வியாழன், 25 ஜனவரி, 2018

திருப்பூர் மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார் ... உடுமலை ஆணவகொலை ..

மாலைமலர்: உடுமலை சங்கர் கொலையில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலை மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் மரணம் நீதிபதி அலமேலு நடராஜன். கோவை: திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தவர் அலமேலு நடராஜன் (52). இவர் உடுமலை சங்கரை கவுரவ கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.
 இந்தியாவில் கவுரவ கொலைக்கு எதிராக தூக்கு தண்டனை வழங்கிய இவரது தீர்ப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களாக நீதிபதி அலமேலு நடராஜன் நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 11.37 மணிக்கு நீதிபதி அலமேலு நடராஜன் ஆஸ்பத்திரியில் காலமானார். இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. மரணம் அடைந்த நீதிபதி அலமேலு நடராஜன் கோவை போத்தனூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மரணம் அடைந்த நீதிபதி அலமேலு நடராஜன் தனது பள்ளி மற்றும் சட்டபடிப்பை திருச்சியில் படித்துள்ளார். கடந்த 1991-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக பொறுப்பேற்ற இவர், கோவை, வேலூர் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பொறுப்பு வகித்து உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி ஏற்று பணியாற்றி வந்தார். வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கிய இவர் உடுமலை சங்கர் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகளில் 2 முறை விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரணம் அடைந்த நீதிபதி அலமேலு நடராஜன் உடலுக்கு கோவை, திருப்பூர் மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக