வியாழன், 21 டிசம்பர், 2017

ராசா கனிமொழி விடுதலை... திமுகவில் ஏற்படுத்த போகும் பாரிய மாற்றங்கள்?

டிஜிட்டல் திண்ணை!
மின்னம்பலம் :“கடவுள் மறுப்பு உள்ளிட்ட திராவிட கொள்கைகளை தமிழகத்தில் தொடங்கி வைத்தது பெரியார். அவருக்கு பிறகு வந்த அண்ணா அதைப்பற்றி பெரிய அளவில் பேசவில்லை. ஆனால், அண்ணாவுக்குப் பிறகு தி.மு.கவின் தலைவரான கருணாநிதி திராவிட கொள்கைகளை மக்களிடம் அதிகமாக எடுத்துச்சென்றார் என்றும் தமிழகத்தில் திராவிடம் பற்றி பேசி வருபவர்களில் முக்கியமானவர் கருணாநிதிதான்.
இந்துமதத்தைப் பொறுத்தவரை கருணாநிதிக்கு பெரிய அளவில் ஈடுபாடு இல்லையென்றாலும் அதை எதிர்க்கவும் இல்லை. திராவிட கொள்கைகளில் மீது ஈடுபாடு உள்ளவர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். கட்சிசாராமல் இருக்கும் நடுநிலையாளர்களும் தி.மு.கவுக்குதான் வாக்களிக்கிறார்கள். இதற்கும் காரணம் கருணாநிதி ஏற்படுத்திய இமேஜ்தான்.
இப்போது, அவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. 2ஜி வழக்கில் வரப்போகும் தீர்ப்புதான் தி.மு.கவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். 2ஜி வழக்கில் எந்தவிதத்திலும் நாம் தி.மு.கவுக்கு உதவுக்கூடாது. 2ஜி தீர்ப்பு தி.மு.கவுக்கு எதிராக வரும்பட்சத்தில், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீண்டும் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இது தி.மு.கவுக்கு மிகப்பெரிய சரிவை உண்டாக்கும். அப்போது, நடுநிலையாக இருந்து தி.மு.க பக்கம் சாயும் வாக்குகள் அவங்களுக்கு போகாது. அவர்களை எப்படி பி.ஜே.பி பக்கம் கொண்டுவரலாம் என்று நாம் சரியாக யோசித்து அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்கவேண்டும். இப்படி இரண்டு கட்சிகளுக்கும் சரிவை உண்டாக்கும் நேரத்தில்தான் நமது வளர்ச்சியை அதிகப்படுத்தி கொள்ளமுடியும். இந்த தகவல்களை மனதில் வைத்து நமது அரசு செயல்பட வேண்டும் என்று மோடியிடம் சொல்லி இருக்கிறார்கள். இனி, மோடி என்னசெய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ - என்ன புரியவில்லையா? கடந்த 03.09.2016 டிஜிட்டல் திண்ணையில் நாம் குறிப்பிட்டு இருந்த தகவல்தான் இது.

அப்போது பிஜேபி இப்படித்தான் நினைத்தது. காலங்கள் கடந்தது. காட்சிகளும் மாறியது. அப்படி நினைத்த மோடி கருணாநிதியை சந்திக்க கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி கோபாலபுரத்துக்கே வந்தார். அதற்கும் காரணம் உண்டு. பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த 2ஜி தீர்ப்பு தொடர்பாக தெரிந்து கொள்ள பேசி இருக்கிறார்கள். தங்களது எண்ணத்தையும் சொல்லி இருக்கிறார்கள். டிசம்பர் 9ஆம் தேதி, அதாவது குஜராத் தேர்தலுக்கு முன்பாக வழக்கின் தீர்ப்பு வர வேண்டாம் என பிஜேபி நினைத்தது.. காரணம், 2 ஜி வழக்கிலிருந்து எல்லோரும் விடுதலை ஆவார்கள். தீர்ப்பு திமுகவுக்குச் சாதாகமாகவே வரும் எனத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. தீர்ப்பு முன்கூட்டியே வந்தால், அது குஜராத் தேர்தல் முடிவை பாதிக்கும் என பிஜேபி கணக்கு போட்டது. தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வரும் என்பது உறுதியானதால்தான் மோடி, கோபாலபுரத்துக்கே வந்தார். இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்ட கட்சியை சேர்ந்த ஒருவருடைய வீட்டுக்குப் பிரதமர் எப்படிப் போவார்? நாமும் கூட இதை அந்த சமயத்தில் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருக்கிறோம்.
2ஜி வழக்கைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் இருந்து ஆ.ராசாவும், கனிமொழியும் விடுவிக்கப்படுவார்கள் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், திமுகவில் உள்ளே இருந்த சில மூத்த மாவட்டச் செயலாளர்களே கூட, ’ஆ.ராசா இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகவே மாட்டாரு... அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை’ என்று சொல்லி வந்தார்கள். அதற்கு காரணம், ஆ.ராசாவை பொறுத்தவரை சுறு சுறுப்பானவர். இந்த 2ஜி வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்ட பிறகு வழக்கமான அவரது பணிகள் எல்லாமே முடங்கிவிட்டது. ராசா இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகிவிட்டால், அவரது கிராஃப் மறுபடியும் ஏற ஆரம்பித்துவிடும் என நினைத்தார்கள் சிலர். ஆனால், அதையெல்லாம் அவர்களால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த சமயத்தில் ஸ்டாலினிடம், குடும்பத்தை சேர்ந்த சிலர், தயாநிதி மாறனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், ஸ்டாலினோ, ‘ ஆ.ராசாவும், கனிமொழியும் 2ஜி வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தால் அவங்களை கட்சியை விட்டே நீக்கிடுவேன். அப்படி இருக்கும் போது தயாநிதி மீது பி.எஸ்.என்.எல். வழக்கு இருக்கு. அவருக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்?’ என கேட்டாராம்.
,
வழக்கின் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பது முன்கூட்டியே ஸ்டாலினுக்கு உறுதியாக தெரிந்ததால்தான் கட்சியில் இருந்து துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேற்றே டெல்லிக்கு அனுப்பிவைத்தார். இன்று தீர்ப்பு வெளியானதும், ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் போனில் வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் அடுத்தகட்டமாக கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்துவிட்டாராம் ஸ்டாலின். அதை தனக்கு நெருக்கமானவர்களிடம் இன்று சொல்லி சந்தோஷப்பட்டும் இருக்கிறார். ‘பொறுப்பு என்று உடனே எதுவும் கொடுக்க வேண்டாம். ஆனால், அவங்களுக்கான முக்கியத்துவம் இனி கட்சியில் இருக்கணும்’ என்று சொன்னாராம் ஸ்டாலின். ” என்று முடிந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக