திங்கள், 4 டிசம்பர், 2017

பாஜகவைப் பின்னுக்கு தள்ளிய சுயேச்சைகள்! உத்தரபிரதேசம் EVM வாக்குகள் 45 வீதம் பாஜகவுக்கு ஏனையவற்றில் 15 வீதம் மட்டுமே பாஜக

மின்னம்பலம் :உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 16 நகர மேயர் பதவிகளுக்கான போட்டியில் பாஜக 14இல் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இந்தத் தேர்தலில் தாங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். 14 நகர மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களைக் கைப்பற்றி சுயேச்சை வேட்பாளர்களே முதலிடத்தில் உள்ளது தரவுகள் மூலம் தெரியவருகிறது.
பேரூராட்சி
பேரூராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 5,433 இடங்களில் , 3,875 இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். மொத்த இடங்களில் இது 71.31 சதவிகிதம். மறுபக்கம், பாஜக வெறும் 664 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது 12.22 சதவிகிதம். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 453 இடங்களிலும் (8.33 சதவிகிதம்) மாயாவதியின் பகுஜன் சமாஜ் 218 இடங்களிலும் (4.01 சதவிகிதம்) காங்கிரஸ் 126 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதேபோல், பேரூராட்சித் தலைவர்களுக்கான 438 இடங்களில் சுயேச்சைகள் 182 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது, 41.55 சதவிகிதம். பாஜக 100 இடங்களில் மட்டுமே வென்று இண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
நகராட்சி
நகராட்சி இடங்களையும் சுயேச்சைகளே அதிகளவு வென்றுள்ளனர். மொத்தமுள்ள 5,260 வார்டுகளில் சுயேச்சைகள் 3,380 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இது 64.25 சதவிகிதம். பாஜகவைப் பொறுத்தவரை 922 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது, 17.53 சதவிகிதம் மட்டுமே.
மொத்தமுள்ள 198 நகராட்சிகளில் 70ஐ மட்டுமே பாஜக பெற்றுள்ளது. சமாஜ்வாதி 45 நகராட்சிகளையும், சுயேச்சைகள் 43 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மாநகராட்சி
மாநகராட்சியில் மொத்தமுள்ள 1299 இடங்களில் பாஜக 596 இடங்களில் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகள் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகளை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பாஜக வெற்றி பெற்றதற்கு மின்சார வாக்கு இயந்திரமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. மேயர் பதவிக்கான தேர்தல்கள் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடத்தப்பட்டன. இதில் 16இல் 14 மாநகராட்சிக்கான மேயர் பதவிகளை பாஜக பெற்றது. அதேவேளையில், வாக்கு சீட்டு மூலம் நடத்தப்பட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தேர்தல்களில் பாஜக பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.
இது தொடர்பாக உ.பி.முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், மின்னணு வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் பாஜக வெற்றி சதவிகிதம் என்பது 46 ஆக உள்ளது. அதே நேரத்தில், வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் இது வெறும் 15 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களையும் வாக்கு சீட்டு மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துவருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக