வெள்ளி, 5 ஜனவரி, 2018

அவை முன்னவர்: எடப்பாடி அடித்த மூன்று மாங்காய்கள்!

அவை முன்னவர்: எடப்பாடி அடித்த  மூன்று  மாங்காய்கள்!சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நேற்று வரை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே செங்கோட்டையன் பல வருத்தங்களில் இருக்க, இப்போது அவரது வருத்தங்களின் மீது இந்த வருத்தமும் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கிறது.
ஓ.பன்னீரை அவை முன்னவராக நியமித்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஒரே கல்லில் இரண்டல்ல, மூன்று மாங்காய்களை அடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். அந்த மாங்காய்களைப் பற்றி அவர்களிடமே விசாரித்தோம்.
“2011 முதல் 2016 வரை முதல்வராக அம்மா இருந்தபோது பன்னீர்தான் அவை முன்னவராக இருந்தார். அவை முன்னவர் என்றால் அவையில் எந்த உறுப்பினர் பேசும்போதும் குறுக்கிட்டுப் பேசலாம். அரசின் தீர்மானங்களை முன்மொழியலாம். முதல்வர் என்பவர் சட்டமன்ற ஆளும் கட்சியின் தலைவர் என்றால், அவை முன்னவர் என்பவர் சபாநாயகருக்கு அடுத்து அவையில் முக்கியமானவர்.

இந்த வகையில்தான் பன்னீர் பிரிந்து சென்ற பிறகு அவை முன்னவராக செங்கோட்டையன், சசிகலாவால் நியமிக்கப்பட்டார். அப்போதே எடப்பாடி பழனிசாமிக்கு லேசான நெருடல் இருந்தது. ஏனென்றால் செங்கோட்டையனை மீறி கொங்கு மண்டலத்தில் இருந்து வளர்ந்து வந்தவர்தான் எடப்பாடி. அவை முன்னவர் என்றால் முதல்வருக்கு அடுத்த இடத்தில் அமர வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனக்கு அடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதன் பிறகு செங்கோட்டையனை அமர வைத்தார். அப்போதும் செங்கோட்டையன் அவை முன்னவராகத்தான் இருந்தார். இந்த நிலையில் ஓ.பி.எஸ். சேர்ந்த பின் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. அவரது கட்சி அவைத் தலைவர் பதவி மதுசூதனனுக்கே திரும்பியது.
செங்கோட்டையன் கூடுதலாகக் கவனித்துவந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையில் செங்கோட்டையனின் செயல்பாடு அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தி வந்த நிலையில்... இப்போது எடப்பாடி தன்னை கொங்குமண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு செங்கோட்டையனை மீண்டும் டி-பிரமோட் செய்துள்ளார். இனி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவை முன்னவர் ஓ.பன்னீர், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை அடுத்து நான்காவது இடத்தில்தான் செங்கோட்டையன் அமர்த்தப்படுவார். இது முதல் மாங்காய்!
இரண்டாவது மாங்காய், இன்னும் சுவாரஸ்யமானது. இப்போது புதிதாக தினகரன் அதிமுகவைத் தோற்கடித்து சபையில் நுழைந்திருக்கிறார். அவர் விவகாரமான கேள்விகளைக் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவை முன்னவராக ஓ.பன்னீரை நியமித்தால் அவருக்கு தினகரன் பற்றிய பின்னணி தெரியும் என்பதால் பதில் சொல்ல வசதியாக இருக்கும் என்று கருதுகிறார் முதல்வர். மேலும், தினகரனின் முக்குலத்தோர் சமுதாயத்தினர் எடப்பாடி மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் முழுவதும் தினகரன் பக்கம் சாய்வதாக உளவுத் துறை ரிப்போர்ட் முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் முக்குலத்தோர் சமூகத்தை கூல் பண்ணுவதற்காகவும் தினகரனை சட்டமன்றத்தில் கவனிப்பதற்காகவும் பன்னீரை அவை முன்னவர் ஆக்கினார்.
மூன்றாவது மாங்காய் என்பது ஓ.பன்னீர் அணியைச் சமாளிக்கும் வகையிலானது. அதாவது அணிகள் இரண்டும் இணைந்த பின் ஓ.பன்னீர் அணியினருக்குப் போதிய வகையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புகார் அவர்கள் தரப்பில் இருந்து இன்னும் புகைகிறது. இதுபற்றி பன்னீரும் பல சமயங்களில் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார். ஆனால் ஆட்சிமன்றக் குழு, செய்தித் தொடர்பாளர் குழு போன்றவற்றை தவிர ஓ.பன்னீர் அணியினருக்கு இன்னும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவர்களை சமாதானப்படுத்துவதற்காகவும் இந்த அவை முன்னவர் அஸ்திரத்தை ஏவியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இப்படியாக ஒரே பதவியின் மூலம் செங்கோட்டையனை மேலும் டம்மியாக்குவது, ஓ.பன்னீரைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது, சட்டமன்றத்தில் தினகரனைச் சமாளிப்பது என்று மூன்று மாங்காய்களை அடித்திருக்கிறார் எடப்பாடி” என்று முடித்தார்கள்.
எடப்பாடி அடித்துள்ள இந்த மூன்று மாங்காய்களும் அவருக்கு இனிக்கப் போகிறதா, புளிக்கப் போகிறதா என்பதை வரும் சட்டமன்றக் கூட்டத் தொடர்தான் சொல்லும்!
- ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக