புதன், 3 ஜனவரி, 2018

பீமா கோரேகானில் தலித் மக்கள்மீது தாக்குதலை நடத்திய ஜாதிவெறி குண்டர்களுக்கு போலீசாரே உதவினர்

தலித் மக்கள் மீதான தாக்குதல்: ராகுல் கண்டனம்!
மின்னம்பலம் :‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தலித் மக்களைச் சமூகத்தின் அடித்தளத்தில் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றன’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் .
நேற்று முன்தினம் (ஜனவரி 1) மகாராஷ்டிராவில், பீமா கோரேகானில் போர் நினைவு அஞ்சலி செலுத்த சென்ற தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஜனவரி 2) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தலித் மக்களைச் சமூகத்தின் அடித்தளத்தில் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றன’ என்று விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், “உணா, ரோஹித்வெமுலா மற்றும் பீமா கோரேகான் போன்றவை சக்திவாய்ந்த எதிர்ப்பு அடையாள சின்னங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மராட்டிய பேஷ்வா மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே 1818ஆம் ஆண்டு போர் மூண்டது. இப்போரில் மஹர் எனப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கிலேயர்களோடு இணைந்து போரிட்டு மராத்திய பேஷ்வாக்களை வென்றனர்.
பீமா கோரேகான் என்னுமிடத்தில் இந்த வெற்றிக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் 200ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பங்கேற்றனர். இவர்கள்மீது மற்றொரு தரப்பினர் மிகப்பெரிய அளவில் தாக்குதலை நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் ராகுல் ஃபெடங்கல் (28) என்ற இளைஞர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக மும்பை முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜனவரி 2) வன்முறை வெடித்துள்ளது. மும்பையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பீமா கோரேகானில் போர் நினைவு அஞ்சலி செலுத்த சென்ற தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரிக்க மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தும், உயிரிழந்த ராகுல் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இன்று (ஜனவரி 3) முழு அடைப்புக்கு தலித் அமைப்புகள், இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக