திங்கள், 22 ஜனவரி, 2018

மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போவதாக ஜீயர் தெரிவிப்பு

ஜீயர் விதித்த கெடு!


கவிஞர் வைரமுத்துவுக்கு  எதிராக மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் போராட்ட அறிவிப்பை நேற்று (ஜனவரி 21) வெளியிட்டுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி தினமணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து உரையாற்றினார். ஆண்டாள் குறித்து அவர் கூறியது சர்ச்சைக்குள்ளாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.
வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், இந்து அமைப்புகள் ஆகியோர் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜனவரி 15ஆம் தேதி போராட்டம் நடந்தது.
அதில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ‘வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார். வைரமுத்து மன்னிப்பு கேட்காத நிலையில் அறிவித்தபடி ஜனவரி 17ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறநிலையத் துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தின் இரண்டாவது நாளான ஜனவரி 18 அன்றே போராட்டத்தை முடித்துக்கொண்டார். ஏற்கெனவே பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜீயர் அறிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் ‘ஆண்டாள் என்னுடைய தாயைப் போன்றவர், என்னுடைய கருத்தை தவறாகச் சித்திரித்து கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள்’ என்று வைரமுத்து விளக்கமளித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 21) செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால், தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மீண்டும் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக