வெள்ளி, 5 ஜனவரி, 2018

மருந்து மாபியா! ஜெனரிக் மருந்துகள் விலை மலிவு ... ஆனால் அவை ஏன் கிடைப்பதில்லை?


சிறப்புக் கட்டுரை: ஏன் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதில்லை?
மின்னம்பலம் ர.ரஞ்சிதா: மருந்துக் கடைக்குப் போய் மருந்துச் சீட்டை நீட்டுகிறீர்கள். மருந்துகளை எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர் 500 ரூபாய் என்கிறார். உங்களுக்கு அதிர்ச்சி. ‘ஐந்நூறா?’ என்று கேட்கிறீர்கள். கடைக்காரர் ஒரு நிமிடம் தயங்கி, ‘விலை மலிவாகவும் இதே மருந்துகள் இருக்கின்றன’ என்கிறார். ‘மருந்தில்கூடவா மலிவுப் பதிப்பு’ என்று உங்களுக்குக் குழப்பம். ‘டாக்டர் சொன்ன மருந்துகளை வாங்காவிட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடுமோ’ என்ற பயம். 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு மருந்துகளை வாங்கிக்கொண்டு பெருமூச்சுடன் நடையைக் கட்டுகிறீர்கள்.
ஒரே மருந்து இருவேறு விலைகளில் கிடைக்கிறது என்று கடைக்காரர் சொன்னது உண்மைதானா? உண்மை என்றால் அது எப்படிச் சாத்தியமாகிறது?
ஒரே மூலக்கூறு, பல தயாரிப்புகள்
மருந்துக் கடைக்காரர் குறிப்பிட்டது ‘ஜெனரிக்’வகை மருந்து. மருத்துவர் பரிந்துரைத்தது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து. அதாவது பிராண்டட் மருந்து. இரண்டு மருந்துகளும் ஒரே மூலக்கூறுகள் கொண்டவைதான். ஆனால், நிறுவனத்தின் பிராண்டட் மருந்து விலை அதிகம். அந்த மருந்தின் மூலக்கூறுகளைக் கொண்ட ஜெனரிக் மருந்து விலை குறைவு. இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துவது பிராண்டட் மருந்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் லாப விகிதம்தான்.

‘பாரசிட்டமால்’ என்பது ஜெனரிக் மருந்து பெயர். ‘கால்பால்’, ‘குரோசின்’ என்பவை பாரசிட்டமாலின் மூலக்கூறுகளைக் கொண்ட பிராண்டட் மருந்துகள். பிராண்டட் மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் 50 - 80 சதவிகிதம் விலை குறைவாகக் கிடைக்கின்றன. சாதாரண தலைவலி தொடங்கி புற்றுநோய் வரை அனைத்துக்குமே ஜெனரிக் மருந்துகள் உள்ளன.
‘ஒரு நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் மூலக்கூறை வைத்து இன்னொரு நிறுவனம் மருந்து தயாரித்து மலிவாக விற்பது எப்படிச் சாத்தியம்?’ என்ற கேள்வி எழலாம்.
ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல என்பதால் அந்த மருந்துக்கான காப்புரிமை அந்த நிறுவனத்துக்கு இருக்கும். இது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி, பரிசோதனைகள் ஆகியவற்றுக்காகப் பல கோடி ரூபாய் செய்ய வேண்டும். பரிசோதனை முடிந்து அரசின் அனுமதி பெற்று விற்பனைக்கு வருவதற்குச் சில வருடங்கள்கூட ஆகலாம். இப்படி மருந்தை உருவாக்குபவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் இந்தக் காப்புரிமை.

எனினும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய மக்களால் அவற்றை வாங்க முடியாது என்பதால் அவர்களுக்காக இந்தக் காப்புரிமைச் சட்டம் தளர்த்தப்பட்டது. இந்தியாவில் புதிய மருந்து ஒன்றுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டால், அது 20 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். காப்புரிமை முடிந்த பிறகு, அவற்றைப் பிற நிறுவனங்கள் தயாரித்து விற்கலாம். அதாவது, அதே மூலக்கூறுகளைக் கொண்டு பிறரும் அதே மருந்துகளைத் தயாரித்து விற்கலாம். காப்புரிமைக்கான தொகை சேராததால் இந்தத் தயாரிப்புகளின் விலை குறையும். இதைத்தான் ஜெனரிக் மருந்துகள் என்பார்கள்.
ஆனால், இந்த ஜெனரிக் மருந்துகளை மக்கள் அதிகம் வாங்குவதில்லை. காரணம், ஜெனரிக் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் இல்லை. ஜெனரிக் மருந்துகள் மக்களுக்குப் பரவலாகக் கிடைப்பதுமில்லை.
ஒரு மருந்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜெனரிக் ஆவதற்குச் சாத்தியங்கள் இருந்தாலும், சில மருந்துகள் அப்படி மாறுவதில்லை. உதாரணமாக, ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய இன்ஹேலர், ரோட்டோஹேலர் போன்றவை. இந்த மருந்துகள் விலை ஏறிக்கொண்டே போகின்றன.
பிராண்டுகளையே பரிந்துரைக்கும் மருத்துவர்கள்
“மக்களின் நன்மைக்காக, ஜெனரிக் மருந்துகளைத்தான் மருத்துவர்கள் எழுதித்தர வேண்டும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெனரிக் மருந்துகள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை எழுதிக் கொடுத்தாலும் மருந்துக் கடைக்கார்களுக்கு அது தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அவர்கள் பிராண்டட் மருந்துகளையே மக்களுக்குத் தருகிறார்கள். காரணம், அதில் உள்ள லாபம்” என்கிறார் தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்.

இந்திய மருந்துத் துறையின் வர்த்தகம் 2015-16இல் சுமார் 36.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வருடத்துக்குச் சுமார் 17 % மேலாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
“மருத்துவர்கள் மூலமாகவே ஒவ்வொரு நிறுவனமும் தனது தயாரிப்பை மக்களிடையே கொண்டு செல்கிறது. அதிக விலையுள்ள மருந்துகள் விற்பனையானால் மட்டுமே அதிக லாபம் கிடைக்கும் என்பதால், அவற்றை முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றன. மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் அவருடைய மருத்துவமனைக்கு அருகில் உள்ள மருந்துக் கடைகளில் மட்டும்தான் கிடைக்கும். அது அந்த பிராண்டட் நிறுவனங்களின் வியாபார தந்திரம்” என்கிறார் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்யும் மதுரை மண்டல சீனியர் மார்க்கெட்டிங் அலுவலர் ராஜசேகர்.
“பல பிராண்டட் நிறுவங்கள் மருத்துவர்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டு அவர்களுடைய நிறுவன மருந்துகளை மக்களுக்கு எழுதித் தர வைக்கிறார்கள்” என்கிறார் ராஜசேகர். ஒரு மருந்து தயாரிப்பின் விலை ரூ.20 எனில், அரசின் விலையும் 20 ரூபாய்தான். ஆனால் பிராண்டட் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் செலவு, மருத்துவர்களை அணுகுவது, விற்பனை பிரதிநிதிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சம்பளம் தர வேண்டும். இந்தக் காரணங்களால் 20 ரூபாய் மருந்து 200 ரூபாய்க்கு விற்கப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
மருந்துக் கடைகளின் நிலை
“அரசு மருத்துவமனைகளில் ஜெனரிக் மருந்துகளைத்தான் நோயாளிகளுக்கு எழுதித் தருகிறார்கள். ஆனால், கடைகளில் அவை கிடைப்பதில்லை. உதாரணமாக, ஜெனரிக் மருந்தை எழுதிக் கொடுத்தாலும், மருந்துக் கடைக்காரர் தன்னிடம் உள்ள பிராண்டட் மருந்துகளைத்தான் மக்களுக்குத் தருகிறார்” என்று ரெக்ஸ் கூறுகிறார்.
அரசு மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் ஜெனரிக் மருந்துகளே விற்பனை செய்யப்படுகின்றன. கொலஸ்ட்ராலுக்குக் கொடுக்கப்படும் மருந்து, அட்டோர்வா ஸ்டேட்டின். அதில் பிராண்டட் ரகம் அட்டோர்லிப் 40 எம்.ஜி.யின் விலை 180 ரூபாய்க்கு மேல் இருக்கும். ஆனால், இதே மருந்து ஜெனரிக் வகையில் அரசு மருந்தகத்தில் 20 ரூபாய்க்குக் கிடைக்கும். சர்க்கரை, பி.பி போன்ற நோய்களுக்கான மருந்துகளை வாங்குவதற்காகச் சிலர் ஒரு மாதத்துக்கு 2000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இவை ஜெனரிக் மருந்துகளாக இருந்தால் 500 ரூபாய்தான் செலவாகும். ஒரே மருந்தைப் பல பிராண்டட் நிறுவனங்கள் தயாரித்துச் சந்தைக்குக்கொண்டு வருகின்றன. எல்லா நிறுவனங்களும் ஒரே விலையில் மருத்துகளை விற்பதில்லை.
பிரதமரின் பாரத மக்கள் மருந்தகம்
இந்த நிலையில், ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக, ‘பிரதமரின் பாரத மக்கள் மருந்தகம்’ அமைக்கப்பட்டது. இப்படி 3,019 கடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 242 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான பிராண்டட் பெயரும் மருந்தும் இருக்காது.
உற்பத்தியாளரிடமிருந்து வாங்கப்படும் மருந்துகளை ‘பிராண்டட்’ நிறுவனங்கள், ஒருமுறை மட்டுமே தரப் பரிசோதனை செய்கின்றன. மத்திய அரசு அதே மருந்துகளை டெல்லியில் மீண்டும் பரிசோதனை செய்து மக்களுக்குக் கிடைக்கச் செய்கிறது.
மத்திய அரசின் ஜெனரிக் மருந்துக் கடை வைப்பவருக்கு இரண்டரை லட்சம் ஊக்கத் தொகை கிடைக்கும். மருந்து விற்பவருக்கு 20 சதவிகித லாபம் கிடைக்கும். அனைத்து வகை வலி நிவாரணி மருந்துகள், ஆன்டிபயாடிக்ஸ், எச்.ஐ.வி., புற்றுநோய் மருந்துகளும் இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் கிடைக்கும். ஏற்கெனவே மருந்துக் கடை வைத்திருப்பவர்கள்கூட, பிரதமரின் மருந்துக் கடை திட்டத்துக்கு மாறலாம். ஆனால், அதில் பிராண்டட் மருந்துகளை விற்பதற்கு அனுமதியில்லை.
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து ஆதார் கார்டு, பான் கார்டு நகல் உடன் அனுப்பினால் போதும். அதை பரீசிலித்துவிட்டுக் கடை திறப்பதற்கு வேண்டிய உதவிகள் செய்யப்படும். எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5,000 ரூபாய்க்கு இலவச மருந்துகள் வழங்கப்படுகின்றன.

“ஜெனரிக் மருந்துகளை வாங்குபவர்கள் அதிகரிக்கும்போது பிராண்டட் மருந்துகளின் விலைகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது” என்கிறார் ராஜசேகர். ஜெனரிக் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு, அந்த மருந்துகள் பரவலாகக் கிடைக்கச் செய்வது, மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகளை எழுதித்தருவது முதலானவை அதிகரிக்க அதிகரிக்க, மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதும் சாத்தியமாகும்.
(மத்திய அரசின் ஜெனரிக் மருந்துக் கடைகளுக்கான விண்ணப்பம் பெற இணையதளம் janaushadhi.gov.in. தொடர்பு எண்கள்: மதுரை ராஜசேகர்: 94864 01773, கோவை அருண்குமார்: 94895 38779, சென்னை சக்கிஸ்வர்சிங்: 90953 06167 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக