சனி, 20 ஜனவரி, 2018

திருப்பூர் மருத்துவ மாணவன் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது

தினமணி:  தில்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் உடல் திருப்பூரில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர், பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய ஆலை உரிமையாளரான பி.செல்வமணி என்பவரின் மகன் சரத் பிரபு (24). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, தில்லியில் அரசால் நடத்தப்படும் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (யுசிஎம்எஸ்) என்ற மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில், கடந்த 7 மாதங்களாகப் படித்து வந்தார். தில்லி, தில்சாத் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர், கடந்த புதன்கிழமை காலை மர்மமான முறையில் உயிரிழந்தார். வியாழக்கிழமை இரவு, தில்லியிலிருந்து விமானம் மூலமாக அவரது உடல் கோவைக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வாகனம் மூலமாக திருப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில் கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), ஏ.நடராஜன் (பல்லடம்), வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத் தலைவர் நசீருதீன் தலைமையிலான குழுவினர் அஞ்சலி செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாரப்பாளையத்திலிருந்து மங்கலம் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு, தட்டாந்தோட்டம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஹிந்து இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். திமுக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.பி. கே.சுப்பராயன், சரத்பிரபு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மாணவரின் உடலில் காயங்கள்: தில்லியில் மருத்துவ பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு (24), அவர் தங்கியிருந்த வீட்டில் கடந்த புதன்கிழமை காலை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் திருப்பூர் கொண்டுவரப்பட்டு, வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது நெற்றியில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அதேபோல், அவரது கழுத்தின் இடது பக்கத்தில் இறுக்கிப் பிடித்ததற்கான அடையாளமும் காணப்படுகிறது. இவை சரத் பிரபுவின் மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
முன்னதாக, தில்லியில் அவர் தங்கியிருந்த இடத்தில் தவறிக் கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தவிர, பொட்டாசியம் குளோரைடு மருந்து அவரது உடலில் செலுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
சரத் பிரபுவின் உடலில் உள்ள காயங்கள் குறித்து அவரது குடும்பத்தினர் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆறுதல் தெரிவிக்க வந்த அரசியல் பிரமுகர்களிடம் செல்லிடப்பேசியில் பதிவு செய்த சரத் பிரபுவின் புகைப்படங்களைக் காட்டி அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக