திங்கள், 29 ஜனவரி, 2018

பார் கவுன்சில் தேர்தல்! பலகோடி ரூபாய் பணபரிமாற்றம் ... ஆர் கே நகர் தேர்தலை போலவே பணம் பணம் ..

இடைத்தேர்தலை மிஞ்சும்  பார் கவுன்சில் தேர்தல்!மின்னம்பலம் :தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பல கோடி ரூபாய் முறைகேடாகச் செலவழிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கை, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதனையடுத்து, பார் கவுன்சில் தேர்தலை வருமான வரித் துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு மேற்பார்வையிட வேண்டுமென உத்தரவிட்டது.
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல், கடைசியாக 2011ஆம் ஆண்டு நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் 2016இல் முடிவடைந்தது. தற்போது சிறப்பு உறுப்பினர்கள் இதனை நிர்வகித்துவருகின்றனர். நீண்ட காலமாகத் தாமதமாகிவந்த பார் கவுன்சில் தேர்தல் குறித்துக் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இதன்படி, வரும் மார்ச் 28ஆம் தேதியன்று தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனுவை, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி, இந்தத் தேர்தலைப் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வழக்கறிஞர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதாகப் புகார் எழுந்தது.
இது குறித்து வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்கவுள்ள ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்காக 3-4 கோடி ரூபாய்வரை செலவிடப்படவுள்ளதாகவும் அவர் இந்த மனுவில் தெரிவித்துள்ளார். அதோடு, “பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்து விவரங்களையும், தங்கள் மீது வழக்கு ஏதும் நிலுவையில் இருக்கிறதா என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்” என்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு இந்த மனு இன்று (ஜனவரி 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆர்.கே.நகர் தேர்தலையே விஞ்சிவிடும் அளவுக்கு பார் கவுன்சில் தேர்தல் இருப்பதாகத் தெரிவித்தனர்; இந்த தேர்தலில் முறைகேடாகச் செலவு செய்வதற்கான பல கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், மார்ச் 28ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலைக் கண்காணிக்க வேண்டுமென்றும், வருமான வரித் துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு இதனைக் கண்காணிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எதிர்த் தரப்பு வழக்கறிஞர் வாதாட அவகாசம் வேண்டுமென்பதால், நாளை (ஜனவரி 30) வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக