வெள்ளி, 1 டிசம்பர், 2017

மனநலம் பாதித்த இளம்பெண்கள் காணாமல் போகும் மர்மம்! கடத்தப்படுகிறார்களா?

நக்கீரன் :புதுக்கோட்டை நகருக்குள் மனநலம் பாதித்த இளம் பெண்கள், சிறுமிகள் வந்தால் சில நாட்களில் நகரில் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் அடுத்த ஊர்களுக்கு சென்றுவிடுகிறார்களா அல்லது கடத்தப்படுகிறார்களா என்ற வினா நகர மக்களிடம் எழுந்துள்ளது.இந்நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவராக பதவி ஏற்றுள்ள மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மனநலம் குறித்து அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
 ;அப்படி ஒரு நிகழ்ச்சியாக கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் உள்ள காவல் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சாலைகளில், சுற்றி வரும் மனநலம் பாதித்தவர்களை பிடித்து முறையாக வழக்கு பதிவு செய்து எங்களிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்து அவர்களுக்கும், அவர்களை ஒதுக்கிய குடும்பத்தினருக்கும் ஆலோசனைகள் வழங்கி சமூகத்தால் மதிக்கப்படும் மனிதராக அனுப்பி வைப்போம் என்று கூறப்பட்டது. 


அடுத்த சில நாட்களில் மழையூர் கிராமத்தில் சுற்றிய ராஜபாளையத்தை சேர்ந்த முத்துமாரி என்ற இளம் பெண்ணை மீட்ட மழையூர் போலிசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை அரசு பழைய முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு முத்துமாரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்காக அன்னவாசலில் மருத்துவர் ராதிகா கண்காணிப்பில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் அவரது உறவினர்களையும் கண்டுபிடித்து அவர்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. 

விரைவில் குணமடைந்து அவரது வீட்டிற்கு செல்லும் நிலையில் உள்ளார் முத்துமாரி.இந்த நிலையில் இன்று வெள்ளிக் கிழமை காலை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி 14 வயது மதிக்கத்தக்க சிறுமி கருப்பு உடையுடன் முன்னால் வந்த பேருந்துகளை மறித்து விளையாடிக் கொண்டே சென்றார். இந்த தகவல் உடனே வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த தகவல் அறிந்து அந்த பகுதிக்கு போலிசார் சென்று பார்த்த போது அந்த சிறுமியை காணவில்லை. நகர் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

நகரில் உள்ள சிலர்.. புதுக்கோட்டை நகருக்குள் மனநலம் பாதித்தவர்கள் வாரத்திற்கு பலர் வருகின்றனர். ஆண்களாக இருந்தால் அவர்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இளம் பெண்களாக இருந்தால் ஒரு நாள் இரு நாட்களுக்கு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். பல பெண்கள் இப்படி காணாமல் போய்விட்டார்கள். அந்த பெண்கள் அடுத்தடுத்த ஊர்களுக்கு செல்கிறார்களா அல்லது சமூகவிரோதிகளால் கடத்தப்படுகிறார்களா என்று தெரியவில்லை. 

இப்படியான இளம் பெண்களை கடத்தும் கும்பல் புதுக்கோட்டை நகரில் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றனர்.சமூகத்தின் மீது அக்கரை கொண்டவர்கள் இப்படி சாலைகளில், தெருக்களில் சுற்றி வரும் மனநலம் பாதித்தவர்களை அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ ஒப்படைத்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அந்த குடும்பத்துடன் சேரும் நல்ல வாய்ப்பு உள்ளது. அந்த நல்ல பணியை செய்த மன நிறைவும் உங்களுக்கு கிடைக்கும்.மேலும் புதுக்கோட்டை நகரில் மனநலம் பாதித்த இளம் பெண்கள் காணாமல் போகும் சம்பவம் குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டால் நல்லது.<">- இரா.பகத்சிங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக