புதன், 3 ஜனவரி, 2018

விவசாய ட்ராக்டர்கள் வணிக பிரிவில் இணைக்கப்படமாட்டாது திமுகஎம்பிக்களிடம் நிதின் கத்காரி உறுதி

நக்கீரன் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் , விவசாய டிராக்டர்களை வணிக வாகனங்கள் பிரிவில் இணைப்பதையும் - டிராக்டரை விவசாயத் தேவைக்கான பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கும் சட்டத்திருத்தை உடனே கைவிடுமாறும் - விவசாயிகளின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்குமாறும், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை அமைச்சர்  நிதின் கட்காரிக்கு முன்பு எழுதிய கடிதத்தை; தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இன்று (2-1-2018) புதுடெல்லியில் நேரில் சந்தித்து வழங்கினர்.
அக்கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
வணக்கம். ;விவசாய டிராக்டர்களை வணிக வாகனங்கள் பிரிவில் இணைப்பது உள்ளிட்ட அறிவுப்பூர்வமற்ற சட்ட திருத்தங்களை மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகளில் கொண்டு வருவது குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன். நாட்டின் விவசாயப் பெருங்குடி சமுதாயத்தை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த தன்னிச்சையான திட்டம் அர்த்தமற்றதும், நியாயமற்றதும் ஆகும்.
விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வருபவர்கள் என்பதையும், ஒருங்கிணைக்கப் படாத துறையில் அதிகமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் துறையே விவசாயத்துறை என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் முக்கிய பங்காற்றும் துறையை, எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் முன்னேற்ற வேண்டுமே தவிர, விவசாயிகளின் உரிமையை மீறக்கூடாது. கிராமப்புற இந்தியாவில், அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையான விவசாயத்தை, அதற்கு சற்றும் ஒவ்வாத  சட்டங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இதனடிப்படையில், விவசாய டிராக்டர்களை, விவசாய தேவையில் இருந்து நீக்கும் திடீர் முடிவானது, ஏற்கனவே கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்கும், விவசாயத்துறையை சேர்ந்தவர்களுக்கும் தாங்க முடியாத சுமையாகும். தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும், தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால், டிராக்டரை வணிக வாகனமாக மாற்றும் முடிவை எதிர்த்து அவர்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் இந்த முடிவால் விவசாய சங்கங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர், எனவே, ஏற்கனவே துயருற்று இருக்கும் விவசாயத் துறைக்கு மேலும் துயரத்தை கொண்டுவரும் என்பதால், இதுபோன்ற கருணையற்ற முடிவை விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு கைவிடுவது சரியானதாகும்.

விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த, விவசாயத்தை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த திமுக-வை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், டிராக்டரை விவசாயத் தேவைக்கான பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கும் சட்டத்திருத்தை உடனே கைவிடுமாறு கேட்டுக் கொள்வதோடு, விவசாயிகளின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விவசாய சமுதாயத்தினரை முன்னேற்ற இன்னுமும் நிறைவேற்றப்படாத பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவிருக்கும் இந்த சட்டத்தால் எந்த மக்களும் பாதிப்படையாத வகையில், மோட்டார் வாகனச் சட்ட சட்டத்திருத்தம் தொடர்பாக விவசாயச் சமுதாயத்தை சேர்தவர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களுடன் அர்த்தப்பூர்வமான ஆலோசனைகள் நடத்த வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக