ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பசுமையை மீட்கக் குவிந்த கூட்டம்!

பசுமையை மீட்கக் குவிந்த கூட்டம்!
மின்னம்பலம் :சென்னையின் பசுமையை மீட்பதை வலியுறுத்தி ரீ கிரீன் சென்னை தன்னார்வ அமைப்பின் சார்பில் சென்னை மத்திய கைலாஷ் முதல் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகம் வரையில் இன்று (டிசம்பர் 17) காலை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

காலை 6.30க்கு ஓட்டம் தொடங்கியது என்றபோதிலும் அதிகாலை முதலே மாரத்தானில் பங்கேற்பவர்கள் வரத்தொடங்கினர். ஓடுபாதையில் 6 இடங்களில் குடிநீர் மற்றும் முதலுதவி வசதி, அவசர மருத்துவ உதவிக்கு குழு, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 25 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீரும், 2500 இளநீர்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை கலைஞர்களின் நடனமும் இசையும் அங்குக் கூடியிருந்தவர்களை உற்சாகமடைய செய்தது.

ஓட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 வினாடிகள் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் பேசிய ரீ கிரீன் சென்னை அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர், “வர்தா புயலால் ஒன்றரை லட்சம் மரங்கள் வீழ்ந்தன. நல்ல நிலப்பரப்புக்கு 33 சதவிகிதம் பசுமை தேவை என்ற நிலையில், சென்னையில் 4.5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

எனவே, பசுமையான சென்னையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஓட்டம் நடத்தப்படுகிறது” என்று மாரத்தானின் நோக்கம் குறித்து விளக்கினார். மேலும் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட, மீனவர்கள், விவசாயிகளுக்கு இந்த மாரத்தானை சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, மாரத்தான் தீபங்கள் ஏற்றப்பட்டன. கனரா வங்கியின் சேர்மன் மனோகரன் கொடியசைத்து வைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ஆர்வமுடம் பங்கேற்று ஓடினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மதியம் ஓட்டம் நிறைவு பெற்றதும் இலக்கை அடைந்தவர்களுக்கு மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாரத்தானில் பங்கெடுத்தவர்களின் சார்பாக மரம் நடப்படும் என்றும் ரீ கிரீன் சென்னை அமைப்பினர் தெரிவித்தனர். மாரத்தான் காரணமாக ஏற்பட்ட குப்பைகளையும் அவர்கள் உடனுக்குடன் அகற்றி, சாலையைச் சுத்தப்படுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக