ஞாயிறு, 7 ஜனவரி, 2018

தற்காலிக ஓட்டுநர் பேருந்து தொடரும் விபத்துகள்.. ஒருவர் உயிரழப்பு

நக்கீரன் :தற்காலிக ஓட்டுநர் பேருந்து இயக்கியதால் ஒருவர் பலி! தொடரும் விபத்துகளால் அலறும் மக்கள்! ஊதிய உயர்வு, ஓய்வூதிய பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க, தமிழக அரசு பயிற்சியில்லாத ஓட்டுனர்களை வைத்து வீம்புக்காக பேருந்துகளை இயக்குகிறது. தற்காலிக ஓட்டுநர்களால் ஆங்காங்கே பேருந்துகள் கவிழ்வதும், விபத்துகளுக்காளவதும் தொடர்கிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மீது மோதி ஆம்புலன்ஸ் வாகனம் பின்புறம் பாதிப்புக்குள்ளானது. இதேபோல் பண்ருட்டியிலிருந்து கடலூர் சென்ற அரசுப் பேருந்து கீழ்அருங்குணம் என்ற இடத்தில் வயல் வெளியில் இறங்கியது இந்நிலையில் இன்று விருத்தாசலத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதும், நான்கு பேர் காயமடைந்திருப்பதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமணையிலிருந்து சிறுமங்கலம் செல்வதற்காக அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுனர் ஏழுமலை என்பவர் பேருந்து நிலையத்துக்கு கொண்டு வந்தார். அதேசமயம் சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. இவ்விரு பேருந்துகளுக்கு நடுவில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் சென்று கொண்டிருந்தனர்.


தற்காலிக ஓட்டுனர் ஓட்டிவந்த அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதி, அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீதும் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற டேவிட் சியோன் குமார், சாமுவேல், அவரது மகள் ஷாரன் ஸ்வீட்டி (7) ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.

மேலும் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கணவன் மணைவி இருவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி டேவிட் சியோன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கக்கூடாது என்று 2 மணி நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களும் பணிமணை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்காலிக ஓட்டுனர்களால் பேருந்தில் பயணிப்போர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்வோருக்கும் கூட ஆபத்துகள் இருப்பதால் பயிற்சியில்லாத ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க கூடாது என்றும், போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ரி மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனும் குரல்கள் ஒலிக்கின்றன. - சுந்தரபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக