சனி, 20 ஜனவரி, 2018

ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்! கட்சிகள் கோரிக்கை

மின்னம்பலம்: மதக் கலவரங்களை தூண்டும் விதமாக பேசிவரும் ஹெச்.ராஜா, நாயினார் நாகேந்திரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென திவிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.
ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு வைரமுத்து உரிய விளக்கமும் அளித்துவிட்டார். ஆனாலும் அவருக்கு எதிராகவும், திருப்பதி கோயில் உண்டியல் குறித்துப் பேசியதாக கனிமொழிக்கு எதிராகவும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், முன்னாள் அமைச்சர் நாயினார் நாகேந்திரனும் வைரமுத்துக்கு எதிராக அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசினர். மேலும் நித்தியானந்தா சிஷ்யைகள் விமர்சித்துப் பேசும் காணொளியும் வெளியானது.
இந்நிலையில் நேற்று ( ஜனவரி 19) மதுரை மாவட்ட திவிக செயலாளர் மணி அமுதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வெ. கனியமுதன், மற்றும் ஆதிதமிழர் பேரவை உட்பட 7 அமைப்புகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மதுரை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், "நித்தியானந்தா பீடத்தில் உள்ள பெண் சீடர் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசியுள்ளார். அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கனிமொழி எம்.பி.யை தரக்குறைவாகப் பேசிய நித்தியானந்தா மடத்தின் உறுப்பினர்கள், அவர்களைப் பேசத் தூண்டிய நித்தியானந்தா ஆகியோரைக் கைது செய்ய வேண்டும்.
ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்!தொடர்ச்சியாக மதக் கலவரங்களை தூண்டும் விதமாகப் பேசிய ஹெச்.ராஜாவையும், நாயினார் நாகேந்திரனையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் புகார் அளிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக