திங்கள், 15 ஜனவரி, 2018

பாலமேடு ஜல்லிக்கட்டில் வாலிபர் உயிரிழந்தார்

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலிமாலைமலர் :மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது சீறிவந்த காளை முட்டியதில் காளிமுத்து என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 458 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்குவதற்காக சுமார் 700 வீரர்கள் களமிறங்கினர். தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின்போது, விளையாட்டில் பங்கேற்றும் மாடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் இடத்தில் வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஒரு காளை ஆவேசமாக சீறிப் பாய்ந்தது.



காளை முட்டியதில் சுமார் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவர் குழுவினர் முதல்உதவி சிகிச்சை அளித்தனர். மோசமான நிலையில் படுகாயமடைந்திருந்தவர்கள் மதுரை நகரில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) என்பவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது, சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக