திங்கள், 8 ஜனவரி, 2018

கலைஞரை மீண்டும் வைகோ சந்தித்தார் .. திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக .. தெரிவித்தார் .

Lakshmi Priya-  Oneindia Tamil சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார். திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட பின்னர் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் வைகோ. அதன்பிறகு திமுக மதிமுக இடையே அறிவிக்கப்படாத பனிப்போரே நிலவியது. மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர் இதனால் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் வைகோ.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து தனி கூட்டணி அமைத்தார் வைகோ. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கருணாநிதி தனது கனவில் வருகிறார் என்று கூறி கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது கையை பற்றிக் கொண்டதாக மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வைகோ.
இந்நிலையில் அவருக்கு முரசொலி பவள விழா பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து அவர் கலந்து கொண்டார்.
 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக வைகோ பிரசாரம் செய்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதிமுக சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று வைகோ அறிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை வைகோ மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார். திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வைகோ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக