திங்கள், 4 டிசம்பர், 2017

கார்த்திகை கார் ஒளி விழா.. எப்படி இந்து பண்டிகையாகும் ? பண்டிகைகளை மீட்கும் சமூகநீதி ......

Meena Somu :  200கிமு -300கிபி வரை எழுதப்பட்ட அகநானூற்றில் கார்த்திகை தீபம் குறித்த குறிப்புகள் இருப்பதாகவும் தமிழர்களின் மிகப் பழமையான பண்டிகையாக கார்த்திகை திருநாள் குறிப்பிடப்படுகிறது.
கிபி 600க்கு பிறகு தான் வேதம், இந்துமதத் தொடர்பு ஆகியவை பல்லவர் காலத்தில் தமிகத்திற்குள் நுழைகின்றன. அப்படியானால் "கார்த்திகை கார் ஒளி விழா" எப்படி இந்து பண்டிகையாகும் ? தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பலவற்றை இந்துமதம் தன்வயமாக்கி ஒரு கற்பனைக்கட்டுக் கதையை சேர்த்து இருக்கிறது.
பண்டிகைகள் மக்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அவற்றை ஒரு வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டும் மதம் அபகரித்துக் கொண்டது என்பதால் அப்பண்டிகைகளை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்ற கேள்வியில் தோழமைகள் சிலரோடு விவாதித்து பண்டிகைகளை மீட்பதை சமூகநீதிக்கான வழிகளில் ஒன்றாக செய்து வருகிறோம்.
அந்த வகையில் அசோகர் விஜய தசமி, புத்த ஒளி விழா என இரண்டு விழாக்கள் கொண்டாடினோம். நேற்று நட்புகளுடன் கார் காலத்தை வரவேற்கும் கார் விளக்கு நாளான "கார்த்திகை ஒளி விழா" வை மாவிலை தோரணம், தென்னங்கீற்று ஓலை தோரணம் என அலங்கரித்து அகல் விளக்கு ஏற்றி பொறிக்கடலை இனிப்பு பகிர்ந்து தோழமைகளுடன் கொண்டாடினோம்.
இதில் முக்கியமாக ஆண் தோழமைகள் அகல்விளக்குகளை ஏற்ற பெண்கள் அதை ரசித்துக் கொண்டிருந்தோம்.
விழாக்களை இவ்வாறு கொண்டாடுவது ஏன் என்று உரையாடல் நடந்தது. இந்து மதம் நம் வாழ்வியலுடன் பண்பாடு என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. அந்த பண்பாட்டை மறுநிர்மாணம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதால் நாம் இந்த விழாக்களை கொண்டாடுகிறோம் என்ற கருத்தை பகிர்தோம்.
இந்து விழாக்களாக மாற்றப்பட்ட இவ்விழாக்களை இப்படி கொண்டாடுவதால் மீண்டும் கொஞ்ச நாட்களில் பார்ப்பனியம், பார்ப்பனிய விழாவாக உள் வாங்கி செரித்துவிடாதா ? இத்தனை நாள் நடந்ததே மீண்டும் நடக்காதா ? இப்படி இந்து மத விழாக்களை கொண்டாடுவதால் பரவலான இந்துமத பண்பாட்டில் கலந்து கரைந்து விட மாட்டோமா ? வேத மதத்தை எதிர்த்த புத்ததத்தையே விஷ்ணுவின் அவதாரமாக புத்தரை மாற்றிய பார்ப்பனியம் நாம் கட்டமைப்பதையும் உள்வாங்கி செரித்து விடாதா என்று தோழமைகள் அய்யனார், முத்தரசு, பார்த்திக்குமார் வைத்த கேள்விகளை விவாதித்தோம்.
இக்கேள்விகளுக்கான என் விளக்கம்...
இந்து விழாக்கள் அல்ல என்று நமக்கு நன்றாக தெரியும் போது அவற்றை இந்து விழாவாக ஏன் அங்கீகரிக்க வேண்டும் என்பதே. வரலாறே நமக்கு இந்து பார்ப்பனிய வருணாசிரம( ஜாதி அமைப்பு) குலையாமல் இருக்க எழுதப்பட்ட வரலாறாக இருந்ததால் புத்தர் குறித்த புத்தம் குறித்த அபத்தமான கட்டுக்கதைகளை வரலாற்று பாடத்தில் படிக்கிறோம்.
நதி நீர் பிரச்சனையில் முரண்பட்ட சித்தார்த்தன் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதோ தன் மனைவியின் சம்மதத்தோடு வெளியேறினார் என்பதோ நமக்கு சொல்லப்படவில்லை. ஆனால் ஒரு கட்டுக்கதை 3 சம்பவங்களை பார்த்து புத்தர் மன உளைச்சளுக்கு ஆளானதாக எழுதி... மனித துன்பத்திற்கு காரணம் தேட இரவில் தன் மனைவி மகனை பிரிந்ததான கதையை வரலாற்றாக்கியது...ஏன் ? யோசிக்க வேண்டும். இந்திய வரலாற்றில் முடி அரசுகளோடு மக்களாட்சி அரசுகளான ஜனப்பாடா என்ற அரசுகளும் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்ததும் வரலாறு. ஆனால் அவை கற்பிக்கப்படுகிறதா ?
இந்த இருட்டடிப்புகள் ஏன் நிகழ்கின்றன. நமக்கு மூதாதை கதை என இராமாயணம், மகாபாரதமும் புகட்டப்படும் அளவு உண்மையான இந்திய வரலாறான "இந்துமத புத்தமத மோதல்" வரலாறு தெரியுமா ? ஏன் தெரியவில்லை. ஏனேனில் மக்கள் வாழ்வியல் வரலாறு தெரியக்கூடாது என்பது இந்த நாட்டின் பார்ப்பன சதி.
கல்வி, வரலாற்று, தொல்லியல் என எல்லாத்துறையிலும் கோலோச்சிய பார்ப்பன மனநிலை தனக்கு சாதகமான வரலாற்றை மிக மிக தெளிவாக கட்டமைத்து போயிருக்கிறார்கள். இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு கீழடியின் ஆய்வில் இருக்கும் பிரச்சனைகள் சாட்சி.
ஆக "இந்து பண்பாடு" என்பது நாள்தோறும் கட்டமைக்கப்படுகிறது. நாமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான மாற்று அவற்றை புறம் தள்ளுவதள்ள, உண்மையை உலகுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வருவது. அதற்காக தான் இந்த விழாக்களை கொண்ட்டாட வேண்டும்.
அடுத்த தலைமுறை, விழாக்களை மக்களின் வாழ்வியல் கதைகளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறை, கார்த்திகேயன், சூரபத்ரன், சிவனின் அடி-முடி கட்டுக்கதைகளை புறம் தள்ள வேண்டும். கார்காலத்தில் பௌர்ணமியில் ஒளி விழா கொண்டாடக் கூடாதா என்ன ? அதற்கு ஒரு இதிகாச கட்டுக்கதை எதற்கு ? நம் விழாக்கள் அறுவடையை, விதை விதைப்பை, தண்ணீர் வரவை கொண்டாடும் விழாக்களாக தானே இருந்தது? அதை அந்த பண்பாட்டை வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்.
ஒரு சிறு குழுவாக தான் இந்த முயற்சி தொடங்குகிறது. ஆனால் இது ஒரு விதை... இந்த விதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெளிவை விதைக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக