புதன், 3 ஜனவரி, 2018

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலையில் தங்கம் இல்லை !100 கிலோ தங்கம் போசடி ... ஒரு துளி தங்கம்கூட

புதிதாக செய்யப்பட்ட சிலைகளில் தங்கமே இல்லை: ஏடிஎஸ்பி தகவல்; தொடர்ந்து தீவிர விசாரணை
tamilthehindu :காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிலைகளில் தங்கம் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று ஏடிஎஸ்பி வீரமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருவாச்சி காணாமல் போய்விட்டதாக தினேஷ் என்பவரும், புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலைக்கு சுமார் 100 கிலோ அளவில் தங்கத்தை வசூலித்துவிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவுப்படி சேர்க்க வேண்டிய 5.75 கிலோ தங்கம் கூட சேர்க்கவில்லை என்று அண்ணாமலை என்பவரும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இவர்கள் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரில் தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த மாசிலாமணி உட்பட 9 பேர் சேர்க்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஏகாம்பரநாதர் கோயிலில்உள்ள சிலைகளை நேற்று 5 மணி நேரம் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனை காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி வீரமணி, டிஎஸ்பி முகிலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மொத்தம் 3 இடங்களில் சிலைகளை சோதனை செய்தனர்.
இந்தச் சோதனை தொடர்பாக ஏடிஎஸ்பி வீரமணி கூறும்போது, “புதிதாகச் செய்யப்பட்ட சிலைகளில் தங்கம் இல்லை. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உத்தரவுப்படி இதில் 5.75 கிலோ தங்கம் சேர்க்க வேண்டும். இந்தச் சிலைகளில் அந்த அளவுக்குத் தங்கம் இருப்பதாக ஸ்தபதி முத்தையா அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிக்கையில் குறிப்பிட்டபடி தங்கம் இதில் இல்லை” என்றார்.
சிலைகளில் சேர்ப்பதற்கு 5.75 கிலோ தங்கம் மட்டும் வசூலிக்கப்பட்டதா அல்லது கூடுதலாக வசூலிக்கப்பட்டதா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எவ்வளவு தங்கம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பழைய சிலைகளை சோதனை செய்ததில் அதிலும் தங்கம் இல்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
கோயில் செயல் அலுவலர் முருகேசன் கூறும்போது, “சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 3 சிலைகளை ஆய்வு செய்தனர். மூன்றும் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்தவை. ஒன்றுதான் புதிதாக செய்யப்பட்டது. ஆய்வு முடிவு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எங்களிடம் எதுவும் கூறவில்லை” என்றார்.
பழைய ஐம்பொன் சிலை எங்கே?
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெற்ற சிலை ஆய்வின்போது பழைய சோமாஸ்கந்தர் சிலையிலும் தங்கம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் பழைய சிலைக்குப் பதில் வேறு சிலை மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரகுபதியிடம் கேட்டபோது, “பழைய ஐம்பொன் சிலை 115 கிலோ எடை கொண்டது. அதில் 87 கிலோ அளவுக்கு தங்கம் இருப்பதாக ஏற்கெனவே ஸ்தபதி முத்தையா இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால் அந்த சிலையை தற்போது ஆய்வு செய்தபோது அதில் தங்கமே இல்லை. எனவே இந்த சிலை மாற்றப்பட்டுள்ளதா அல்லது அறிக்கையில் தவறு நேர்ந்துள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம். அந்த ஆய்வுக்கு பின்னரே இந்த சிலை மாற்றப்பட்டுள்ளதா என்பது தெரியவரும்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக