ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஸ்டாலினிடம் பேசியது குறித்து ஒருதலைப்பட்சமான அறிக்கை: திமுக மீது முதல்வர் புகார்

ஸ்டாலினிடம் பேசியது குறித்து ஒருதலைப்பட்சமான அறிக்கை: திமுக மீது முதல்வர் புகார்மாலைமலர் : போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றி ஸ்டாலின் என்னிடம் பேசியது தொடர்பாக திமுக ஒருதலைப்பட்சமான அறிக்கை வெளியிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். சென்னை: தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறும் முதல்வரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.


ஸ்டாலின் கூறியதை கேட்டுக்கொண்ட முதல்வர், தொழிலாளர் பிரச்சினையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை. என்று தி.மு.க வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், திமுக அறிக்கை தொடர்பாக விளக்கமளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நேற்று மு.க ஸ்டாலின் உடனான தொலைபேசி பேச்சின் போது, எதிர்கட்சித் தலைவரின் தொழிற்சங்கங்களை சார்ந்தவரிடம் போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், உடனே வேலை நிறுத்தத்தைகை விட்டு, பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்துங்கள் என்று கூறினேன்.

ஆனால், தி.மு.க. தனது அறிக்கையில், முதல்வரிடம் தொலை பேசியில் எதிர்கட்சித் தலைவர் தொழிலாளர் பிரச்சினையையும் பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க கேட்டுக் கொண்டதாகவும், தமிழ்நாடு அரசு, என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் தெரிவிக்கவில்லை என இன்று காலையில் வெளிவந்த செய்தித்தாள்களின் வாயிலாக அறிந்தேன்.

நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நான் கூறியதை தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாக தி.மு.க. அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முதல்வர் அறிக்கை தொடர்பாக மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “தொழிலாளர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று முதல்வரிடம் கூறினேன், அமைச்சர்கள் பேசுவதைவிட நீங்கள் பேசினார் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினேன்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக