திங்கள், 25 டிசம்பர், 2017

கழிவு நீர் நச்சு வாயு உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில்

விஷவாயு தாக்கி உயிரிழப்பு: தமிழகம் முதலிடம்!
மின்னம்பலம் :கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய தொழிலார் நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கழிவு நீர்த் தொட்டி அடைப்பு, மழை நீர் வடிகால் போன்றவற்றில் ஏற்படும் அடைப்புகளைச் சுத்தம் செய்யத் துப்புரவுத் தொழிலாளர்களே அதிக அளவில், முறைகேடாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணியில் ஈடுபடும்போது பலர் உயிரிழக்கின்றனர். இதனைத் தவிர்த்து இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் கழிவு நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், “கழிவு நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி நாடு முழுவதும் 232 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதில் 144 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் 59 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 52 பேரும், பஞ்சாபில் 32 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வின்மையும் உரிய உபகரணங்கள் வழங்கப்படாததும்தான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக