திங்கள், 29 ஜனவரி, 2018

கார்பரேட் நிதி பெறுவதில் பாஜக முதலிடம்! கம்பனிகள் நிதி 89 வீதம் பஜகவுக்கே

மின்னம்பலம்:  தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக கார்பரேட் நிதி பெறுவதில் முதலிடம் பெற்றுள்ளது பாஜக. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவிலுள்ள கட்சிகளுக்கு கார்பரேட் நிறுவனங்கள் அளித்த மொத்த நிதியில் சுமார் 89 சதவீதத்தை பாஜக பெற்றிருப்பதாக, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வுமுடிவு தெரிவித்துள்ளது.
தேர்தலில் ஒரு கட்சி போட்டியிட கொள்கைகளும் கட்சித்தொண்டர்களின் உழைப்பும் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு கட்சியின் பொருளாதார பலமும் அமைய வேண்டியது அவசியம். இதனைச் சார்ந்து, கட்சிகள் தொண்டர்களிடம் தேர்தல் நிதி வசூலிக்கின்றன. இது தவிர்த்து, வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து கட்சிகளுக்கு நிதி வழங்குவதும் பல காலமாகத் தொடர்ந்து வருகிறது.
இதனை முறைப்படுத்துவது குறித்து, கடந்த காலத்தில் பல யோசனைகளை முன்வைத்துள்ளது ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு.
இந்த அமைப்பு, 2016-17ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள கட்சிகளுக்கு கார்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நிதி குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. இதில், பத்து கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை 325.27 கோடி எனவும், அதில் பாஜக பெற்றுள்ள நிதி மட்டும் 290.22 கோடி எனவும் தெரிய வந்துள்ளது. இது, மொத்தம் வசூலான தொகையில் சுமார் 89 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகளுக்கான தேர்தல் நிதி பெறுவதற்காக, மொத்தம் 21 அறக்கட்டளைகள் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டு அறக்கட்டளைகள் மூலமாக பாஜகவுக்கு அதிக நிதி கிடைத்துள்ளது. சத்யா / ப்ரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை, 2016-17ஆம் ஆண்டில் மொத்தமாக 283.73 கோடியைப் பெற்றுள்ளது. இதில் பெரும்பகுதியை பாஜகவுக்கு வழங்கியுள்ளது.
மீதமுள்ள தொகையில் காங்கிரஸுக்கு 16.5 கோடி, சிரோன்மணி அகாலிதளத்திற்கு 9 கோடி, சமாஜ்வாதி கட்சிக்கு 6.5 கோடி, சிவசேனா மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு தலா 1 கோடியைத் தந்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, ராஷ்டிரிய லோக்தளம் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும், இது நிதி வழங்கியுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு, இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் உதவியளித்து வருகின்றன.
இதேபோல, தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அம்சங்களை முன்னெடுத்துவருவதாகச் சொல்லப்படும் ஜனதா நிர்வசக் அறக்கட்டளையும் பாஜகவுக்கு அதிகளவில் நிதி அளித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, பாஜகவுக்கு கார்பரேட் நிறுவனங்கள் அளித்துவரும் நிதியின் அளவு அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியில் சுமார் 69% யாரிடமிருந்து பெறப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு. தேர்தல் அறக்கட்டளைகளில் கார்பரேட் நிறுவனங்கள் அளிக்கப்படும் நிதி முறைப்படுத்தப்பட்டபோதும், எந்த நிறுவனம், எந்த கட்சிக்கு, எவ்வளவு நிதி வழங்கியது என்பது குறித்த தெளிவான விவரங்கள் ஏதும் சொல்லப்படுவதில்லை.
கட்சிகள் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து கேள்வி எழுப்பும் அமைப்புகள், இதனையே பிரதானமாக முன்வைக்கின்றன. அருண் ஜெட்லி அறிவித்துள்ள தேர்தல் நிதி பத்திரம் இந்த வெளிப்படைத்தன்மையை மேலும் குறைக்கும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக