திங்கள், 25 டிசம்பர், 2017

திருமாவளவன் : பாஜகவின் முட்டாள்தனத்தால் தினகரன் மீது ஊடக வெளிச்சம் பாய்ந்து இந்த வெற்றி ...

மின்னம்பலம் :மக்கள் மத்தியில் தினகரனின் மதிப்பீட்டைக் கூட்டியது மத்திய பாஜக அரசின் தவறான அரசியல் அணுகுமுறைதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகருக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றிபெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனன் தோல்வியடைந்தார். தேர்தலில் 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே கிடைத்தது.
இந்தச் சூழ்நிலையில் தினகரனின் வெற்றி குறித்து சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களின் கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார்.

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை ஒதுக்கிவிட்டு அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தது அதிமுகவினர் அல்ல, மாறாக அதனைச் செய்தது பாஜகதான்.
இரு அணியினரும் தனியாக இருந்தபோதும், ஒன்றிணைந்தபோதும் மத்திய பாஜக அரசின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று, தற்போது வரை அதனடிப்படையில் இணக்கமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு துணையாக அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டு தினகரன் ஊடக வெளிச்சம் காட்டப்பட்டார். அவரை இன்றைக்கு அனைவரும் கவனிக்கக்கூடிய ஒரு நபராக்கியது, பாஜகவின் தவறான அரசியல் அணுகுமுறைதான்.
முதல்வரும், அமைச்சர்களும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் தினகரனை ஆர்.கே.நகரில் நிற்கவைத்து அவரின் ஸ்டார் வேல்யூவைக் கூட்டினர். இரட்டை இலை சின்னம் வழக்கில் கைது செய்யப்பட்டு தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் ஊடக வெளிச்சத்துக்குள் வந்துவிட்டார். இதற்குக் காரணம் பாஜகவினர்தான்.
தற்போது நடந்துமுடிந்த இடைத் தேர்தலில் தினகரனுக்கு தொப்பி சின்னத்தை மறுத்து, வேறொரு சின்னத்தில் போட்டியிடும் நிலைக்குத் தள்ளினர். தினகரனை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த பாஜகவினர் எடுத்த முயற்சிகள்தான் அவரின் மதிப்பீட்டை உயர்த்தியது.
தினகரனின் வெற்றி ஆளும் அதிமுகவிற்கு கிடைத்த தோல்வி என்பதை விட, பாஜகவின் முயற்சிகளுக்குக் கிடைத்த தோல்வி என்று சொல்லலாம்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக