சனி, 9 டிசம்பர், 2017

திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி அறிவித்த இந்து பயங்கரவாதி கைது !

திருமா தலை கேட்டவர் கைது!மின்னம்பலம் :திருமாவளவன் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த இந்து முன்னேற்றக் கழக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற தலித் இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “ராமர் பிறந்த இடத்தில் அல்லது ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதியைக் கட்டினார் என்று இந்து அமைப்புகள் வாதிடுகிறார்கள். ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக 400 ஆண்டுகள் கழித்து வாதிடுகிறார்கள்.
தற்போது சிவன் கோயில்களும், பெருமாள் கோயில்களும் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பௌத்த விகாா்களாக இருந்தன. அந்தப் பௌத்த விகாா்களை இடித்துவிட்டுதான் சிவன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே ஒரு வாதத்திற்காகச் சொல்வதானால், அந்தக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு அவற்றின் மீது புத்த விகாா்களைக் கட்ட வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் திரித்துப் பரப்பப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகளும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், தான் இந்து மதத்திற்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.
எனினும், இந்து அமைப்புகள் திருமாவளவனைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். திருப்பூரில் இந்து முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவன தலைவர் கோபிநாத், “ திருமாவளவனின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசளிக்கப்படும்” என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசினார்.

அவரது கருத்துக்கு தி.க. தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். கோபிநாத்தைக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர் மீது போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கோபிநாத்தைக் காரமடையில் இன்று (டிசம்பர் 9) கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக