செவ்வாய், 5 டிசம்பர், 2017

நான்! ஜெ ஜெயலலிதா பேசுகிறேன்: உங்கள் வாழ்வையும் என் வாழ்வையும் நாசம் செய்தீர்கள்.

Sankar Ganesh :  கிட்டத்தட்ட உங்களுடன் பேசி ஒரு வருடம் ஆகிவிட்டது. நான் நிரம்ப மகிழ்ச்சியுடன் இருந்த காலம் இது. என்னுடைய 'அம்மா' சந்தியாவின் கதகதப்பில் இளைப்பாறி கொண்டிருக்கிறேன். அவளின் கருப்பையில் மீண்டும் குடியிருக்கிறேன். எமது இறப்பு எப்படி நடைப்பெற்றது, என்பது எமக்கும் தெரியாது. ஆதலால் உங்களை போல எனக்கும் அது மர்மம் தான். மேலும் இறப்பதற்கு முன்வரை என் உடல் பல்வேறு நோய்களின் கூடாரங்களாக இருந்ததனால் அந்த மர்மம் பற்றி அலட்டிகொள்வதில்லை. இப்போது என்னை நினைத்து சில-பலர் அழுவதாக கேள்விபட்டேன். ஏன், எதற்கு அழுகுறீர்கள்? நான், வாழும் வரை என் வாழ்வை சிதைத்தது போதாதா? அம்மா, இறந்தபின்பு கிட்டத்தட்ட மனநோயாளி போன்று தான் என் வாழ்க்கை கழிந்தது. அந்த எம்ஜிஆர் வந்தார்! அரசியலில் உன்னை ஆளாக்குகிறேன், அப்படி- இப்படி என்று அவரின் முழு கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டு வந்தார். அம்மாவுக்கு பிறகு, எனக்கு எல்லாமுமாக இருந்த இரண்டாவது நபர் அவர். இந்த கிளியை சுற்றி தங்கக் கூண்டு இட்டு, என்னுடைய வாழ்வை நரகமாக்கினார். அரசியல் ஆர்வம், கைவிடப்பட்ட அநாதை நிலை போன்ற காரணங்களால் அந்த கூண்டை விட்டு என்னால் பறக்க முடியவில்லை. இறக்கைகளையும் வெட்டியே வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் என்னை வெறுக்க ஆரம்பித்து வேறு யாரையோ முன்னிலை படுத்த நினைத்தார். அவருக்காக என் வாழ்வையே சிதைத்து கொண்ட என்னால் அந்த புறக்கணிப்பை தாங்க முடியவில்லை.. வெறுப்பை வளர்த்தேன். அதிமுகவை கைப்பற்றினேன். என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு அந்த கட்சியை கைப்பற்றியது தான்.


பிறகு தேர்தல் வெற்றி தோல்வி என ....என்றைக்காவது நான் மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டது உண்டா? தீவிர அரசியல் பணியாற்றியது உண்டா? பிறகு, ஏன் என்னை வெற்றி பெற வைத்தீர்கள்? ஒரு வேளை நீங்கள் என்னை தொடர்ந்து தோற்கவைத்து இருந்தீர்கள் என்றால், எனக்கு பிடிக்காத அரசியலை விட்டு என்றே விலகி இருப்பேன்.
வெற்றி, தோல்வி, வெற்றி என மாறி மாறி கொடுத்து ஏன் வாழ்வை நாசப்படுத்தியது ஏன்? எதிர்க்கட்சியாக நான் இருக்கும் போதும் வேதா நிலையத்திற்கு பிறகு எனக்கு பிடித்த கொடநாடு பங்களாவில் தானே
பல நாட்களை கழித்தேன்? நித்தம் ஒரு போராட்டம், பொழுது ஒரு ஊர் என சராசரி அரசியல்வாதியாக நான் செயலாற்றியதே இல்லையே? என்னுடைய வீடு, ஏன் வீடு அமைந்திருக்கும் தெருவில் கூட சாமானியன் வந்து மனு கொடுக்க முடியுமா? அமைச்சர், எம்எல்ஏ என யாரவது என்னை உடனடியாக சந்திக்க முடியுமா? இத்தனையும் தெரிந்த பின்பும் ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்? இன்றைக்கு அந்த சசிகலாவை கொள்ளைக்காரி/வேலைக்காரி என்கிறீர்கள்! அப்படியானால், கொள்ளைக்காரி உடன் 25 ஆண்டுக்கும் மேல் ஒரே வீட்டில் வசித்த நான் யார்? நான் அவளை என்னுடைய உடன்பிறவா சகோதரி என்றழைத்த போது, வேலைக்காரி என்று சொல்லியிருக்க வேண்டியது தானே?
இன்னொன்று ஒன்று சொல்கிறார்கள். சசிகலா தான் என்னை கொன்றாராம்! இதைகேட்டு சிரிப்பதா? அழுவதா? பெரிய பெரிய தோல்விகளில் எல்லாம் என்னுடன் இருந்த சசிகலா, அப்போதே என்னை கொன்றிருக்கலாமே? உங்களுக்கெல்லாம் மூளை என ஒன்று இருக்கிறதா? இல்லையா? அப்பல்லோ நாட்களில் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் எப்படி இறந்தேன் என்பது தெரியாது. ஆனாலும் ஒன்றை உறுதியாக சொல்வேன். சசிகலாவால் நான் சாகவில்லை. அல்லது, அவரால் மட்டுமே நான் இறந்திருக்க மாட்டேன். இப்போது சசிகலாவை கண்டால் கடிக்க வரும் தமிழகம், நான் உயிரோடு இருக்கும் போது சசிகலாவை ஏன் விலக்க சொல்லவில்லை? சசிகலா உடன் ஜெ உறவு வைத்திருக்கிறார்; அதனால் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என இருந்தீர்களா? ஏன், அப்போது சொல்லவில்லை? நான், அடிப்பேன் என பயமிருக்கலாம். இப்படி அடி வாங்கி, மிதி வாங்கி என்னை ஆதரித்த அவசியம்? அந்த திமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டங்களை கூட நான் செய்யவில்லையே? ஒருவேளை நீங்கள் கேட்கலாம், பிடிக்காத அரசியலை விட்டு விலகவேண்டியது தானே என்று! எப்படி என்னால் விலக முடியும்? நான், செத்த பிறகும் கூட என் வீடு சோதனைகளுக்கு உள்ளாகிறது. உயிரோடு இருக்கையில், வெற்றி வாய்ப்பு இருக்கையில் நான் விலகி இருந்தால் மீதமிருக்கும் காலம் முழுதும் சிறையில் தள்ளி இருப்பார்கள். ஒருவேளை நான் தோற்று கொண்டே இருந்திருந்தால், என்னுடைய முக்கியத்துவம் இழந்து நிம்மதியான ஓய்வை சந்தித்து இருப்பேன். ஆனால், என்னை நீங்கள் தோற்கடிக்காமல் வெற்றி பெற வைத்து முள் கீரிடம் சுட்டினீர். ஒருவேளை எனது மரணம் இயற்கையானதில்லை என்றால், முழு பொறுப்பும் அந்த பிஜேபியை தான் சாரும். இனிமேலாவது என்னை நினைத்து அழுது, என்னை தொந்தரவு செய்யாதீர்கள். எனக்காக எதுவும் செய்யவேண்டும் என நினைத்தால், சாதி-மதம் பார்க்காமல், பிஜேபி (அ) பிஜேபி இடம்பெறும் கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டும். யாருடைய விமர்சனத்தையும் காதில் வாங்காமல் என்னை வெற்றி பெற வைத்து, உங்கள் வாழ்வையும் என் வாழ்வையும் நாசம் செய்தீர்கள். இனிமேலாவது என்னை விமர்சிப்பதை அனுமதியுங்கள். ஒருவேளை விமர்சனங்களை மதித்து, அதற்கேற்ப மாறியிருந்தால் இப்படி அநாதை சாவு எனக்கு வந்திருக்காது. தமிழ்நாட்டிற்கு இன்னொரு ஜெயலலிதா வேண்டாம். என்னை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுங்கள். புண்ணியமாய் போகும். சசிகலாவை நினைத்தால் மட்டும் தான் எனக்கு கவலை... வேறு எதை பற்றியும், யாரை பற்றியும் கிஞ்சித்தும் கவலை எனக்கில்லை. அவள், எனக்காக வாழ்ந்தவள்.. அவளை நிம்மதியாக வாழ விடுங்கள். காலில் விழுந்து, காலில் விழுந்து கழுத்தறுத்தது போதும்.
மீண்டும் சந்திக்க வேண்டாம்!
வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக