புதன், 3 ஜனவரி, 2018

மருத்துவர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மீளப்பெறப்பட்டது

நக்கீரன் :முழுக்க முழுக்க மருத்துவர்களை மட்டுமே தலைமையாகக் கொண்டு இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து, தேசிய மருத்துவ கமிஷன் என்ற அரசுத்துறை அமைப்பை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, ‘தேசிய மருத்துவ கமிஷன், 2017’ என்ற மசோதாவையும் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.இதை எதிர்த்து, இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர் மருத்துவர்கள். அரசு தாக்கல் செய்திருக்கும் மசோதாவில், ‘மாற்று அல்லது பாரம்பரிய மருத்துவம் படித்தவர்கள் பிரிட்ஜ் கோர்ஸ் முடித்துவிட்டு அல்லோபதி மருத்துவம் பார்க்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளதை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 2லட்சத்து 90 ஆயிரம் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விவகாரம் இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த்குமார், இந்த மசோதாவில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, குறைகளைக் கண்டறிய நிலைக்குழு அமைக்கப்படும். அது வழங்கும் பரிந்துரைகளின் படி மசோதாவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
கேபினெட் செயலாளருக்குக் கீழ் செயல்படும் கமிட்டி தேர்ந்தெடுக்கும் அரசு தரப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேசிய மருத்துவ கமிஷனில் இடம்பெறுவார்கள் என புதிய மசோதா தெரிவிக்கிறது. முழுக்க முழுக்க அரசின் கையில் மருத்துவ கமிஷன் செல்வது முறையாக இருக்காது எனவும் இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் முழக்கம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக