திங்கள், 4 டிசம்பர், 2017

பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசு மறுப்பு .... அந்த சலுகை எல்லாம் குஜராத் பிகார் .....

பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்!மின்னம்பலம் :குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒகி புயலால் குமரி மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்தும், சாலைகளின் மரங்கள் முறிந்து விழுந்தும் கடுமையான சேதத்தை விளைவித்துள்ளது. வெள்ளம் சாலைகளை அரித்துச் சென்றதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மீனவர்களைக் காணவில்லை என்று மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மீனவர்களை மீட்க அரசின் சார்பில் கடற்படை ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் தேடிவருகின்றன. அரசின் சார்பில் குமரி மாவட்டத்துக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 4) திமுக செயல் தலைவர் ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் குமரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒகி புயல் குமரி மாவட்டத்தில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுனாமி வந்தபோதுகூட இவ்வளவு பாதிப்பு ஏற்படவில்லை. புயலால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமைச்சர் ஜெயகுமார், நாங்கள் 29ஆம் தேதியே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டோம் என்று கூறுகிறார். ஆனால் அப்படியேதும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் புகார் கூறுகின்றனர். மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எனவே எந்த அறிவிப்பையும் பார்க்க முடியாத சூழலில்தான் மக்களும் இருந்தனர் என்ற ஸ்டாலின், "மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை" என்றார்.
மேலும் ஸ்டாலின், "காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படும் நிலையில், அரசின் சார்பில் இதுகுறித்து முறையாக கணக்கெடுக்கப்படவில்லை. மீட்புப் பணி நடவடிக்கைகளும் ஏமாற்றத்தையே அளிக்கின்றன. புயலுக்கு அரசின் சார்பில் 25 கோடி ரூபாயும், இறந்த 7 பேரின் குடும்பங்களுக்குத் தலா நான்கு லட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டதையும் தவிர வேறேதும் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
மீனவ கிராமங்களை அமைச்சர்கள் பார்வையிடாமல் சென்றுள்ளனரே என்ற கேள்விக்கு, "மீனவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அச்சத்தின் காரணமாக ஆய்வுக்கு வந்த அமைச்சர்கள் மீனவ கிராமங்களுக்கு செல்லாமல் இருக்கலாம். இந்த மாவட்டத்தின் மீது அமைச்சர்கள் எவ்வளவு மதிப்பு வைத்துள்ளார்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது" என்றார்.
தொடர்ந்து, "கேரள மாநிலம் முழுவதையும் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில முதல்வர் விடுத்துள்ளார். தமிழகத்தில் குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவித்தால்தான் அதற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற முடியும். அதைவைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் அமைச்சர்கள் மத்திய அரசிடம் மண்டியிட்டுள்ளதால் எதையும் அவர்களிடமிருந்து வாதாடிப் பெற முடியாது” என்று தெரிவித்த ஸ்டாலின், பேரிடர் மாவட்டமாக அறிவிக்கக் கோரி கண்டிப்பாக திமுக சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக தினகரனும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக