திங்கள், 4 டிசம்பர், 2017

சிறுமி ஹாஸ்னித் கொலையாளி மகனை பாதுகாத்த முட்டாள் தந்தை ... தாயையும் கொன்றான்

dhaswant, தஷ்வந்த்
விகடன் : ‘தஷ்வந்த்’ என்ற பெயர் தமிழகத்தை இரண்டாவது முறை உலுக்கியிருக்கிறது. சிறுமி ஹாசினியைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தஷ்வந்த், தனது தாய் சரளாவைக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்த நகை, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார் என எழுந்திருக்கும் புகார் மூலம் அதிர்ந்திருக்கிறது தமிழகம். சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு மாங்காடு பகுதியில் இருந்து குன்றத்தூர் ஶ்ரீராம் நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர் தஷ்வந்தின் குடும்பத்தினர். ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தந்தை சேகர், தாய் சரளாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டுக்கு வந்ததுமுதல் தன் அம்மா சரளாவிடம், தஷ்வந்த் பணம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார். சில போதைப் பழக்கங்கள் இருந்ததால், பணம் கொடுப்பதற்கு மறுத்திருக்கிறார் சரளா. இந்நிலையில், தஷ்வந்தின் தந்தை சேகர் வீட்டில் இல்லாத நேரத்தில், இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் சரளா. அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் இருந்த தஷ்வந்தும் தலைமறைவாகிவிட்டார். இவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது காவல் துறை.  ,, இந்த கவர்ச்சியான முகத்திற்குள் ஒரு கொடுமான மிருகம் இருக்கிறதே ....

சிறுமி ஹாசினி கொலை:
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் ஆறு வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி மாதம், தான் வசித்து வந்த மாதா நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹாசினி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து ஹாசினியின் தந்தை பாபு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். பாபு வசித்துவந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற 24 வயது இளைஞரின்மீது சந்தேகம் வரவே போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். பின்னர், நெஞ்சை உறையவைக்கும் அந்தத் திடுக்கிடும் சம்பவம் வெளியேவந்தது. தஷ்வந்த், சிறுமி ஹாசினியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு, உடலை அனகாபுத்தூர் அருகே எரித்தது விசாரணையில் தெரியவந்தது. கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்கில் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் தொடர்பாகப் போலீஸ் தரப்பிலிருந்து உரிய விளக்கமளிக்காததால், நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனால் சிறையில் இருந்து வெளியேவந்த தஷ்வந்த் தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
தஷ்வந்துக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பெரும் எதிர்ப்பும் கிளம்பியது. சிறுமி ஹாசினியின் குடும்பத்தார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய ஹாசினியின் தந்தை பாபு, “சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தஷ்வந்த் போன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவது, சமூகத்தில் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். அவரைப் போன்றவர்கள் யாரையும் கொலைசெய்யத் தயங்க மாட்டார்கள் என்று சமீபத்தில் நான் பேட்டியளித்திருந்தேன். அதை மெய்ப்பிக்கும் வகையில், தஷ்வந்த் அவரது தாயையே கொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறார். இதனால், எனது குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இருக்கும்  இடம் இப்போது வெளியில் தெரிந்துவிட்டது. எங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் இனியும் தாமதிக்காமல் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து தஷ்வந்தைக் கைது செய்ய வேண்டும். அவருக்குத் தூக்குத் தண்டனையை நீதிமன்றம் அளிக்க வேண்டும்” என்றார்.
தஷ்வந்த், dhaswant
ஹாசினியின் கொலை வழக்கை விசாரித்துவரும் அம்பத்தூர் சரக டி.ஜி-யான சர்வேஷ் ராஜ்தான், சரளா கொலை வழக்கையும் விசாரித்து வருகிறார். அவரிடம் பேசியதில், “குற்றவாளி யார் என்பதை உறுதி செய்யவும், குற்றம் நடந்த இடத்திலிருந்து தலைமறைவாகி இருக்கும் தஷ்வந்தைத் தேடவும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சம் இரண்டு நாள்களில் இதுதொடர்பான விவரங்கள் தெரியவரும்” என்றார்.
தஷ்வந்த் தரப்புக்காக ஹாசினி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார் வெளிநாடு செல்ல இருப்பதால், வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விவாதங்கள் அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்கும் எனக் கூறப்பட்டது.
காலதாமதமானால், நீதி கிடைப்பதும் நீர்த்துப் போய்விடும் என்றார் ஹாசினியின் அப்பா. மற்றொருபுறம் தஷ்வந்தின் தந்தையோ, ஹாசினியின் தந்தைக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், 'எப்படியும் தன் மகனை விடுதலை செய்துவிடுவேன்' என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இப்படியான சூழலில்தான் தஷ்வந்தின் அம்மா சரளாவின் கொலையும் நிகழ்ந்துள்ளது. போலீஸாரிடம் தஷ்வந்த் சிக்கியதற்குப் பின்னர்தான் இந்தக் கொலை தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியே தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக