரனை ரகசியமாக போய் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள் என எனக்கு தகவல் வருகிறது. அது நல்லதுக்கு இல்லை.
இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இனி அவரை யாரும் சந்திக்காதீங்க. பேசாதீங்க. நம்முடைய நேரடியாக எதிரி என்றால் இப்போ அவர்தான். அவரைப் போய் பார்க்கிறதோ பேசுறதோ எப்படி நமக்கு சரியாக இருக்கும்? அவரு இன்னும், தன்னோட ஸ்லீப்பர் செல் அதிமுகவில் இருக்காங்க என்று சொல்லிட்டு இருக்காரு. அப்படி யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும். இருந்தால் எனக்கு தெரிந்துவிடும். உளவுத் துறை அதிகாரிகள் எல்லோரையும் உன்னிப்பாக கவனித்து தினமும் எனக்கு ரிப்போர்ட் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் இனி நமக்கு வேண்டப்படாதவரைப் பார்க்காதீங்க, பேசாதீங்க.
சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது எந்தக் காரணத்துக்காகவும் யாரும் வராமல் இருக்காதீங்க.. என்ன தலை போற காரியமாக இருந்தாலும் எல்லோரும் சட்டமன்றத்துக்கு வரணும். அப்போதான் நம் பவரை நாம காட்ட முடியும். அம்மா இருந்தவரை கட்சிக்கான டிவியாக ஜெயா டிவியும், பத்திரிக்கையாக நமது எம்.ஜி.ஆரும் இருந்துச்சு. இப்போ அது அவங்க கையில் இருக்கு. நமக்கென ஒரு டிவியும் பத்திரிகையும் தொடங்க வேண்டும். ஏற்கெனவே நமது எம்.ஜி.ஆரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆசிரியர் அழகு மருதுராஜ் இருக்கிறார். அவரை வைத்து ஒரு பத்திரிகை தொடங்கலாம். டிவிக்கு யாரை பொறுப்பேற்க வைக்கலாம் எனப் பேசி முடிவெடுக்கலாம். இரண்டுக்குமே அம்மா என பெயர் வைக்கலாம் என யோசித்திருக்கிறோம். அந்த பெயரில் வேறு யாராவது பதிவு செய்திருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு நமது டிவி, பத்திரிகை பெயரை முடிவு செய்து கொள்ளலாம். எப்படியாக இருந்தாலும் பெயரில் அம்மா இருக்கும். அதேபோல கட்சியோட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் இப்போ வெளியிடுறோம். அதில் உள்ளவர்கள் தவிர வேறு யாரும் பேட்டி கொடுக்கவோ விவாதங்களில் பங்கேற்கவோ செல்லக் கூடாது. மீறிச் சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேசி முடித்தார்.
பன்னீர்செல்வம் சொன்னது போலவே, கூட்டத்துக்கு வராதவர்கள் யார், என்ன காரணத்துக்காக வரவில்லை என்பதைத் தெளிவாக மீடியாவுக்குச் சொல்லிவிட்டுத்தான் அங்கிருந்து புறப்பட்டார் அமைச்சர் ஜெயக்குமார்” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.
“2ஜி தொடர்பாக தான் எழுதி இருக்கும் புத்தகத்தை ரிலீஸ் செய்வதற்கு கட்சித் தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தார் ஆ.ராசா. திமுக தலைமை அதற்கு அனுமதி கொடுத்துவிட்டது. டெல்லியில் வைத்து அந்தப் புத்தகத்தை வரும் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் ராசா. வழக்கிலிருந்து விடுதலை ஆனாலும் இதுவரை எந்த மீடியாவுக்கும் ஆ.ராசா முழுமையாக பேட்டி கொடுக்கவில்லை. அதற்குக் காரணம் இந்தப் புத்தகம்தான்.
‘இப்போ நான் எல்லாத்தையும் பேசிட்டா அப்புறம், புத்தகத்துக்கு சுவாரஸ்யம் இல்லாமல் போய்டும். புத்தகத்துல எல்லாத்தையும் எழுதி இருக்கேன். புத்தகம் முதல்ல வரட்டும். மத்ததை அப்புறம் பேசிக்கலாம்’ என்று சொல்லியே மீடியாவைத் தவிர்த்துவிட்டாராம் ராசா. புத்தகம் வெளியே வந்தால் மிகப் பெரிய சர்ச்சைகளை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள் ராசாவை நன்கு அறிந்தவர்கள்’’ என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக