செவ்வாய், 9 ஜனவரி, 2018

தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை மாற்ற வேண்டும்

தினத்தந்தி :அனைத்து சினிமா தியேட்டர்களிலும் தேசிய கீதம் போடுவது கட்டாயம் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில், சியாம் நாராயணன் சவுக்சி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களிலும், காட்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் போடுவது கட்டாயம் என்று கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 30–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை மத்திய அரசும் ஆதரித்து வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த உத்தரவை மாற்றி அமைக்குமாறு மத்திய அரசு சார்பில் நேற்று 4 பக்க பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தேசிய கீதம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.
எந்தெந்த சந்தர்ப்பங்களில், நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படவோ, பாடப்படவோ வேண்டும் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய கண்ணியம் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை இந்த குழு வகுக்கும். குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அக்குழு தனது சிபாரிசுகளை சமர்ப்பிக்கும்.
அவற்றை பரிசீலித்து, உரிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிடும். ஆகவே, அதுவரை ஏற்கனவே உள்ளே நிலையே, அதாவது தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். அதற்காக அந்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக